காலம் கடந்த காதல்

நாணம் தடுத்ததினால்
ஆசையை மறைத்து
குடும்பமான போது - ஏன்
கவலையை வளர்க்கின்றாய்?

நீயும் நானும் பழகும் போது
அலையடித்த வேளையில்
தலைமுழுகாது
கரையில் நின்று - ஏன்
ஏக்க மூச்சிவிடுகின்றாய்..?

ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் வரும்.
பெண்களுக்கு அதுவும் அதிகம் வரும்.
சொல்லிக்கொள்ள
உதடுகள் துடிக்கும்.
சொல்லாத உள்ளம்
தன்னைத்தான் வருத்தும்.

இதுவரை யாரும் அறியாத
பெண்ணின் மனதை
எப்படி நான் அறிந்து கொள்வது?
இப்போ சொல்லும் காதலை
எப்படி நான் ஏற்பது...?

மூடிமூடி வைப்பதினால்
நிலவும் இருளாது,
புதைத்து வைத்த காதலின்
முளையும் கருகாது....

பனித்துளி கண்டு
மலரும் மலராய்
அன்றே நீ மலர்ந்திருந்தால்
இன்று மகிழ்ந்திருப்பாய்,
உயிரை உருக்கி
கண்ணீரோடு கலக்காது
காவியம் படைத்திருப்பாய்.

உதடுகள் துடிக்கும் போதே
வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும்.
கண்கள் பேசையிலே
இதயத்தையும் பகிரவேண்டும்.

ஈரமான விதையை மூடிவைத்தால்
வேர்கள் நீண்டு வளராதா..?
வேதனையோடு வாழ்ந்து வந்தால்
சோகம் சேர்ந்து நீளாதா..?

பொல்லில் போகும் காலத்தில்
தள்ளி நின்று சொல்லுகின்றாய்
அள்ளிக் கொள்ள முடியாது
அன்னார்ந்து நிற்கின்றேன்.

இருவரும் இணைந்திருப்போம்.
அன்றே நீ சொல்லியிருந்தால்,
இன்ப உலகில்
இன்றும் மிதந்திருப்போம்.

பெண்கள் காதலைச் சொல்வதினால்
கற்பு பறி போவதில்லை,
கண்ணீர் விட்டு அழுவதால்
மீண்டும் காதல் மலர்வதில்லை.

அடுத்த ஜென்மமாவது
காதலை என்னிடம் சொல்லு
உன் வாழ்க்கையை நீயும் வெல்லு.

எழுதியவர் : கமல்ராஜ் (19-Jul-11, 8:45 pm)
சேர்த்தது : கமல்ராஜ்
பார்வை : 426

மேலே