பெருந்தலைவர் காமராசர்

விருதுநகர் மண்பிறந்த
குமாரசாமி சிவகாமியின் புதல்வன்...
கருணை மனங்கொண்டு
ஆட்சிசெய்த தமிழகத்தின் முதல்வன்......


பாரதியின் கவியில்
கார்முகில் வேந்தன் ஆனான்
கண்ணம்மா...
பரம்பரை தெய்வத்தால்
கர்மவீரன் நீயோ?... ஆனாய்
காமாட்சி......


பாசத்தில் தாயவள்
கொற்றவனாய் உனை அழைத்திட
காமராசாய்
மாற்றம் கண்டாய்...
தேசத்தின் தூயவனாய்
மற்றவரின் துயர் அழித்திட
பாமரனின் ராசாவாய்
தோற்றம் கொண்டாய்......


தந்தை இறந்ததும்
கல்வியும் பாதியிலே நின்றிட
சொந்த வியாபாரம் பார்த்து
விடுகதை போலானாய்...
சிந்தை பிறந்ததும்
சுதந்திரத் தாகம் எழுந்திட
பதினாறு அகவையிலே
விடுதலையின் வேரானாய்......


கல்வியில் யாவரும் உயர்ந்திட
மதிய உணவளித்து
புதுப்பள்ளிக் கூடங்களை அதிகரித்தாய்.
அறிவின் கண்கள் திறந்து
ஏழைகளின் வாழ்வில்
விடிவெள்ளியாய் நீ முளைத்தாய்......


கரையுடைக்கும்
ஆற்றின் வெள்ளத்தையும் கடந்து
கடமையை நிலைநாட்டினாய்...
பெரும்பதவி
வந்தாலும் நீ எளிமையாய்
வாழ்ந்தும் காட்டினாய்......


அணைகள் கட்டி
மழை நீரைத் தேக்கினாய்...
கேள்விக் கணைகள் கொட்டி
பலனற்ற செயலை நீக்கினாய்...
தொழில் புரட்சியில்
உன் காலடி வைத்தாய்
எழிலாய் அதனையும் முடித்தாய்......


மொழி கொண்டு எழுதாது
வாழ்வின் வழி நடந்து
தமிழக அரசியிலுக்கு
நீயெழுதினாய்
தமிழ் இலக்கணம்...
எந்நாளும் கொண்டதில்லை நீ
தலைக்கனம்......


வாசிக்க வேண்டிய
நீ வாழ்ந்த பக்கங்கள்
விழியிருந்தும் குருடாய்
மனமிருந்தும் மரமாய்
இங்குத் திரியும் பலரும்
யாசித்துப் பெற வேண்டிய பக்கங்கள்......


பணத்திலும் குணத்திலும்
நீ வறுமையிலே இருந்தாய்...
தீயவழி பணமோ?...
உன்னைச் சேர்ந்ததில்லை...
தீயவழி நடக்கும் குணமோ?...
உன்னைச் சார்ந்ததில்லை......


நாட்டின் வளர்ச்சிக்கே
உந்தன் எண்ணத்தை செலவிட்டாய்...
வீட்டின் வளர்ச்சியில்
நீயென்றும்
பால் வண்ணமாய் உலவிட்டாய்......


கருப்புத் தங்கமே
நரைத்த இளம் சிங்கமே
படிப்பை நிறுத்தியும் மேதை ஆனாய்
பாரதம் ஆள்வோர்க்கு
புதுப் பாதை ஆனாய்......


தரமாய் வழிநடத்த
வரமாய் நீ கிடைத்தாய்...
நகமாய் வளர்ந்த
பலர் பிணியை நீயறுத்தாய்...
பசும் மரமாய் நிழற்கொடுத்தாய்......


இளமைக்கு இடமளித்து
பதவி துறந்த புதியவன்...
விதியோ?... சதியோ?...
எது நேர்ந்தாலும்
மதியால் வெல்லும் வலியவன்...
செங்கதிரின் ஒளியை
செயல்களால் நீயெங்கும் தருபவன்......


காலத்தின் விளிம்பில் நின்று
ஞாலத்தில் இன்னுயிர் நீத்தாய்...
கள்வடியும் பனிமலராய்
எங்கள் நெஞ்சினில் பூத்தாய்...
பரமனின் அருளாளே
பாரினில் வந்ததே உன் நிழலே...
சுடர்விடும் நல்லகத்தாலே
நிலைத்தாய் நீயிந்த சகத்திலே......

எழுதியவர் : இதயம் விஜய் (15-Jul-17, 9:06 am)
பார்வை : 2269

மேலே