வாழ்க்கைப் பயணம்
வாழ்க்கைப் பயணம்
பாரதிதாசன் சான்றிதழ் போட்டியாளர்
தன்வயிறு , தன்வாழ்வு , தன்குடும்பம் என்றே
தனக்கென்று நிறைவேற்ற துடிக்கின்ற போக்கில்
வன்செயல்கள் புரிந்திடவும் தயக்கமின்றி என்றும்
வரம்பிழந்தே தடுமாறித் திரிகின்ற உள்ளம்
அன்பென்ப தெள்ளளவும் காட்டாத வண்ணம்
அவர்கொண்ட தீநெறியே நோக்கியுமே செல்வார் .
துன்பங்கள் எவர்பெறினும் கருத்தின்றி உண்மைத்
தூய்மையில் வாழ்வுமுறை தோய்ந்திடவே நிற்பார் . !!
பணநோக்கம் பெரிதாக வாழுகின்ற மாந்தர்
பண்புகுணம் இவைபற்றிக் கருதவுமே மாட்டார் .
நிணங்கொத்தித் திரிகின்ற காக்கையைப் போலே
நிற்காமல் திரிந்திடுவார் நிதியமுமே கூட்ட .
மனமில்லா வாழ்வதனால் மனிதனுமே தேடும்
'மகத்தான ' சிறப்பெதுவோ தெரியவில்லை என்று
கணமேனும் நல்லெண்ணம் இல்லாது வீணர்
காசொன்றே குறியாகக் கொள்வாரே அந்தோ .!!
இத்தனையும் ஆடியபின் நிகழ்வதுவோ என்ன ?
இவ்வுலகில் நிலையாக இருப்பீரா நீவீர் ?
செத்தொழியும் நாள்தன்னில் சிதைக்குத்தான் போவீர் .
சேர்த்துவைத்த பணமெல்லாம் என்னவரும் ? சொல்வீர் .
பத்துவிரல் மோதிரமும் பறந்திடுதல் காண்பாய் .
பார்த்தவர்கள் 'சவ'மென்று சொல்லுவரே அந்தோ .
சுத்தமிலா வாழ்வுதனை வாழ்ந்துவிட்டீர் நீவீர்.
சுகமெங்கே உமைவந்து நாடிடுமா ? சொல்வீர் .
மொத்த சொற்கள் :- 96
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்