யாவுமானாய்

விரியும் உன் கண்கள்
பேசாமல் பேசும் நட்சத்திரங்கள்

தளரா உன் நம்பிக்கை
விழாத நீல வானம்

மூடாத உன் வாய்
வீசுவதை எப்போதுமே நிறுத்தாத காற்று

ஓயாத உன் சிரிப்புகள்
கடல் அலைகளின் பிம்பங்கள்

நிற்காத உன் கேள்விகள்
முடிவில்லா ரயில் தண்டவாளங்கள்

அடம்பிடிக்கும் உன் அழுகை
அருவியின் நீரோட்ட சத்தம்

பணியாத உன் சிணுங்கல்கள்
பாத கொலுசைகளின் மணியோசையின் அழகிலும் alagu

எச்சிலூறிய உன் முத்தம்
உச்சி மலையின் அழகிலும் அழகு

தத்தி தத்தி நடை பழகும் அழகு
சுற்றி சுற்றியாடும் இராட்டினம்

தப்பு தப்பாகவே பேசும் மழலை மொழி
திகட்டாத இனிப்பு துளிகள்

கதையே இல்லாமல் நீ கதை பேசும் அழகு
வண்ணமில்லா வெண்மேகத்தின் ஓட்டம்

தப்பு சரி என்னெவன தெரியாத உன் குழந்தைத்தனம்
தப்பில்லா இறைவனின் அமைதியின் அழகு

சலிப்பே இல்லாமல் தொடரும் உன் சுட்டித்தனங்கள்
முடிவே இல்லாமல் நீளும் கன்னித்தீவு சகாப்தங்கள்

ஆட்டம் அடங்கி சரிந்து நீ துயில் கொள்ள தொடங்கும் உன் கண்கள்
காட்டம் குறைந்து மெல்ல மறையும் அந்திவானின் சிகப்பு

ஆழ்ந்து நிம்மதியாய் உறங்கும் உன் குட்டி முகம்
ஜன்னல் தாண்டி வீட்டுக்குள் வந்த நிதர்சன நிலா

நிலவை ரசிக்க மறந்து
உன்னை ரசித்தே
தொடருது என் இரவு பொழுதுகள்

கதிரவனை பார்க்க மறந்து
கண்ணனின் கண்களை பார்த்தே
தொடங்குது என் காலைபொழுதுகள்

என் காலையும் மாலையுமாய்
என் வானமும் பூமியாய்
என் யாவுமானாய்
என் மகனாய்

யாழினி வளன்.....

எழுதியவர் : யாழினி valan (27-Jul-17, 3:47 am)
பார்வை : 259

மேலே