ஆசைக்குள் விஷம்

ஆசைக்குள் விஷம்

ஆசைக்குள் விஷம் வைத்து
என்னை அழ வைத்தது யாரோ?
அன்பிற்குள் பகை வைத்து
உறவை பிரித்து வைத்தது யாரோ?

அழகழகாய் கண்ட கனவை
கலைத்துவிட்டது யாரோ!
கலைந்தபின்னும் புதுக்கனவை
காணவைப்பது யாரோ!

பாசமெனும் நதியினிலே
நான் மூழ்கித் திளைத்தேன்
பல பேர் கரையேற
படகாக உழைத்தேன்!
காலமெனும் காற்றினிலே
கரை ஒதுங்கிப் போனேன்
கரையொதுங்கிய பின்னாலே
தனிமரமாய் ஆனேன்!

நேசம் வளர்த்த நெஞ்சத்தில்
வெறுப்பை வளர்த்தது யாரோ
வேஷம் போட்ட உறவுகளை
விளங்கிக் கொண்டதாலோ!

விளையாட்டாய் செய்த பிழை
விதியாகிப் போனதம்மா
விதியாடிய விளையாட்டில்
வாழ்க்கை வீணாகிப்போனதம்மா!

அடையாளம் அது மாறி
தவறாகிப் போனதம்மா
நான் செய்த தவறெல்லாம்
எனைப்பார்த்து
நகையாடிப் போகுதம்மா!

எதிர்காலம் என்னவென்று
தெரியாமல் போனதம்மா
என் நிகழ்காலம் வேரில்லா மரமாக ஆனதம்மா!
விழியெல்லாம் நீரொழுகி
நதியாக ஆனதம்மா
என் கண்ணீரே எனைக்கொல்லும்
கரமாகிப் போனதம்மா!

எனக்குள்ளே நான் மூழ்கி
காணாமல் போனேனம்மா
காணாமல் போனதனால்
கனவாக ஆனேனம்மா!

கனவாக நானான காரணம்
விதியால விளைந்ததோ
நான் செய்த பிழையால பிறந்ததோ?

விளங்காமல் தவிக்கின்றேன் பாரம்மா
விடை சொல்வார் யாரம்மா
விடையறிந்தால்
கொஞ்சம் விளங்கும்படி சொல்லுங்கம்மா!
--- கற்றது தமிழ். மாரி

எழுதியவர் : கற்றது தமிழ் மாரி (15-Aug-17, 4:50 pm)
பார்வை : 312

மேலே