உதயமானான் செங்கதிரோன்
செண்பகம் மேளங்கொட்டச் சேவல்கள் வாழ்த்திசைக்க
விண்மீன்கள் கூட்டமுடன் வெண்ணிலவும் மறைந்துசெல்ல
வெண்முத்துப் பனித்துளிகள் மெல்லிதழில் பூத்துநிற்கக்
கண்விழிக்கும் தருணத்தில் கனவுவந்தே இமைமூட
இனிதான மலர்வனத்தில் இளந்தென்றல் தாலாட்டக்
கனிவாசம் இதமாகக் காற்றினிலே தவழ்ந்துவரக்
குனிந்தாடும் மரக்கிளையில் குயிலொன்று குரல்கொடுக்க
வனிதையரின் விரலசைவில் வாசலிலே கலைகொஞ்ச
நீலவானம் செம்மஞ்சள் நிறத்துடனே காட்சிதர
ஓலமிடும் கடலலைகள் ஒளிபட்டு மிளிர்ந்திருக்க
மேலெழும்பும் கதிரவனின் மேனியெலாம் சிவந்திருக்கக்
காலைநேரக் காட்சியினைக் கண்டமனம் சிலிர்த்திருக்க
இருள்துடைத்து விட்டாற்போல் இரவுவிடை பெற்றிருக்க
கருவறையில் தெய்வத்தின் கதவுகளும் திறந்திருக்க
மருள்நீக்கும் மணியோசை மனவமைதி தந்திருக்க
வருநாளின் பணிகளெல்லாம் மனக்கண்முன் அணிவகுக்க
சிந்தையிலே புத்துணர்வு சிறகசைத்துப் பறந்திருக்க
பந்தினைப்போல் வானத்தில் பளபளப்பாய் வட்டமாகச்
சுந்தரமாய்க் கீழ்வானில் சொக்கவைக்கும் அழகுடனே
செந்தாமரை மலர செங்கதிரோன் உதயமானான் !
சியாமளா ராஜசேகர்