விதை

அன்று
விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள் உறங்குவதில்லை
இன்று
விதைகள் உறங்குவதால்
விவசாயி உறங்குவதில்லை
முளைத்து நிற்கவேண்டிய விதைகள்
இளைத்து நிற்கின்றன
விண்ணோக்கி
மரமாகவேண்டிய விதைகள்
மண்ணோக்கி
உரமாகின்றன
விதைகள்
விவசாயிகளின்
கண்ணீர்க் கவிதைகள்
நீர்வாய்ந்த பூமியில்
புதைக்கப்படும் விதைகள்
சில்லரைப் பணமாகின்றது
சீர் காய்ந்த பூமியில்
விதைக்கப்படும் விதைகள்
கல்லறைப் பிணமாகின்றது
நாடு முழுதும்
போதிமர விதையை விதைத்தாலும்
ஜாதி ஒழியப்போவதில்லை
நதிகள் இணையப்போவதில்லை
அணிகள் இணைந்துவிட்டன
இன்னும்
அணைகள் இணைந்தபாடில்லை
விளைச்சலை தரவேண்டிய விதைகள்
மன உளைச்சளைத் தந்துகொண்டிருக்கின்றன
விதைகளுக்குப் பச்சையைத்
தருவதற்காக
விவசாயி நீருக்காக
பிச்சை எடுத்துக்கொண்டிருக்கின்றான்
விதைகள் நீராட
இவன் போராடுகின்றான்
ஏர் உடைத்து
நீர் எடுத்து
வேர் பிடிக்கவேண்டிய
விதைகள்
சேர் எடுத்து
தூர் பிடித்துக்கொண்டிருக்கின்றன
விதை மரமானால்தானே
விண்ணிலிருந்து மழை வரும்
மண்ணுக்குள்ளே மர்மமானால் ?
விவசாயத்தின் சாயம்
குறைகின்றது
விவசாயிகளின் காயம்
நிறைகின்றது