பொம்மை பேசினால்

செல்லப்பெயர்கள் வைத்து
கொஞ்சுகிறாள்..
சின்ன சின்ன முகபாவனைகளோடு
கொஞ்சிக்கொஞ்சி பேசுகிறாள்..
முத்தம் கொடுத்தே
அன்பால் நனைக்கிறாள்..
காரணமேதுமின்றி
என்னைப் பார்க்கும் போதெல்லாம்
சிரிக்கிறாள்..
தரையில் புரட்டிப்போட்டு
அழுக்காக்குகிறாள்..
அழுக்கென குளிப்பாட்டுகிறாள்..
தலைத்துவட்டிவிடுகிறாள்..
ஆடைக்கட்டி அலங்கரித்து
அழகு பார்க்கிறாள்..
பிஞ்சு விரலால்
உணவு ஊட்டிவிடுகிறாள்..
ஊஞ்சலில் அமர்த்தி
முன்னும் பின்னும்
ஆட்டிவிடுகிறாள்..
ஒருமுறைக்கூட நான்
‘ம்’ என்று சொன்னதில்லை..
ஆனாலும்
கதை பேசிக்கொண்டே இருக்கிறாள்..
என்னை அணைத்தப்படியே
தூங்குகிறாள்..
எனக்கும் தாலாட்டுப்பாடிக் கொண்டே
தட்டிவிட்டு தூங்கவைக்கிறாள்..
நான் பொம்மை என்பதையே
என்னை மறக்கவைக்கிறாள்..
உயிரில்லையே என்று
அழத்தோன்ற வைக்கிறாள்..
அழவும் கண்ணீரில்லையென
ஏங்க வைக்கிறாள்..
இறகில்லாத குட்டி தேவதை..

எழுதியவர் : ஆர்.சரண்யா (21-Aug-17, 7:13 pm)
Tanglish : pommai pesinal
பார்வை : 918

மேலே