இருளின் வெளிச்சம்
இருளின் வெளிச்சம்
நள்ளிரவின்
வாசலை எட்ட
மூச்சிறைக்க
ஓடிக் கொண்டிருந்தது
காலக் கடிகாரம் . . .
நாளைய பொழுதை
நலமாய் ஈன்றெடுக்க
காலமகளின்
முணுங்கல்கள்
அலை எழுப்பிய
ஓசைதனில்
அண்டவில்லை
யார் செவியும் . . .
முந்தைய புயல்தன்னில்
ஒற்றைக் குடிசையையும்
கீற்றாய் பிரித்துமேய்ந்த
அலையின் லீலைதனில்
ஆடித்தான் போனான் அவன் . . .
மணல் மீது மல்லாந்து
கிடந்தவனின் துணையாக
வானத்து விண்மீன்கள்
கண்கொட்ட விழித்திருக்க
சொரியும் மழைதன்னில்
சோர்வுற்ற சிறகுகளை
கூட்டினுள்
குளிர் காயவைக்கும்
கோடி மிஞ்சும்
பறவைகளுள்
மேகத்தைக் கிழிதெறிந்து
வானெட்டும்
கழுகினைப்போல்
தெளிந்தவனாய்
எழுந்த அவன்
இருள்காட்டிய
வெளிச்சத்தில்
விரைகின்றான்
விடியல் நோக்கி . . . .
சு.உமாதேவி