நீதி

இழுத்து வரப்பட்டேன் காற்றால்...
மண்டியிடு என்றது கம்பீரமான குரல்...
யார் நீ? நான் ஏன் மண்டியிட வேண்டும் உன் முன்? என்றேன்...
நானே நீதியென்று சூரியனாய் ஒளிவெள்ளம் தோன்றிட மறுப்பின்றி மண்டியிட்டேன் அதன் முன்...

இவன் செய்த குற்றமென்ன? என்று காற்றிடம் அவ்வொளி வினாவ, இவன் இரண்டு கோடியே கோடி உயிர்களைக் கொன்ற பாவி என்றது காற்று...

என் கனவிலும் எவ்வுயிரையும் கொல்லாத என்னைக் கொலைக்காரப் பாவியென்கிறதே இக்காற்று என்று நான் வியந்திட, மேலும் தொடர்ந்த காற்று,
இவன் மிருகங்களின் மாமிசத்தை புசித்து வாழ்ந்தவன் என்றிட,
அதை ஒப்புக் கொண்ட நான், எவ்வுயிரையும் கொள்ளவில்லையே என்று மறுமொழி உதிர்க்கும் முன் காற்று சொன்னது நீ எறும்புகள், கொசுகள் உட்பட பல சிறுவுயிர்களைக் கொன்றவன் என்றிட,
ஆம், அவைகளும் உயிர்தானே என்பதை மறந்துவிட்டேன் என்று கூறி நான் தலைகுனிந்தேன்...

ஒளியாய் வீற்றிருந்த நீதி சொன்னது, உயிர்களென்பதை மறந்த இவனை மீண்டும் உடலில் புகுத்தி அவ்வுடலை உயிருடனேயே கழுகுகளுக்கும், காக்கைகளுக்கும் இரையாக்குங்கள் என்று கட்டளையிட,
அடுத்த நொடியில் உடலெல்லாம் பறவைகள் கொத்த வேதனை தாங்காது விழித்தெழுந்தேன் கனவுலகிலிருந்து.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (21-Aug-17, 10:34 pm)
Tanglish : neethi
பார்வை : 1150

மேலே