எது எனது நிரந்தர அடையாளம்

கருவாகி, உருவாகி பிறந்த என்னை குழந்தையென்றார்கள்..
எந்தக் குழந்தையென்றால் தொட்டில் எண் ஐம்பத்தாறிலுள்ள குழந்தையென்றார்கள்..
சிறிது வளர சுற்றம் சூழ புரியாத சொற்களால் ஒரு பெயர் தந்தார்கள்..
கேட்டால் குல தெய்வ பெயரென்றார்கள் இந்துகள்..
முன்னோர் பெயர்களென்றார்கள் மற்றவர்கள்..
எப்பெயர் சூட்டினால் எனக்கென்ன? என்று பள்ளிக்கூடம் சென்றேன்..
அங்கு புரியாத இப்பெயருக்கு அடையாள அட்டை தந்தார்கள் தெளிவில்லாதொரு புகைப்படத்துடன்..
பள்ளிக்கூடம் கடந்து கல்லூரி நுழைந்தேன்...
அங்குமொரு அடையாள அட்டை...
சிறிது காலத்தில் அரசாங்கமொரு அடையாள அட்டை தந்தது...
சற்றே கோபம் கொண்டு, நான் நான் தான், நீ நீ தான், ஏனடா எனக்கு இத்தனை அடையாள அட்டைகளென்று கேட்டேன்...
தேசவிரோதியென்ற அடையாளம் தந்து என்னைச் சுட்டுக் கொன்றார்கள்...
அப்போதும் விட்டதா இந்த அடையாளம்?
என் இறப்புச் சான்றிதழ் என் பெற்றோர்க்கு வழங்கப்பட, என்னை பேய், ஆவி என்றெல்லாம் அடையாளம் காட்டிக் குழந்தைகளுக்குக் கதைகள் சொன்னார்கள்..
மீண்டும் உயிர்த்தெழுந்து கேட்கிறேன், நான் யார்?
எது எனது நிரந்தர அடையாளம்?
முடிந்தால் வழங்குங்கள்..
இல்லையெனில் தேடுங்கள்...
எது எனது நிரந்தர அடையாளம்???..

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (7-Aug-17, 7:42 pm)
பார்வை : 860

மேலே