ஒரே ஒரு நாள்

இதயத்தில் தேள்
இறங்கும் வாள்
அன்பே கேள்
ஒரே ஒரு நாள்
நான் நீயாக வேண்டும்
நீ நானாக வேண்டும்

கூடுவிட்டு தான்
கூடு பாயும்
வித்தை தனை
கற்றாவது
ஒரே ஒரு நாள்
நான் நீயாக வேண்டும்
நீ நானாக வேண்டும்

அந்த ஒரு நாள்
என் வலியில் நீ எனை உணர்ந்திட வேண்டும்
என் விழியில் நீ உனை கண்டிட வேண்டும்
என் தவிப்பில் நீ சுழன்று உழன்றிட வேண்டும்
என் தகிப்பில் நீ மரித்து எரிந்திட வேண்டும்
என் தனிமைகளில் நீ காய்ந்து துணைதேடிட வேண்டும்
என் தாபத்தில் நீ சாய்ந்து உருகிட வேண்டும்
என் புலம்பலில் நீ மாய்ந்து மருகிட வேண்டும்
என் புதிர்களில் நீ பதில் தேடி திரிந்திட வேண்டும்
என் கனவுகளில் நீ ஒருமுறை வாழ்ந்து பார்த்திட வேண்டும்
என் நினைவுகளில் நீ உனை துரத்தமுயன்று தோற்றிட வேண்டும்
என் ஆற்றாமைகளில் நீ விழுந்து அழுதிட வேண்டும்
என் ஆசைகளில் நீ கரைந்து அமிழ்ந்திட வேண்டும்

மறுநாள் மறுநாள்
நீ என்னிலிருந்து விடுபட்டு
நீ உனக்குள் நுழைவாய்..

மறுநொடி மறுநொடி
சிறுகொடி நீ
என் வலி தாளாமல்
என்னைக் கட்டி
அணைத்துக்கொண்டிருப்பாய்...!

யாழினி வளன்

எழுதியவர் : யாழினி வளன் (18-Aug-17, 2:07 am)
Tanglish : ore oru naal
பார்வை : 690

மேலே