ஆண் பெண் காதல்

அன்று
காதல் எண்ணங்கள் எதுவுமில்லை
இருந்தும்
கன்னங்கள் கவனிக்க மறக்கவில்லை
அதில்
புன்னகை சிறு குழி வெட்ட
நான்
தடுமாறி விழ தெரிந்தேன்...
என்னை கடந்து செல்லும் அக்கணம்
கருவிழி ஒதுக்கி, பார்வை வீசி
ஒரு பாதி இதயம் உறயச் செய்தாய்...
உன்னை அணுக மனம் துடித்தது,
அடம் பிடித்தது
ஆண் கர்வம் அனுமதி மறுத்தது,
வீராப்பு பேசியது...
இருக்கை ஓரம் நானிருக்க
என்னருகே வந்து நின்றாய்
"மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்"
வெறும் கவிதை வரிகள் என்றிருந்தேன்
சத்தியமாய் பறந்தது அன்று.
அருகில் இருந்தும்,
அன்பாய் பேச
அலைபேசியே விதி...
கண் பேசும் வித்தையெல்லாம்
தானாய் கற்றது மதி...
காகிதம் மையிட்டு கடிதமாயினும்...
கடிதங்கள் சுமந்த – மை
யாவும் உண்மை...
மலர்கள் அவிழ்தல் காதில் அலரும்
மென்மை நடையிலும்...
உன்னைக் கண்டு வெண்ணிலவும்
பெண்மை பயிலும்...