வேகம் விவேகமல்ல

மழையில் நனைந்த மண்ணும் மணக்க
ஈரம் சொட்டும் இலைகளின் மரங்கள்
ஒத்தையடிப் பாதையில் பாதச் சுவடுகள்
புற்கள் இரு பக்கமும் தானே வளர்ந்து...

நம் நடைக்குப் போட்டியாய்
நத்தையும் கூட வர
நத்தையின் ஊர்வலத்தை
எட்டி நின்று பார்க்கின்றேன்...

என் போக்கில் நான் என்ற
நத்தையிடம் சில கேள்விகள் கேட்டேன்:

இத்தனை மெதுவாய் போகிறாயே
கேவலமாய் இல்லையா?
எறும்பு கூட வேகமாய்ப் போகுமே என்றேன்.
அவரவர் வேகம் அவரவர்க்கு என்றது.

கூட்டைத் தூக்கிக் கொண்டே அலைகிறாயே
கஷ்டமாய் இல்லையா என்றதற்கு
என் வீடே எந்தன் பாதுகாப்பு
சுகமான சுமை தான் வீடு என்றது.

மிருதுவான உடம்பிலே
கல்லும் மண்ணும் உரசுமே
வலிக்காதா என்றேன்.
வலி இல்லாமல் வழி இல்லை என்றது.

இன்னும் கேள்வி கேட்டு
என் நேரத்தை வீணடிக்காதே
மெதுவாய்ப் போனாலும்
சோர்வடையாமல் பயணிப்பேன் என்றது.

என் முன்னால் பலர் ஓட
என் பின்னால் பலர் ஓடி வர
நத்தையின் தீட்சண்யத்தில் நிம்மதியாய்
என் வேகத்தில் நான் சுமை கனக்காமல்...



எழுதியவர் : shruthi (22-Jul-11, 11:22 pm)
சேர்த்தது : shruthi
பார்வை : 352

மேலே