ஸ்ருதி பேதம் என்றால் என்ன

நேற்று (31.07.2017) மதுரை ஃபார்ச்சூன் பாண்டியன் ஹோட்டலில் ’ராகப்ரியா’வில் நடைபெற்ற திருமதி.மஹதியின் கச்சேரியில் பெஹாக் ராக வர்ணம் தொடங்கி, சோபில்லு - ஜகன்மோஹினி, எந்த முத்தோ - பிந்துமாலினி, மரிவேரே - ஆனந்த பைரவி - ஷ்யாமா சாஸ்திரி, எப்படித்தான் என் உள்ளம் - ஊத்துக்காடு - நீலாம்பரி பாடலுக்குப் பின்,

திருமதி.மஹதி ஸ்வர பேதம் செய்து காட்டினார். ’கரகரப்ரியா’ விலிருந்து ’சிந்துபைரவி’ சென்று திரும்பியதாக அவரே சொன்னார்.

கரகரப்ரியா’வில் தியாகராஜரின் ‘பக்கல நிலபடி கொலிசே’ பாடலைப் பாடி, தனி ஆவர்த்தனத்தின் பின் பாடலை நிறைவு செய்தார்.

நான் சிறு வயதில் 1958 ல் இருந்து மதுரை மேல மாசி வீதி ஐயப்ப ஸ்வாமி கோயிலிலும், அரசமரம் பிள்ளையார் கோயில் மற்றும் வடக்கு சித்திரை வீதி ராஜராஜேஸ்வரி கோயிலிலும் விழாக் காலங்களில் இசைக் கச்சேரிகள் கேட்டும், ரசித்தும் வருகிறேன். அதிகமாக வித்வான் மதுரை சோமு அவர்களின் கச்சேரியைப் பல முறை கேட்டதுண்டு.

வித்வான் மதுரை சோமு பாடும் பொழுது ஒரு பாடலில் ஸ்ருதி பேதம் (அல்லது) கிரஹ பேதம் செய்து பாடுவார் என்பார்கள். எனக்கு அதைக் கண்டு கொள்ளவும் புரிந்து கொள்ளவும் தெரியாது. இருந்தாலும் அது என்ன என்று அறிய முற்பட்ட போது தெரிந்த செய்திகள் சிலவற்றை இங்கே எழுதுகிறேன்.

ஸ்வரங்கள் பற்றிய விபரஙகளுக்குள் செல்லவில்லை. மேள கர்த்தா ராகங்கள் 72, சம்பூர்ண – ஷாடவ – ஔடவ ஸ்வரங்களைக் கொண்ட (சுத்த – வக்ர உள்பட அதாவது ஸ்வராந்தகம் – ஸ்தாயிமார்க்கம் நீங்கலாக) ஜன்ய ராகங்கள் இவற்றைக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ள ப்ரஸ்தாரங்களின் மொத்த எண்ணிக்கை: 1,71,396 ராகங்கள். இவற்றைக் கொண்டு மேலும் செய்யக்கூடிய பேதங்களினால் உண்டாகும் ராகங்களின் எண்ணிக்கை 72,00,012 (எழுபத்திரண்டு லட்சத்துப் பன்னிரண்டு).

ஒவ்வொரு ராகத்திற்கும் ஒவ்வொரு ஸ்வரம், ஒரு தனி கணப்பிரமாணம் பெறுகிறது என்பது வெளிப்படை. (ஆதாரம்:சங்கீத சந்திரிகை) (04.03.1979 ஆனந்தவிகடன்)

மேளகர்த்தா ராகங்கள் தாய் ராகங்கள் எனப்படும். ஒரு தாய் ராகத்தின் ஸ்ருதி பேதத்திலிருந்து பிறந்தவையே பல ராகங்கள் என்று தெரிய வருகிறது. அவைகளே ஜன்ய ராகங்களாகும்.

சங்கீத கலாநிதி ஜி.என்.பி (கூடலூர் நாராயணசாமி பாலசுப்பிரமணியம், 06.01.1910 - 65) இம்முறையைப் பிரயோகித்த போது பலத்த எதிர்ப்பு கிளம்பியது. முத்தையா பாகவதர் தலைமையில் கூடிய அறிஞர் குழு, ஜி.என்.பி செயலில் நியாயம் இருப்பதாக முடிவு கூறியது. ஓர் ராகத்தில் ஸ்ருதி பேதம் செய்யும்பொழுது அதுவரை உருவாக்கிய ’பாவம்’ கெடாமல் இருப்பது அவசியம் என்றும் அபிப்பிராயப்பட்டது.

உதாரணம்: தோடி ராகத்தை எடுத்துக் கொண்டால், ஸ்வரங்களை மாற்றும் போது கல்யாணி, ஹரி காம்போதி, நடபைரவி, சங்கராபரணம், கரஹரப்ரியா போலவும் பாடமுடியும் எனத் தெரிகிறது.

மற்றொரு உதாரணம்: வசந்தா ராகத்தை சுருதி பேதம் செய்யும்போது ரமணி என்னும் ராகம் வருகிறதாம். உதாரணம் ’அந்தி மழை பொழிகிறது’ எனும் பாடல்.

கிடார் வாத்ய இசைக் கலைஞர் பிரசன்னா, கரகரபிரியா வாசித்தபடி நிஷாதத்தில் கிரகபேதம் செய்து, சங்கராபரணம் வந்து விரிவாக வாசித்து, கவனமாக மீண்டும் கரகரபிரியா சென்று விடுவாராம்.


கல்யாணராமன் திரைப்படத்தில் எஸ்.பி.ஷைலஜா பாடும் மோகன ராகத்தில் அமைந்த ’மலர்களில் ஆடும் இளமை’ என்ற பாடலில் இளையராஜா ஸ்ருதி பேதம் செய்து உள்ளாராம். ஆகவே சிலருக்கு இப் பாடல் சுத்த சாவேரி ராகம் போல் தொனிக்கும் எனப்படுகிறது.

ஸ்ருதிபேதமும் அபஸ்வரமும் ஒன்றில்லை என்றும், இரண்டும் வெவ்வேறு என்றும் ஈரோடு நாகராஜ் என்பவர் விளக்கம் தருகிறார். எதிலும் சேராதிருத்தல் அபஸ்வரம். இமைப்பொழுதும் சோராத சங்கீத நுணுக்கம் ஸ்ருதி பேதம்.

சாதாரணமாக ராகம் பாடப்படுவது குறிப்பிட்ட தடத்தில் கற்றுக் கொடுத்த முறைப்படியும், சம்பிரதாயமாகவும் சமர்த்தாக வண்டி ஓட்டுவது போலாகும்.

ராகம் பாடும் முறைகளில் ஒவ்வொரு ஸ்வரத்திலும் நின்று அங்கிருந்து மேலும் கீழும் ஊஞ்சல் ஆடி தாலாட்டிக் கொண்டாடி விவரமாகப் பாடப்படும்.

அப்படி எங்கேனும் நிற்கையில், சில விநாடிகள் அல்லது இரண்டு நிமிடங்களுக்குள் ஒரு ஸ்வரத்திலிருந்து - ஸ to ஸ்ஸா என்பதை, ரி யிலிருந்து ரி, கா-விலிருந்து கா என்று பாடினால் - வேறு ஒரு ராகம் கேட்கும்.

இப்படிப் பாடும் பொழுதும், தம்புராவில் ஆதார ஸ்ருதி கேட்பதால், அந்த பேதம் உணரப்படும், மீண்டும் ஸட்ஜத்திற்கு திரும்பியதும் ஒரு ஆனந்தப் பரவசம் ஏற்படும்.

ஸ்ருதி பேதத்தை அனுபவிக்க, ஏதோ ஒரு ஸ்வரத்தை, பாடல் வரியைக் கேட்டதும் கூடவே அதே ஸ்ருதியில் ’ஹம்’ செய்கின்ற தன்மையுடன், சில ராகங்களை அறிந்து கொள்ள, கண்டுபிடிக்க இயலும் நேர்த்தியும் போதும்.

கீழ் ஸ்தாயி, மேல் ஸ்தாயி என்றெல்லாம் சொல்லத் தெரியாதபோதும், பேஸ் – ஹை பிட்ச், கீழே – மேலே என்று உணர்ந்து வெளிப்படுத்தும் இயல்பு இவை போதும்.

அதனால், ஸ்ருதிபேதம் என்பது ஸ – ஸ்ஸா பாடும்போது, ஒரு கிளைச் சாலையில் கொஞ்ச தூரம் சென்று ஒரு நண்பனைச் சந்தித்து வர ரெண்டு கிலோமீட்டர் போய்வரும் அழகு போன்றது.

அபஸ்வரம் என்பது ஸ-விலிருந்து ஸ்ஸா-வரை பாட எண்ணி, சா விலிருந்து ஆரம்பிப்பது”.

ஆதாரம்: கிரி ராமசுப்பிரமணியன் கட்டுரையும், லலிதா ராமின் ‘வரலாறு’ தளமும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Aug-17, 10:27 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 789

சிறந்த கட்டுரைகள்

மேலே