தாயின் தனிமை

தாய் தந்தையை இழந்தாலும் தன்மீது அன்புகாட்ட ஒருவன் இருக்கி்றான் என்கிற மனநிம்மதியோடு தன் வாழ்க்கை வாகனத்தில் பயணிக்கிறாள். அவனும் தன் திருமண வாழ்க்கையை இவளோடுதான் வாழவேண்டும் என்கிற உறுதியோடு இருந்தான். இவர்களின் காதலை அவன் வீட்டிற்கு தெரியப்படுத்த விரும்பினான். அப்பாவிடம் சொல்லத்தயங்கிவயன், முதலில் தன் அம்மாவிடம் தைரியமாக சொல்லிவிட்டான். ஆம் ஒவ்வொரு வீட்டிலும் அம்மா தானே இடிதாங்கியாக இருக்கிறாள். ஒரு நாள் தன் கணவரிடம் மகனின் காதலைப் பற்றி தெரியப்படுத்தினாள். அவ்வளவுதான் தன் மகனிடம் காட்ட வேண்டிய கோபத்தையெல்லாம் மனைவியிடம் வெளிப்படுத்தினார் அந்த உத்தமர். நாட்கள் நகர்ந்தன, தந்தையும் மகனும் பேசிக்கொள்வதுமில்லை, சரியாக சாப்பிடுவதுமில்லை. இதை எப்படியாவது சரிசெய்ய விரும்பினாள் அம்மா. மெல்ல மெல்ல தன் வீடு இயல்பு நிலைக்கு திரும்பியதை உணர்ந்தாள். மகனுக்கும் திருமண வயது நெருங்கியது, மீண்டும் மகனின் காதலை பக்குவமாக தன் கணவரிடம் எடுத்துரைத்தாள். அவரும் கடைசியாக மகனின் உணர்வை புரிந்துகொண்டு திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்…

திருமண ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக அரங்கேறின. மணப்பெண்ணிற்கு சொல்லிக்கொள்ளும் படியாக சொந்தங்கள் யாருமில்லை என்றாலும், தோழிகளின் அரவணைப்பில் மணமேடை ஏறினால். திருமணம் இனிதே முடிந்தது. மணமகனின் அப்பாவும் அம்மாவும், அவளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர். தன் புகுந்த வீட்டிற்குள் முதன் முதலாக வருகிறாள், தன் பிறவிப்பயனை அடைந்ததுபோல் அவளுக்குள் எல்லையில்லா ஆனந்தம். அதை அவளின் கண்களிலும் உணர முடிந்தது…

சிறிது காலம் மணவாழ்க்கை இன்பமாக சென்றது. நாட்கள் செல்லச்செல்ல அத்தையும் மாமாவும் அவளுக்கு இடையூறாகத் தெரிந்தார்கள். இதனால்தான் என்னவோ தன் கணவனோடு சுதந்திரமாக இருக்கமுடியவில்லை என்று எண்ணினாள். இதை தன் கணவனிடம் எப்படி சொல்வது என்கிற குழப்பத்தில் சிக்கித்தவித்தாள். இருக்கும் இடத்திலேயே மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று யோசிக்காமல், தனிக்குடித்தனத்தில்தான் சந்தோஷமாக இருக்க முடியும் என்ற சிந்தனையிலேயே இருந்தாள்…

இதனால் தன் அத்தை மற்றும் மாமாவிடம் சற்று இடைவெளியுடனேயே பழகினாள். ஒருவழியாக தன் கணவனிடம் பிடிவாதமாக தனி வீடு போவது பற்றி வாக்குவாதம் செய்தாள். இறுதியில் வெற்றி அவளுக்கே. அதற்கான நாள் வரும்போது தனிக்குடித்தனம் செல்வோம் என்று மனைவியை சமாதானப்படுத்தினான். அவனுக்கோ இதை எப்படி பெற்றோரிடம் சொல்வது என்ற தயக்கம்? சிறிது நாட்களுக்குப்பிறகு மனைவியின் வற்புறுத்தலின் காரணமாக முதலில் தன் அம்மாவிடம் தனியாக செல்வது பற்றி சொல்கிறான். அம்மாவிற்கு மகனை தனிவீடு அனுப்புவதற்கு சிறிதும் மனமில்லை. ஆம் எப்படி தனியாக அனுப்ப சம்மதம் சொல்வாள்? தன்னருகே அனைவரும் இருந்தும் ஒரு அநாதையைப்போல் இருந்தவள், மகனும் மருமகளும் தன்னை விட்டு செல்வதாகச் சொன்னால், பாவம் அவளால் அழுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

தந்தையோ முதலில் மறுத்தாலும் பிறகு பல அறிவுரைகளைச் சொல்லி, மகனை வழியனுப்ப தயாரானார். தான் தனிக்குடித்தனம் செல்லப்போவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். தனக்கும் கணவனுக்கும் இடையில் இனி யாரும் இடையூறாக இருக்க மாட்டார்கள் என்ற கனவுகளில் பயணிக்கலானாள். அத்தை மறுப்பு தெரிவிப்பதை சிறிதும் பொருட்படுத்தாது தன் பொருட்களையெல்லாம் சரிபார்த்துக்கொண்டிருந்தாள். தனி வீடு செல்லும் நாள் வந்தது. எவ்வளவோ சமாதானம் சொல்லியும் கேட்காத மகனிடம் கடைசியாக, மனதில் மட்டுமே சுமந்த கண்ணீரை வெளிப்படுத்தி கதறி அழுதாள். மகனும் சற்று பதறிப்போனான். ஆனால் மருமகளோ, தன் கணவன் போகவேண்டாம் என்று சொல்லி விடுவானோ என்ற பயத்தில், உன் அம்மா அழுவதுபோல் நாடகம் போடுகிறாள் என்று சொல்லி அத்தையை அதிர்ச்சிக் கடலில் மூழ்கடித்தாள். அத்தையோ “நான் உனக்காகவும்தான் அழுகிறேன், அது உனக்கு இப்போது புரியாது என்றாள்“, எந்த முயற்சியும் பயனளிக்கவில்லை, இறுதியில் இருவரும் வீட்டில் இருந்து புறப்பட்டனர்…

புது வீட்டில் மிகவும் மகிழ்ச்சியுடன் தன் வாழ்க்கையை தொடர்ந்தனர். அங்கு சென்ற சில காலங்களிலேயே அவள் கருவுற்றாள். இதை கேள்விப்பட்டவுடன் மிகவும் ஆசையுடன் அவளின் அத்தையும் மாமாவும் அவளை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்தனர். அவள் சொன்ன எந்த வார்த்தைகளையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மருமகளை அக்கறையுடன் கவனித்துக்கொண்டாள். இரண்டு நாட்களுக்குப் பின் அத்தை அவளை தங்களது வீட்டிற்கே மீண்டும் போய்விடலாம் என்று அழைத்தாள். ஆனால் மருமகளோ இங்கு வந்ததால் தான் எனக்கு குழந்தை உண்டாயிற்று அதனால் இங்கேயே இருக்கிறேன் என்று மறுத்துவிட்டாள். அத்தையும் சரி என்று அமைதியாகிவிட்டாள். தன் கணவனின் காதல் கலந்த துணையுடன், பெற்ற தாயைப்போல கவனித்துக்கொண்ட அத்தையின் அரவணைப்பிலும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தாள்…

தன் வாழ்நாளில் சந்தித்த அனைத்து துன்பங்களும் ஒரே நொடியில் தொலைந்ததுபோல் அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி. குழந்தை பிறந்தது முதல் செய்யவேண்டிய எல்லா சுபகாரியங்களையும் சிறப்பாக செய்தனர். தன் பிள்ளையை எப்படியெல்லாம் வளர்க்க வேண்டும், எப்படியெல்லாம் வாழ வைக்க வேண்டும் என்று இப்போதே தன் வாழ்க்கையின் பாதியை மகனுக்காக செலவிடத் துவங்குகிறாள் தாய். சில மாதங்களுக்குப் பிறகு அவளின் அத்தை, பிள்ளையை தனியாக வளர்க்க நீ மிகவும் சிரமப்படுவாய் அதனால் நம் வீட்டிற்கே மீண்டும் செல்வோம், நாங்களும் அங்கு தனியாக தானே இருக்கிறோம் என்று அழைத்தாள். ஆனால் ஏனோ அதை புரிந்துகொள்ளாமல் மருமகள் மறுத்துவிட்டாள்…

இப்படி தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அவளின் அத்தை அடிக்கடி கேட்பதும், இவள் தட்டிக்களிப்பதுமாக இருந்தது. அந்த மூன்று வருடங்களுமே தன் பிள்ளை மற்றும் கணவனுடன் மகிழ்ச்சியாக செலவிட்டாள். அக்கம்பக்கத்தினரைப் பார்த்து இவர்களும் தன் பிள்ளையை மூன்றரை வயதிலேயே பள்ளிக்கு அனுப்ப விரும்பினர். அங்கு இருப்பதிலேயே சகல வசதிகளுடன் உள்ள பள்ளியில் அச்சிறுவனை சேர்த்தனர். முதல்நாள் பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று அடம்பிடித்த அவனை, பிரிய மனமில்லாமல் வலுக்கட்டாயமாக அனுப்பிவைத்து வீடுதிரும்பினாள்…

நாட்கள் செல்லச்செல்ல தன் மகன் தன்னைவிட்டு தொலைவில் இருப்பதுபோல் உணர்ந்தாள். அவளின் கணவனும் மகனும் காலை 8 மணிக்கு வீட்டை விட்டு கிளம்புவார்கள், மகனை 3 மணிக்கு பள்ளிக்குச்சென்று அழைத்து வருவாள், தன் கணவனோ இரவு 8 மணிக்கு வருவான். மகன் வளரவளர அவன் வீட்டில் இருக்கும் நேரம் குறைந்துகொண்டே வந்தது. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் தன் நண்பர்களுடன் விளையாட சென்றுவிடுவான். தன் அப்பா வரும் நேரத்திற்கு சற்று முன்னதாக வீட்டிற்கு வருவான். அவள் எவ்வளோ சொல்லிப்பார்த்தும் மகன் கேட்டபாடில்லை…

மிகவும் குறுகிய காலத்திலேயே தனிமைக்கு நெருக்கமானதை அறிந்த அவள் தன் கணவரிடம் இதைப்பற்றி மனம்விட்டு பேசவேண்டும் என நினைத்தாள். ஆனால் அதற்கான நேரம் அவளுக்கு இருந்தாலும் அவளின் கணவனுக்கு இல்லை. இரவு நேரத்திலாவது தன் கணவரிடம் பேசநினைத்தாலும், வேலைப்பளுவின் காரணமாக சாப்பிட்டவுடன் உறங்கிவிடுவார். தனிமைகளின் கொடிய பசிக்கு கொஞ்சம்கொஞ்சமாக இறையாகிக்கொண்டிருந்த அவளின் வாழ்க்கையை எண்ணி அஞ்சியவள், ஒருநாள் தன் கணவரிடமும் மகனிடமும் கூறினாள்…

இதை சரியாக புரிந்துகொள்ளாத அவர்கள், அவளை சந்தோஷப்படுத்த வேண்டுமென்று நினைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியிடத்திற்கு அழைத்துச்செல்லலாம் என்று முடிவுசெய்தனர். அவளும் மகிழ்ச்சியாக சரியென்று எற்றுக்கொண்டாள். முதலில் சில ஞாயிறுகள் மகிழ்ச்சியுடனேயே சென்றன. ஆனால் இப்படி ஞாயிறுகளில் வெளியில் செல்வதால், கணவரும் மகனும் தன்னைவிட வெளியுலகிற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப் புரிந்துகொண்டாள். இதனால் விடுமுறை நாட்களை வீட்டிலேயே கழிக்கலாம் என முடிவெடுத்தாள்…

இப்படியே நாட்களை கடக்க வெறுத்த அவள் மீண்டும் தன் அத்தை வீட்டிற்கே செல்லலாம் என யோசித்தாள், ஆனால் அத்தையிடம் அவள் பேசிய வார்த்தைகளை எண்ணி தாழ்வுமனப்பான்மையின் காரணமாக கணவரிடம் இதைப்பற்றி கேட்காமலேயே மனதிலேயேவைத்து புழுங்கினாள். மனைவியின் சோகத்தை உணர்ந்த கணவன் ஆறுதல் கூறுவதாக நினைத்து, தனியாக இருப்பதாக எண்ணும்போது வீட்டில் தொலைக்காட்சியை பார், என்று ஒரே வார்த்தையில் அவளின் தனிமையை விரட்டலானான்…

ஆனால் இப்போதுள்ள தொலைக்காட்சித் தொடர்களில் வாழ்வதற்கான வழிகளைவிட, வாழ்க்கையை அழிப்பதற்கான நிகழ்ச்சிகள்தானே அரங்கேற்றப்படுகின்றன. தனிமை என்னும் நரக வேதனையால் உறவுகள் இருந்தும், யாரும் அவளை சரியாக கவனிக்காததால், உறக்கமின்றியும் நிம்மதியின்றியும் வாழ்வதை வெறுக்கலானாள். ஒருநாள் இதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தவள் தனிமைக் கொடுமையின் உச்சத்திற்கே சென்றதால் கதறி அழதாள். கண்ணீர்த்துளிகள் அவளைப்பார்த்து, “இப்போது நீ எதற்காக நாடகம் போடுகிறாய்” என்று ஏளனமாய் நகைத்தது…

அப்போதுதான் அவள் அத்தையின் வலிகளைப் புரிந்துகொண்டாள். ஆனால் இப்போது புரிந்துகொண்டு என்ன செய்வது? மன்னிப்பு கேட்பதற்குக்கூட அவர்கள் உடன் இல்லை. ஆம் சற்று தாமதமாக புரிந்துகொண்டாள். இந்த வார்த்தைகளால்தான் அத்தை மிகவும் மனவேதனையுடன் இறந்திருப்பார்கள் என்று யோசிக்கும்போது, அவளுக்கு தன் உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது. ஆனால் என்னசெய்வது, ஒவ்வொரு பெண்ணும் அவர்களின் வாழ்க்கையை தன் கணவருக்காகவும், பிள்ளைகளுக்காகவும் தானே வாழ்கிறார்கள். இதனால் தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டு, தான் இப்படியெல்லாம் பேசியதற்காகத்தான் இறைவன் தனிமை எனும் தண்டனையை கொடுத்திருக்கிறான் என்று ஏற்றுக்கொண்டாள்…

“கடல் ஐந்தாறு

மலை ஐநூறு

இவை தாண்டித் தானே

பெற்றேன் உன்னை

உடல் செவ்வாது பிணி ஒவ்வாது

பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை"


– தாமரை

இவ்வுலகில் நமக்கு எள்ளளவும் தீங்கு நினைக்காத ஒரே உயிர் நம் அம்மா. உங்களால் இயன்றவரை வீட்டில் உள்ளவர்களிடம் நேரத்தை செலவிடுமாறு வேண்டிவிரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்…

– இப்படிக்கு என் தாயின் தனிமைகளை தவிர்க்க விரும்பும் மகன்: ச.தினேஷ்காந்தி

எழுதியவர் : ச.தினேஷ்காந்தி (16-Aug-17, 1:35 pm)
Tanglish : thaayin thanimai
பார்வை : 959

மேலே