அன்பு சுவர்
தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலியில்அன்புச்சுவர் திட்டத்தை நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் திருசந்தீப்நந்தூரி அவர்கள் துவக்கி வைத்தார். பொதுமக்கள் தங்களுக்கு தேவையற்ற ஆடைகள், புத்தகங்கள், பொம்மைகள், காலணிகள் இதர பயனுள்ளபொருட்களை தேவைப்படாதவர்கள், இல்லாதவர்களுக்கு கொடுக்கும் விதமாக இத்திட்டம் நெல்லைமாவட்டஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாக துவங்கபட்டுள்ளது . இந்த திட்டம் மக்களால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
முன்னெல்லாம் ஒரு வீட்டிலே ஆறு ஏழு குழந்தைகள் இருப்பார்கள் . அதையும் தாண்டி கூட்டு குடும்பங்களே அதிகம் எனும்போது அங்கே பகிர்தல் அதிகமாக பரவி இருக்கும். அக்காவின் பாவாடையை போட அடுத்ததாய் தங்கைகள் அண்ணனின் சட்டையைப் போட தம்பிகள் என வரிசையாக இருந்தனர். வீணடித்தல் இல்லாத அழகிய பகிர்தல் பண்பாடு கொண்டு நம் குடும்பங்கள் இருந்தது ஒரு காலம்.
இப்போது ஒரு குடும்பத்துக்கு இரண்டு குழந்தைகள் அல்லது ஓன்று என்று குடும்பங்கள் சின்னதாய் சுருங்கி பகிர்தலின் சுவடுகள் கொஞ்ச கொஞ்சமாக மறைந்து வரும் காலம் இது. நாம் பயன்படுத்தி முடித்த ஆடைகளையோ பொருட்களையோ அடுத்து பயன்படுத்த ஆளும் இல்லை . எங்கோ அது போன்ற பொருட்கள் இல்லாமல் தவிப்போருக்கு அதை தேடி சென்று கொடுக்க நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நேரம் இல்லை.
விரல் விட்டு எண்ணும்அளவுக்கு ஒரு சிலரே ஆசிரமங்களை தேடி சென்று தங்கள் பழைய ஆடைகள் போன்ற பொருட்களை கொடுக்கின்றனர். சிலர் கொடுக்க நினைத்தாலும் நேரம் இல்லாமையாலோ அல்லது யாருக்கு கொடுப்பது என தெரியாமலே அவற்றை வீணடித்து விடுகின்றனர்.
அப்படிப்பட்டவர்களுக்கு இது சிறந்த வழியாகும்.கொடுப்பவருக்கு இன்பமும் பிறருக்கு உதவும் திருப்தியும் கிடைக்கும். அதை பெற்று செல்வோருக்கு இன்பமும் தன்னிடம் இல்லாததை பெற்ற ஆனந்தமும் உண்டாகும். இது போன்ற அன்பு சுவர்கள் அதிக இடங்களில் முளைத்தால் மகிழ்ச்சி தான்.
காக்கா முட்டை படத்தில் ஆக்கர் கடையில் ரயில் கரிகளை பொருக்கி விற்கும் சிறுவர்கள் ஒரு வாட்சை கண்டு அந்த கடைக்கார பெண்மணியிடம் அக்கா இதை எடுத்துக்கவா என கேட்கும்போது அந்த பெண்மணி சரி என்றதும் அந்த சிறுவனின் முகத்தில் பரவும் புன்னகை பெரிது. அவன் அந்த பழைய வாட்சை புதிது போல ரசித்து அணியும் விதம் அழகு. இப்படித்தான் முகம் தெரியாத எத்தனையோ சின்ன காக்க முட்டை சிறுவர்கள் நம் பொருட்களை புதிதாக அணிய விரும்பியும் அவர்களுக்கு கிடைக்காமல் இருக்கலாம் . நாம் அது தெரியாமல் வெகு எளிதாக நம் பொருட்களை வேண்டாம் எனும்போது வீணடித்து விடுகிறோம்.
இனி ஒரு நிமிடம் யோசியுங்கள் உங்களுக்கு வேண்டாம் என நினைக்கும் சிலவற்றை வீணடிக்கும் முன். உங்களுக்கு வேண்டாம் எனும் அவை விரும்பியும் கிடைக்காத எத்தனயோ பேர் எங்கோ இருக்கலாம். நாம் வீசும் குப்பையில் காகிதம் பொறுக்கி வாழ்வோரும் உண்டு இந்த புவியில்.தூக்கி எரியும் கைகள் துன்பங்கள் துடைக்கட்டும்.உங்கள் குப்பைகள் சிலருக்கு பொக்கிஷங்கள்.உதவும் கைகள் உங்களில் விரியட்டும். புவியில் திசைகள் தோறும் புன்னைகைகள் மலரட்டும். அன்பின் வாசங்கள் அகிலம் எங்கும் பரவட்டும்.
அன்புடன்
யாழினி வளன்