​​காட்சியும் கவிதையும் - 4

​காட்சி : -

தான் பெற்றெடுத்தப் பிள்ளைகள்,மூப்படைந்த
காரணத்தாலும் , சுயநல எண்ணத்தாலும் ,
மற்றும் சூழ்நிலையாலும், சிறிதும் கவலையின்றி,
பொறுப்பின்றி பாசத்தைத் துறந்து இரக்கமின்றி
அன்னை என்பதை மறந்து அனாதையாக
வெளியேற்றி கைவிடும் நிலை இன்றைய
உலகில் நாளும் அதிகரிக்கிறது .

அத்தகைய சூழலில் உள்ள ஒரு தாய்
தன்னிலையை வேதனையுடன் பகிர்ந்துக்
கொள்வதே இக்கவிதையின் வரிகள் :
-------------------------------
பெண்ணாகப் பிறந்தால் பெருமையென
--கண்ணாக வளர்த்திடுவர் பெற்றவர்கள் !
மாறிடும் நிலைகளும் பெண்களுக்கு
--கூடிடும் பொறுப்பும் மதிப்புமிங்கு !
தாரமாகி தாயுமாவார் நங்கையும்
--தளராத நெஞ்சுள்ள மங்கையும் !

பிரியமாய் வளர்த்தேன் பிள்ளைகளை
--கடமைகளை செய்தேன் கருத்தாக !
பட்டினியால் அவர்கள் வாடியதில்லை
--துன்பத்தின் நிழலும் தீண்டியதில்லை !
வேற்றிடம் சென்றிட விரட்டினர்
-- வேறிடம் இல்லையென அறிந்தும் !

வசதியுடன் வாழ்ந்திடும் அவர்களும்
--இன்றுவரை என்னைத் தேடவில்லை !
காலத்தின் சுழற்சியால் என்வாழ்வு
--கலைந்திட்டக் கோலமாய் ஆனது !
பசியுடனே அலைந்துத் திரிகின்றேன்
--நாளும் மரணித்துப் பிழைக்கின்றேன் !

பெண்ணாகப் பிறந்ததே குற்றமா
--தாயாவதும் தரணியில் தவறா !
அனாதையாய் வீதியில் தள்ளாட்டம்
--அலங்கோல நிலையில் அன்றாடம் !
அரசாங்க அறிவிப்புகள் பேச்சளவில்
--ஆணைகள் கோப்பில் எழுத்தளவில் !

என்னிலையில் பலரும் இங்குண்டு
--வேடிக்கைப் பார்க்கும் விழிகளுண்டு !
பெற்றவரைக் கைவிடேல் என்றும்
--போற்றிக் காத்திடுவீர் எந்நாளும் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (4-Aug-17, 7:41 am)
பார்வை : 315

மேலே