அழகு
என்னைப் பெற்ற அன்னையவள் அழகு - எனை
கண்ணில் காத்த தந்தை தோள் அழகு.
பள்ளி சொன்ன பாரதிப்பாடல் அழகு,
புரியாமல் திரிந்த சின்னக்காதல் அழகு.
மழையில் உதவும் கல்லூரி நோட்டு அழகு - என்னை
கிறங்கவைத்த அவள் இதழ் பாட்டு அழகு.
விட்டு விட்டெழுதும் எழுதுகோல் அழகு - என்றும்
என்னை விட்டகலா நட்புக்கூட்டம் அழகு.
அவளழகு அவள் அழகழகு, அவையாவும்
ஆளப்போகும் நான் அவளினும் அழகு.
நாங்கள் கொண்ட காதல் அழகு - அக்காதலில்
பிறந்த எங்கள் சின்னச்செல்வம் அழகு.
பிறந்த குழந்தை தொப்புள்கொடி அழகு - அப்
பிள்ளை சுமக்கும் அன்னைமடி அழகு.
கிள்ளை பேசுமென் பிள்ளை பல் அழகு,
உறங்கியுரங்கா மின்னும் கண் அழகு.
மரம் கொண்ட கனி அழகு - அப்பெரும்
மரத்தையே கொண்ட சிறுவிதை அழகு.
புறம் காக்கா பல உறவினும் - என்
அகம் காத்த தோழர் படை அழகு.
கொக்கு பெற்ற கூர் மூக்கு அழகு - என்
நாய் கொண்ட நீள் நாக்கும் அழகழகு.
சின்னக் கிளியழகு வண்ணக் குயிலழகு.
சிறகொடிந்தும் பறக்கையில் விட்டில் பூச்சியும் அழகு.
மழையினில் நனையும் மாலை நேரம் அழகு,
மனதினை வருடும் சோலைத் தென்றல் அழகு.
காலை மாலை பாராமல், காசு பணம் கேளாமல்,
நம் பாவம் போக்கும் கடவுள் என்றும் பேரழகு.!!
ஆயிரம் கொண்ட ஆணவச் செல்வம் காட்டிலும்
சாலையில் தூங்கும் ஏழ்மை உறக்கம் அழகு.
கோடி மக்கள் நிறையப் பெற்றாலும்,
இந்திய நாட்டுப் பெருமையும் நல்லழகு.
இத்தனை யாவும் காணல் அழகு,
கண்டதை அழகாய்ப் பாடல் அழகு.
துன்பம் என்றும் காணாமல் - எங்கும்
இன்பமாய் வாழ்தல் இனியழகு.
தீனதயாளன் ஸ்ரீனிவாசன்