அன்பு நண்பனுக்கொரு கடிதம்
மழலையாய் கவலையற்றிருந்த அந்த நாட்களைக் கனவிலென்றும் காண்கின்றேன் திரும்பிவருமா?
புன்னகை ததும்பிடும் நண்பனுடன் படித்து புன்னகை மாறாத மனத்துடன் இருந்த அந்த நாட்கள் திரும்பிவருமா?
சொல்வாயென் நெஞ்சே...
கடந்த கால நினைவுகள் யாவும் மனதில் அசைபோட அதிலொரு ஏக்கமுடன் அன்றிருந்த மகிழ்ச்சி இன்றெங்கே என்று தேடிப்பார்க்கிறேன்...
வெற்றி, தோல்வி பற்றி கவலையற்று தோல்வி நேர்ந்த போதிலும் புன்னகை மாறாத இதழ்களுடன் எதிர்கொள்ளத் துணையாய் வந்த நண்பனை என்றும் மறவேன்...
ஆயிரம் தொல்லைகளாய் நானிருந்த போதும், படிப்பதற்கு உறுதுணையாய் விளங்கிய நண்பன்...
அந்த நாள் நினைவுகள் நெஞ்சிலே நண்பனே நண்பனே..
என்னுயிர் நண்பனே...
உயிருள்ளவரையும் உனக்கீடானதொரு நண்பனை நான் பெறுவேனோ?
நல்லதொரு வீணையின் இசையாய் நீ பேசிய வார்த்தைகள் யாவும் என் காதில் இன்னும் ஒலிக்கிறது நண்பா...
எனது வாழ்வில் நன்றிக்குரிய நண்பர்களில் நீயுமொருவன்...
வருடங்கள் ஏழு உருண்டோடினாலும் உன்னுடன் பழகிய நாட்கள் நேற்று தான் நடந்தது போல் உள்ளதே...
மீண்டும் அந்த நாட்களெல்லாம் மீண்டெழாதென்று நினைக்கும் போது என்னுள் மௌனமாய் அழுகிறேன்...