பெண் மனது ஆழமென்று தொடர் பாகம் 7
..............................................................
பெண் மனது ஆழமென்று...
..............................................................
பாகம் 7 அ
சரண்யாவின் டைரியில் எழுத நினைத்து, எழுதாதப் பக்கங்களிலிருந்து...
அப்பா இந்த அளவு கோபமாக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.. அண்ணனை கன்னத்தில் அறைந்தே விட்டார்.. எங்களை வீட்டுக்குள் சேர்க்கவில்லை.. அம்மாவை விட்டு மஞ்சள் நீர் தெளிக்கச் சொல்லி, நேரே தேவி பிரதிங்கரா கோயில் மண்டபத்துக்கு எங்களை அழைத்துப் போய் விட்டார்.. அங்கேயே ஒருநாள் முழுக்கத் தங்கியிருக்கச் செய்தார்..
என்னையே சற்று நேரம் உற்றுப் பார்த்த அப்பா உடைந்த குரலில் சொன்னார், “சரண்யா.., நீயும் உன் அண்ணனும் அனுபவமில்லாதவங்க.. ஊரு முழுக்க துப்புத் துலக்கி, எந்த முடிவுக்கு ஒரு போலிஸ்காரன் வருவானோ, அதே முடிவை இருந்த இடத்துல இருந்தே என்னால வர முடியும்.. தப்பு இருக்கும்மா.. தப்பு இருக்கு.. அது என் புள்ளைங்க தலையில விடிஞ்சிடக் கூடாது..! !”
பெற்ற மனம் பித்து..! நான் என்ன செய்வது ??
மூன்று நாட்கள் வரை எங்களை எங்கேயும் போக விடாமல் கண்காணித்தார் அப்பா.. அப்பாவின் கோபம் தணிய இரண்டு நாட்களானது.. அப்பாவுக்கு நாங்கள் கரோலின் பங்களாவுக்குப் பக்கத்தில் இருந்தது எப்படி தெரியும்? அம்மாதான் வெளியூரிலிருந்த அப்பாவுக்கு ஃபோன் பண்ணி சொல்லியிருக்கிறார். இங்கு வந்த என் தோழிகள் என்னிடம் பேசியபோது அனைவருக்கும் கேட்குமாறு ஸ்பீக்கர் வைத்துப் பேசியிருக்கின்றனர். பேச்சு வாக்கில் அந்தப் பெயர் அடிபட்டு அம்மா காதுக்கு எட்டியிருக்கிறது..
லாண்டிரிக் கடையில் எடுத்த மாத்திரை அட்டையைப் பற்றி கூகுளில் தேடினேன். பென்சீன் ஃபார் பெட்டர்மெண்ட் – பீபீ கம்பெனி - மும்பை.. மனோவியாதியைக் கட்டுப்படுத்தும் மாத்திரை..
சிசோஃப்ரனியாவுக்கு நல்ல மருந்து என்றிருந்தது..
சிசோஃப்ரனியா என்றால் என்ன?
தேடினேன்..
‘ மனச்சிதைவு நோய்.. மூளையில் ஏற்படும் ரசாயண மாற்றங்களால் உண்டாகும் நோய்..! நோய் கண்டவர்களுக்கு உண்மையே போல உருவம் கண்முன் தெரியும்.. காதில் குரல்கள் கேட்கும்.. விபரீத வாசனை வரும்...’ - அதற்கு மேல் படிக்கப் பிடிக்கவில்லை.. பயமாக இருந்தது...!
உருவம் கண்முன் தெரியும்..
உருவம்..! ! ! ! !
அடுத்த பாராவுக்குப் போனேன்..
’ பள்ளிப் பருவத்தில் நோயின் முதல் அறிகுறி தெரியலாம். மூளையில் ரசாயண மாற்றங்கள் சீராகி விட்டால் ஒரு தொந்தரவும் ஏற்படாது. சாதாரணமாகவே நடந்து கொள்வார்கள்; நல்ல படிப்பு, வேலை என்று நல்லபடி இயங்குவார்கள். மூளையில் ரசாயண மாற்றங்கள் ஏற்படும்போது, அவர்கள் செய்கிற விபரீதமான செய்கைகளே அவர்களை நோயாளியாக அடையாளம் காட்டும்.. புதிய சூழல், விஷ ஜூரம் போன்றவை இந்த ரசாயண மாற்றங்களைக் கொண்டு வரலாம்..!‘
உதய் என்ன மனநல மருத்துவரா?
திவாகர் மனநோயாளியா?
சரி, இந்த மாத்திரை என்ன செய்யும்??
குட்டிக் குட்டி தலைப்புகளில் நிறைய மருத்துவ மொழிகள்.. ! தலையை வலித்தது.. படித்துகொண்டே போனேன்..
‘ரத்தத்தில் நாற்பத்தெட்டு மணி நேரமிருக்கும்.. மூளையில் தொண்ணூறு மணி நேரம் இருக்கும்.. கல்லீரலால் வெளியேற்றப்படும்..
அடப் போங்கப்பா...!
பக்க விளைவுகள்:
பாதுகாப்பான மாத்திரைதான்.. அளவு அதிகமானால் (அதாவது.. நான் கணக்கிட்டேன்.. ஒரு இருபது மாத்திரைகளை ஒரே முட்டாக எடுத்துக் கொண்டால்) இதிலும் உருவம் தோன்றும்.. மன அழுத்தம் அதிகமாகி தற்கொலைக்கு முயல்வர்.. நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குள் வயிற்றைக் கழுவி, மருத்துவ உதவி அளித்தால் உடல் நிலை சீராகி விடும்..’
ஹூம்ம்.. விந்தையான அலோபதி..! ! நோய் என்ன செய்யுமோ, நோய்க்கான மருந்தும் அதைத்தான் செய்கிறது - அளவு அதிகமானால்..!
யோசித்துப் பார்த்தால் திவாகரின் மரணம் விபத்தாக இருக்கவும் வாய்ப்புள்ளது..
ஓட்டல் மானேஜர் தான் யாரையும் வெளியேற்றவில்லை என்கிறார்.. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு புரோகிராமுக்கு ஓட்டலின் அடுத்தடுத்த மூன்று அறைகள் தேவைப்பட்டன. அதில் ஒரு அறைதான் காலியாக இருந்தது. மானேஜர் ஒரு ஜொள்ளு பார்ட்டி. நாங்கள் பூச்செண்டுப் பெண்கள் கேட்கிறபோது இல்லையென்றா சொல்ல முடியும்?? ஒரு மணி நேரத்துக்குள் நாங்கள் கேட்டது கிடைத்தது. மானேஜரால் வெளியேற்றப்பட்ட நடுத்தர வயது வாடிக்கையாளர் மானேஜரை திட்டித் தீர்த்தது இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது..!
ஆக, ஓட்டல் மானேஜரால் திவாகரும் உதய்யும் வெளியேற்றப்படுவது சாத்தியமே..!
உதய் வேறு பெயரில் ஓட்டலில் தங்கியிருந்திருக்கலாம்..
இந்த உதய், அய்யாக்கண்ணுவின் தம்பி மகனாக இருக்க வேண்டும்.. கரோலின் பங்களா சாவி அவரிடம் இருக்க வேண்டும்.. நவீன வசதிகளுக்காக ஓட்டலில் தங்க வந்திருக்கலாம்..
போன இடத்தில் திவாகருக்கு மனநோய் உண்டாகி இருக்கலாம்.. உதய் கவனித்துக் கொண்டிருக்கலாம்.. திவாகர் சரியானதும் உதய்யே வாடகைக் காரிலேற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கலாம்..
அலைபேசி இயங்காதபோது உதய் எங்களைத் தொடர்பு கொள்ள வழியில்லை..!
யாரோ ஒரு உதய் திவாகருக்கு ஏன் கெடுதல் செய்யப் போகிறார்? அவர் திருட்டுத்தனமாக கரோலின் பங்களாவில் தங்கியிருக்கிறார்.. உண்மை விலாசம் கொடுப்பாரா என்ன?
மதியத்துக்கு மேல் திவாகருக்கு எதிர்பாராத விதமாக இன்னொரு அட்டாக் ஏற்படுகிறது.. அது அவர் உயிரைக் குடித்து விடுகிறது..!
கல்யாணமாகி மனைவி இல்லாவிட்டால் ஆண்கள் அவர்களுடைய சொந்த வீட்டில் கூட கவனிக்கப்படுவது இல்லை..!
என் மாமியார் மூட்டுவலி நோயாளி; மாமனாருக்கு அடிக்கடி மயக்கம் வரும்..! என் கணவருக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டிருந்தால் என் மாமியாரோ மாமனாரோ நிச்சயம் கவனித்திருக்கப் போவதில்லை..! பள்ளிப் பருவத்தில் மனநோய் வந்து குணமாகியிருந்தால் அதை யாரும் வெளியில் சொல்ல மாட்டார்கள்..
இருப்பினும்........
மதுக் கடைக்குச் சென்று விஸ்கி குடிக்கத் தெரிந்த திவாகருக்கு, வெளியில் சென்று பொதுத் தொலைபேசியில் என்னோடு பேச முடியவில்லையா ??? மனநோய்ப்பட்டு நான் அருகிலிருக்கிற பிரமையில் திவாகர் இருந்திருப்பார் என்றால் விஸ்கி வாடை எப்படி வந்தது ?? ஒரு மனோ தத்துவ மருத்துவர் நோயாளி வாயில் விஸ்கியை ஊற்றுவாரா என்ன ???
குளிர் பிரதேசம்.. இக்காலத்தில் காபி டீ குடிப்பது போல் சில ஆண்கள் மதுவைப் பயன்படுத்துகிறார்கள்.. !
எப்படி இருந்தாலும் ஆபிஸ் வேலையை கவனிக்கிற திவாகர் மூடு இருந்தால்தான் வீட்டுப் பொறுப்பை எடுத்துக் கொள்வார்..! இல்லாவிட்டால் இல்லைதான்..! வீட்டுக்குத் தகவல் சொல்வது வீட்டுப் பொறுப்பில் அடங்கும்..!
சிந்திக்க, சிந்திக்க என் மனதுக்கு பெரிய தப்பாக எதுவும் படவில்லை..!
பாவம் திவாகர்..! அப்பா என் மாமனாரிடம் அவ்வளவு கடுமையாக நடந்து கொண்டிருக்கக் கூடாது..!
ஏதோ ஒரு வகையில் மனம் அமைதியானது. கரோலின் பங்களாவை நன்றாகச் சுற்றிப் பார்த்தது நல்லதாயிற்று.. இல்லாவிட்டால் என் மனசாட்சி என்னைக் கொன்று தின்றிருக்கும்..!
அலைபேசி அடித்தது- மோகன்..
நான் கொடுத்த விலாசத்தில் உதய் என்ற பெயரில் யாருமில்லை என்று சொன்னான். எதிர் பார்த்ததுதானே..?
“ வைத்தியநாதன், பொன்னம்பலம், கெங்கம்மாள், விசாலாட்சி, குமரன், தாரணி அப்புறம் ஒரு குட்டிப் பாப்பா- அவங்கதான் இருக்காங்க.. சொந்த வீடு.. பன்னெண்டு வருஷமா அங்கதான் இருக்காங்க..” என்று மோகன் பட்டியலிட்டுக் கொண்டே செல்ல, நான் சிரித்து விட்டேன்..!- திவாகரின் மரணத்துக்குப் பிறகு முதன் முதலாக..!
“போதும், போதும் மோகன்.. தாங்க்ஸ்..! ”
“சரண்யா, நான் ஒண்ணு கேட்கவாங்க?? ”
“ ஊம்.. ” என்றேன். மோகன் இப்போதெல்லாம் “வாங்க, போங்க” என்றுதான் என்னைக் கூப்பிடுகிறான்..!
“உங்களுக்குக் கிடைச்ச அரசாங்க வேலையை விட்டுட மாட்டீங்களே ?? ”
அடடா..! வேலையென்ற ஒன்று இருக்கிறதே? மாமியார் வீட்டிலிருந்து பிய்த்துக்கொண்டு வந்தாயிற்று.. கோயமுத்தூர் அரசு வேலையை என்ன செய்வது..? இப்போது விடுப்பில் இருக்கிறேன்.. விடுப்பு ஒருநாள் முடியத்தானே செய்யும்.?
நான் மனதார மோகனுக்கு நன்றி கூறினேன். எதை கவனிக்க வேண்டுமோ அதில் கவனம் திருப்பியதற்கு..!
வீட்டில் எனக்கு மறுகல்யாணம் பண்ணி வைக்கத் தீர்மானித்தனர்.. அதுவும் உடனடியாக..! அப்பா விளக்கினார்..! “ அதுக்கில்லே சரண்யா, வீட்ல ஒரு அசுப காரியம் நடந்தா ரெண்டு மூணு மாசத்துக்குள்ள சுப காரியம் நடந்துடணும்.. இல்லாட்டி ஒரு வருசம் முடியக் காத்திருக்கணும்.. உனக்கு உடனே நல்லது நடக்கணும்..! “
கல்யாணத்துக்கு வாங்கின கடனே இன்னும் தீரவில்லை.. நான் அப்பா அம்மாவுக்கு பெரிய பாரமாகி விட்டேன்..!
***
பாகம் 7 ஆ
மோகனின் டைரியில் எழுத நினைத்து, எழுதாதப் பக்கங்களிலிருந்து.....
சரண்யா சென்னைக்கே வந்து விட்டதாகக் கேள்விப்பட்டேன்.. கல்லூரித் தோழர்கள் சேர்ந்து துக்கம் விசாரித்து விட்டு வரலாம் என்று ஏற்பாடாகியது. சில ஆசிரியர்களும் எங்களுடன் வந்தனர். சரண்யா ஊரிலில்லை.. சோகம் கப்பிய அவள் கோலம் என் கண்ணில் படவில்லை என்பது எத்தனை பெரிய ஆறுதல்..!
அன்றைக்கு முகேஷ், ஓட்டல் கல்பனாவுக்கு டின்னருக்கு அழைத்திருந்தான். போனேன்.. கடல் உணவுகள் நன்றாக இருந்தன. சற்றுத் தயங்கி விஷயத்தை ஆரம்பித்தான்.. “சரண்யாவை மறு கல்யாணம் செய்துகொள்ளச் சம்மதமா ?? ”
என் உணர்ச்சிகள் எப்படிப் பிரவாகமாய் எழும்பி தாறுமாறாய் அடித்திருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்..!
சரண்யாவை உயிருக்குயிராய் விரும்பியது நான்..! அவளுக்காகத்தான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தேன்..! நூலிழையில் தவற விட்டேன்..
அடுத்தவன் மனைவி என்பதால் என் மனதைச் செருப்பாலடித்து கட்டுக்குள் வைத்தேன்..! அவளை மரியாதையாக நடத்தினேன்..!
படுகுழிக்குள் விழுந்து எழுந்து என் வாழ்க்கை சீராகிக் கொண்டிருக்கிறபோது.. மோகத்தைக் கிளறி விடுவது போல் இப்படியொரு கேள்வி..!
சரி என்பதா,வேண்டாம் என்பதா??
எனக்கும் செண்பகாவுக்கும் கல்யாணப் பேச்சு வேறு தொடங்கி விட்டது..!
“ என்னதான் ஆச்சு ?? “ கேட்டேன்.
“ ஊட்டிக்கு தேனிலவு போனாங்க.. தங்கச்சி இருந்தவரை ஒண்ணும் தொந்தரவில்ல.. ஆடி மாசம் வந்துடுச்சி.. தங்கச்சி வந்தப்புறம் திவாகர் ஏதோ பேய் பங்களாவுல தங்கிட்டு கோயமுத்தூர் போயிருக்கார்..
ராத்திரி பால்கனி சுவரிலிருந்து தவறி விழுந்து இறந்துட்டார்..! “
“ ஊட்டியில பேய் பங்களாவா?? தங்குறதுக்கு வேற இடமா கிடைக்கலே? திவாகர் கோயமுத்தூர்தானே? ஊட்டி தெரிஞ்சிருக்கணுமே..? “
“ திவாகருக்கு ஊட்டி புதுசாம்.. ! முன்னே பின்னே தெரியாத ஆளுக்கு பொண்ணு கொடுத்து பட்டது போதுங்க.. என்னன்னு விளங்கிக்க முடியாத அவஸ்தை இருக்கே..“
சர்வர் இரண்டு கப் சூப் வைத்து விட்டுச் சென்றான்.
“ போலிசுக்குப் போனிங்களா?? “
“ அப்பா வேணாம்னுட்டார்.. மிடில் கிளாஸ் பாருங்க..! “
முகேஷ் பேச்சை மாற்றும் விதமாகக் கேட்டான்..
“ ஆமா மோகன், நீங்க ஊட்டிக்குப் போனதுண்டா?? “
“ நம்ம சஞ்சாரமெல்லாம் சென்னையோடதான்.. சென்னையே ஒரு உலகம்தானே? இங்க என்ன இல்ல?? ஊட்டியோட குளுகுளுப்பு, தார் பாலைவனத்தோட வெயில்.. சென்னைய விட்டு எதுக்கு வெளியே போகணும்?? “
எங்கள் பேச்சின் நோக்கம் சென்னையல்ல.. ஆனாலும் சென்னையின் அருமை பெருமைகள் பற்றி நீண்ட நேரம் பேசினோம்..
முகேஷ் மீண்டும் விட்ட இடத்துக்கு வந்தான்.. “ என்ன பதிலே சொல்ல மாட்டேங்கிறீங்க மோகன்?? என் தங்கை செகண்ட் ஹாண்ட்-னு யோசிக்கிறீங்களா??? “
“ சே..சே.. “ என்றேன்.. “ நான் அப்படி யோசிக்கலேன்னாலும் வீட்டுல யோசிப்பாங்களே?? “ நாசுக்காக பதிலளித்தேன்..
முகேஷ் மேஜையைக் குத்தினான்.. “ பதினேழு நாள்.. பதினேழே நாள்.. கல்யாண மார்க்கெட்டுல செல்லாக் காசாயிட்டா என் தங்கச்சி ..! ! “
“ உங்க தங்கை கிட்ட இந்தக் கேள்வியைக் கேட்டீங்களா? “
“ மறு கல்யாணத்துக்கு சம்மதமான்னு கேட்டோம்..! எங்க குடும்பத்துல எல்லோருக்கும் பிடிச்சிருந்தா அவளுக்கும் பிடிச்ச மாதிரிதான்..! அவளை வற்புறுத்தி சம்மதிக்க வைக்க நானாச்சு..! “
“ அவங்களோட கணவர் அவர் மனசில இன்னும் இருந்தா ?? ”
முகேஷ் சிந்தனையில் ஆழ்ந்தான்.
“ திவாகர் மேல சரண்யாவுக்கு கொஞ்சம் கோபமிருக்கு..! நீங்க சொல்லுங்க மோகன்.....?? ”
“ ஒரு இடத்துல பேச்சு போயிட்டிருக்கு.. ! ரெண்டு நாள்ல சொல்றேனே ??? ”
முகேஷின் முகம் அப்படியே சுருங்கியது..! !
தொடரும்