விடை கொடு
உன் அருகாமையில்
பாதுகாப்பை உணர்வது
இன்றே
இறுதி நாள்.
மனம் என்னை
நினைவு கூறச் சொல்கிறது
என் மீதான
உன் காதலை.
என் நினைவுகளுக்குள்
உன்னைக் கொணர
நீ செய்த குறும்புத்தனங்களையும்
பின் தொடர்ந்ததையும்
மனம் காட்சிப்படுத்துகிறது.
உன் மீதான எண்ணத்தை
என்னுள் ஏற்படுத்தி
இந்தப் பெண்ணுள்
காதலை வளரச் செய்வாய்.
காதல் மலர்ந்த பிறகு
உன் முதல் பார்வை
முதல் தொடு உணர்வு
முதல் பரிசு
முதல் நெடுந்தூர பயணம்
என் ஆணின் வாசம்
முதல் முத்தம் என
அனைத்தும்
தித்திப்பாய் நித்தமும்.
உன் தோள்களில் சாய்ந்து
அனைத்தும் மறந்த
நாட்களை நினைக்கிறேன்
அது உன் தோளின்
மகிமை.
பார்வைகள்
இரண்டற கலந்து
மௌனங்களில்
பொழுதுகள் நகர்கின்றன.
ஆரத்தழுவி
அழுத்தமான முத்தத்தைக்
கொடுத்து
எனக்கு விடை கொடு
இனி உன் வாழ்வில்
நான் இல்லை என்பதை
உறுதி செய்து.
நம் புரிதலை
அறிந்திடாத நம்
சொந்தங்களுக்கு
நாம் இணைந்து
புரிய வைப்பதை விட
பிரிந்து இக்காதலை
புனிதமாக்க
விடை கொடு.
Parithi kamaraj