வாழ்வா..? சாவா..?

வெண்முகில்தனை விலக்கிக்கொண்டே மென்தென்றலினூடே இன்பயணம் தொடரும் பருந்தொன்று
வண்டல்மண்ணில் வாய்க்கால் நீரேற வலைநிரம்பி வாழ்க்கைக்குப் போராடும் எலியினை எங்கோ கவ்விச்செல்ல...

எதுகைமாறி ஏட்டில்எழுதிய எதார்த்தப் பிழைகளை நான் எங்குதேடுவது..?

முகில்களில் தவளும் முற்றிய பருந்திற்கு விருந்து கிடைத்ததாக எழுதிவிட்டு
முற்றுப்புள்ளி இட்டதனை முன்னுரையிலேயே முடித்துவிடவா..?

செல்லும் வழியெங்கும் மெல்லச்சாகும் எலியின் செங்குருதி சொட்டச்சொட்ட
கொள்ளும் பருந்திற்கு நான்மட்டுமென்ன கொலைகார பட்டமா கொடுக்கமுடியும்..?

நகரப் பேருந்தினில் நகரவழியின்றி நரகவேதனையில் நான்செல்லும்போது
நுகரமறுக்கும் நாசித்துளைகளில் துருவேறிய தகர நாற்றமே எனக்கு அகர வரிசையாய்...

உடைந்த படிக்கட்டில் எனதுயிர் ஊஞ்சலாடிக்கொண்டே பயணிக்க
கடைசிப் பேருந்துஎனை கடைவீதி நிறுத்தம்வரை கரைசேர்த்திடுமா..?

எலிக்கும் எனக்கும் எத்தனை வித்தியாசங்கள்..?

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (7-Jul-17, 7:50 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 148

மேலே