அதிபரும் அந்த நிருபரும்
சுடுகாட்டின் எல்லைகளை விரிவாக்கும்
அதி நுட்பமான பணியில்
அந்த அதிபர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.
அதற்கான இடப் பற்றாக்குறை குறித்து
குரூரமாக அவர் திருப்தி அடைந்தாலும்
அதற்காக ஒரு பெரிய நகரத்தையே
சுடுகாடாக மாற்றியமைக்க அவரால் முடிந்தது..
பிணங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போக
அதை உரங்களாக்கி அயல் நாட்டிற்கு
ஏற்றுமதி செய்யும் திட்டமும்
அவர் அரசாங்கத்தின் கைவசம் இருந்தது.
உலக சமாதானத்தையும்
போரிலும் பொருளாதாரத்திலும்
நலிந்த நாட்டின் நிர்வாகக் கட்டமைபபையும்
தன்னால் மட்டுமே நிலைப்படுத்த முடியும் என்ற
முழு கர்வம் அவரின் பேச்சில் இருந்தது.
அவர் நிர்மாணித்த சுடுகாட்டை
உலக மக்களுக்கு அர்ப்பணித்ததை
எல்லா தொலைக்காட்சிகளும்
தொடர்ந்து ஒளிபரப்பியது.
அதைச் சார்ந்து நடந்த
வீடியோ பரிமாற்றக் கருத்தரங்கில்
அந்த அதிபருக்கு மிகவும் பிடித்த
பதில்களை வரவழைக்கும்
கேள்விகளைத் தயாரித்த
ஒரு பத்திரிக்கை நிருபர் பாராட்டையும்
மண்டைஓட்டுப்பதக்கத்தையும் பெற்றார்.
அதிபரை மிக நெருக்கத்தில் இருந்து
உரையாடிய அந்த நிருபர்
தன் சக நிருபர்களுடன்
தேனீர் அருந்தும்போது கூறினாராம்
“அதிபரின் வாயிலிருந்து
அழுகிய பிண வாடை அடித்ததென்று.”