மறுமலர்ச்சி
அழிக்கும் ஆயுதங்கள் பல அடுக்கடுக்காய் ஏந்திய உலகில் ஆயுதங்கள் பயன்படுத்த பழக வேண்டியுள்ளது அழிப்பதற்காக அல்ல;
தற்காத்துக் கொள்ளவே...
பயமென்ற வியாதியால் அடங்கி அடங்கி தனிமனிதன் விழிப்படையாமல் நாடென்று, இனமென்று, சாதியென்று, மதமென்று உருவெடுத்து அழிப்பு வேலைக்கு ஆயத்தமாகிறது இந்த உலகம்...
இனத்தலைவர்களும், சாதித்தலைவர்களும், மதத்தலைவர்களும்,
நாட்டுத்தலைவர்களும் கதாநாயகர்களாய் உருவெடுக்க எங்கும் ஒலிக்கிறது வெறியேற்றி மனிதநேயத்தை வேரறுக்கும் பாடல்கள்...
பகுத்தறிவுள்ள மனிதனை ஐந்தறிவு சிங்கமென்றால் அதைவிட ஒரு இகழ்ச்சியுண்டோ இவ்வுலகிலே
இகழ்ச்சியிலே மகிழ்ச்சி காணும் கூட்டம் நிறைந்திருக்க?
கட்டிளங்காளையானாலும் அளவுக்கு மீறிய சுமை பலமிழக்கச் செய்திடுமே;
அந்நிலையே இவ்வுலகிலெங்கும் பரவி செல்வச் செழிப்பாய் விளங்கிய பூமியின் செல்வமெல்லாம் இழக்கப்படுகிறதே...
அனைத்து ஆயுதங்களும் தீரக் கற்று நிமிர்ந்த தோளோடு அடக்க வருவதை அடக்கி,
அன்புக்கு அன்பாகி,
கருணைக்கு கருணையாகி ஞாலம் பாட, ஒலித்திடுமெங்கும் மறுமலர்ச்சி முரசொலி.