பாட வைத்த வானம்
இன்றைக்கென்னை வானம் பாடச் சொல்லி அழைக்குது போலும்..... காலை வானம் கவிதை மலர்த்தியது ! மாலை வானம் இதுவும் கவிதை உலர்த்துகிறது !!!
இருட்டிக் கருக்குது வானம் - மழை
இயற்றித் தொலைக்குது மேகம்
கருத்தைக் கவருது தென்றல் - ஒளி
கண்ணுக் களிக்குது மின்னல்
பெருக்கும் இடியொலி நாதம் - ஜெயப்
பேரிகை கொட்டுது வானம் !
வருத்தும் வெயிலிடர் மாய - மழை
வரத்தைக் கொடுத்தனள் அன்னை !
பூத உருவினைக் கொண்டு - பயப்
பூழ்தி கிளப்புது தாய்மண் !
ஆதரவாக நிமிர்ந்தே - மழை
அழைப்பைக் கேட்பன புற்கள்
காதல் மிகுந்திட இயற்கை - புதுக்
கவிதை பொழிந்திடும் நேரம்
மோதித் துளைக்குது வாசம் - உயர்
மோனம் கொடுக்கும் மண்வாசம் !
உள்ளம் நனைக்குது தண்ணீர் - பல
உணர்வை எழுப்புது தண்ணீர்
பள்ளம் அனைத்திலும் ஈரம் - முகில்
பாட்டிசை கூட்டிடும் நேரம்
அள்ளிப் பருகிடும் நெஞ்சம் - அது
அன்புக் கவிதையைச் சிந்தும்
துள்ளிக் கிடக்குது தேகம் - அதில்
தோன்றுது மின்னலின் வேகம் !!
-விவேக்பாரதி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
