ஆனியில் பூத்தனனே

கருவறை வாசம் கடந்து குகனுன்
அருளால் பிறந்தான் அழகாய் ! - பெருமிதம்
கொண்டேன், மகனே குழந்தையாய் வந்தாற்போல்
எண்ணி மகிழ்வுற்றேன் யான் .

யான்பெற்ற பேறாய் இதயம் சிலிர்க்கின்றேன்
மேன்மைமிகு செங்கோட்டு வேலவனே! - வான்மழையாய்
நெஞ்சம் குளிர்வித்தாய் நிம்மதி பெற்றேனே
பஞ்சு விரல்தொட்டுப் பார்த்து .

பார்த்த முகத்தில் பரிதியொளி மின்னிட
கூர்வேல் குமரனெனக் கொஞ்சினேன் ! - தீர்ந்ததென்
துன்பமென்(று) ஆடினேன்; தூயவனே மால்மருகா
என்றென்றும் காப்பாய் இனிது .

இனிதே தொடரட்டும் ஈங்கிவன் வாழ்வும்
நனிசிறக்கச் செய்திடுவாய் நாளும் ! - கனிமொழி
பெற்ற மகவைப் பெயரனை முப்போதும்
சற்றும் குறையின்றித் தாங்கு .

தாங்கிடும் கையில் தவழும் குழவியை
வாங்கி யணைத்திட்டேன் மார்புடன் - பாங்காய்ச்
சிரித்ததும் சின்னவிதழ் செக்கச் சிவந்து
விரிந்த(து) அழகின் வியப்பு .

வியந்துதான் போனேன் விழிகளைக் கண்டு
துயரையும் மாற்றிடும் தோற்றம் - தயைநிறை
பார்வையி லுள்ளம் பனிபோ லுருகினேன்
சோர்வை யகற்றும் சுகம் .

சுகமான தாலாட்டில் சொக்கிடும் கண்கள்
முகவெழில் கூட்டும் முறுவல் - மகவின்
வரவில் மகிழ்ச்சி மலர்ந்திடும் வீட்டில்
வரமாய் நினைக்கும் மனம் .

மனத்திற் கிதந்தரும் மௌனமாய்ப் பேசும்
கனவில் சிரிக்கும் களிப்புடன் - குன்றமர்
வேலவனே நீதான் விளையாட்டு காட்டினையோ
சூலதாரி மைந்தனே சொல் .

சொல்லி யழுதேன் சுமைகள் கரைந்திட
முல்லைபோல் வந்தாய் முருகேசா ! - பொல்லாங்கு
போக்கிடு ! ஈரெட்டு பேறும் அளித்தவனுள்
நீக்கமற என்றும் நிறை .

நிறைமனத்தால் வேண்டுகிறேன் நீளாயுள் தந்து
குறைவிலாச் செல்வம் கொடுப்பாய் - மறையோதும்
ஞானியர் வாழ்த்தில் நலம்பெறட்டும் என்பெயரன்
ஆனியில் பூத்தனன் ஆம் .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-Jul-17, 1:08 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 425

மேலே