என் அன்பு மகன்
என் அன்பு மகன்
தளிர்நடையும் நடக்கின்றாய் மண்மீதில்
தந்தைக்கோர் தங்கமென உருவெடுத்தாய் !
வெளிர்மஞ்சள் கதிரோனும் நிறம்கொடுக்க
வெய்யோனின் சீற்றமுமே மாறிடுமே !
வெளியுலகம் அறியாத மகனேநீ
வெந்தழலில் நடக்காதே சுட்டுவிடும் !
உளிகொண்டே செதுக்கியதோர் சிற்பம்தான்
உணர்வாயோ கண்மணியே நீயுந்தான் !
மலர்ப்பாதம் நோகுமடா கேட்பாயே
மாலையிலே நடைபயின்று விளையாடு !
பலர்நோக்கக் கண்படுமே உன்மீதில்
பாலகனே அறியாயோ தந்தையின்சொல் !
உலர்ந்துவிடும் உன்நாக்கும் தாகத்தால்
------ உரிமையிலே சொல்லுகின்றேன் வந்துவிடு !
மலர்ந்தமுகம் வாடிடுமே வெயில்தாக்க
------ மலர்ச்சரமே வாராயோ என்னருகில் !
கடலலையின் சீற்றத்தால் பயந்திடுவாய் !
கல்வியுமே கற்கவேண்டும் கண்ணாவா !
கடல்கரையின் மீதுள்ள மோகத்தால்
கால்நோக நடக்கின்றாய் என்மகனே !
படகுகளும் ரசிப்பதற்கே இல்லையடா !
பார்த்திடலாம் நாளையுமே இன்றுவாடா !
உடல்முழுக்க வியர்த்திடுமே என்செய்வேன்
உயிராக அழைக்கின்றேன் ஓடிவாடா !
நடைபழகும் அன்புமகன் சோர்ந்திடாது
நகர்வாயே பகலவனே மேற்குநோக்கி !
உடையெல்லாம் மண்ணாகி விழும்போதும்
உடையாது உதிராது நடக்கின்றாய் !
தடையேதும் இல்லையென்றே உன்போக்கில்
தளிர்நடையும் அழகாக பயில்கின்றாய் !
மடைதிறந்த வெள்ளம்போல் உனதுள்ளம்
மாசற்றே காலடியும் வைக்குமிங்கே !!!!
என்னுடைய அன்புமகன் வளர்ந்தாலே
எத்திக்கும் புகழ்பரவும் உலகிலன்றோ !
அன்பான மகனாலே நானுந்தான்
அவனியிலே மதிப்பென்றும் பெறுவேனே !
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன் ( நி . மு . 323 )