வரமருள் விநாயகனே -கங்கைமணி
எண்ணம் யாவுமுனை
என்னும் நாளில், வினை
தன்னால் தீருமென
கண்டேன் விநாயகனே !
கண்ணீர் யாவுமுனை
கண்டால் வழிகிறதே !
கரும வினைகளதில்
கரைந்தே மறைகிறதே!
எல்லாம் இழந்தவனை
இன்பம் தொலைத்தவனை
இன்புற்றிருத்திடவே...,
என்றும் அருள்பவனே !
எங்கள் விநாயகனே !
செய்யார்.செயலறியார்
செய்யாமல் தானறியார்
செய்யும் செயர்சிறக்க ,செய் !
செயற் முதற்கடலே!
தர்மம் தழைத்தோங்க
தரணியில் நிலைத்தோங்க,
தந்தம் தானொடித்து
தந்தாய் பாரதத்தை.
தர்மம் மறந்துவிட்டோம்
தடம்புரண்டு வாழ்ந்துவிட்டோம்
தரித்திரம் தலைவிரிக்க-
தஞ்சமென தேடிவந்தோம்!
பகட்டு வாழ்க்கையிலே
பாதை மாறிவிட்டோம்
பண்பை இழந்துவிட்டோம்
பண்பாட்டை தவறவிட்டோம்.
ஈசன் முதற் மகனே !
எலிவாகனம் ஏற்றவனே.
எம்மை அருளுமையா
இம்மை போக்குமய்யா.
ஈன்றோர் மனம் குளிர
சான்றோர் எம்மைத்தழுவ
எல்லாம் அருளெமக்கு
ஏற்றம் பெறுவதற்கு.
தொடங்கும் செயலனைத்தின்
தொடக்கம் ஆனவனே!
தொடு உன் கரம்கொண்டு
தொட்டது துளங்குமென்று.
பானை வயிற்றோனே
பரம்பொருள் புத்திரனே!
பாலும் பசுநெய்யும்
படைத்தே வணங்குகிறோம்.
ஆளும் வர்க்கத்தை
அடக்கி நீ ஆளு!
அடங்கா அரசியலை
அதட்டி நீ கேளு !
பழுத்தோர் அறிவுரையை
பின்பற்றும் மனமிருக்கு.,
பாச வலை பின்னும்
பக்குவம் கொடு எமக்கு.
சுயத்தை இழக்காத
சுயநலம் பேனாதா
பொதுநலக் கடன் செய்யும்
பொறுப்பினை வழங்கெமக்கு.
விழுந்தே வணங்குகிறோம்
வினைதீர்க்கும் ஆண்டவனே!
வந்து வரமருளு -
வாழ்வாங்கு வாழ்கவென்று.
-கங்கைமணி