அந்த ஏழு நாட்கள்

நேற்றுவரை தோழியாய் முகம் பார்த்து
அவள் சிந்திய புன்னகைகளை ரசித்து
ஆவலுடன் உணவை பகிர்ந்து ருசித்து
நேரத்தை நொடிகளாய் கழித்த நாட்கள் கானலானதோ???

அரும்பு மீசை மெல்ல தடவிப்பார்த்து
கண்ணாடியில் முகத்தை ரசம் தேய பதித்து
முகப்பருக்களை பார்த்து பதறி ஆசிரியரை பார்த்து சிதறி.......
பருவத்தின் திருவிளையாடலை என்னவென்று உறைப்பதோ!!!

தோழியாய் அவள் தோள்மீது கைபோட்டு நடந்தேன் அன்று....
வெட்கமும் நாணமும் அவள் மனக்கருவறையில் கூட பிரசவிக்கவில்லை போலும்....
அவளது குட்டை சீருடை பாவாடை கூட கவர்ச்சியை என்னுள் கக்கவில்லை.
வெள்ளைத்தோலும் குழிவிழும் கன்னமும் அழகாய் மட்டுமே பதிந்தன மனதில்...

ஏனோ ஏழு நாட்களாக பள்ளியில் அவளது உதயத்தை காணவில்லை.
மழை மேகம் கதிரவனை மறைத்தாலும் அவன் இருப்பது நிதர்சனமே...
அங்ஙனமே அவள் நாற்காலி காலியாய் இருந்தும் அவள் புன்னகை முகம் உணர்ந்தேன்...
அவளை காணக்கிடைக்காத விழிகளில் கண்ணீரும் காவிரி போல் வற்றியதை புரிந்தேன்....

அவளது சொந்த ஊர் கர்நாடக மாநிலத்திலோ?????

வந்தாள் ஒருநாள்.....
அந்நாள் அவளை காணாமல் நான் தவித்த எட்டாம் நாள்......
அந்த ஏழு நாட்கள்.....
நான்
ஆறறிவு இழந்து....
ஐம்புலன்களும் செயலற்று....
நாற்திசைகளும் மறந்து....
முப்பொழுதும் அவளை நினைவாய்.....
இருவிழிகளும் கண்ணீர் தட்டுப்பாடடைய கதறி.....
இருக்கும் ஓருயிர் இருந்தும் இறந்தவனாய்....

அப்பப்ப்பா....அவளை கண்டதும் விழிகளாலேயே அவளை தழுவி வரவேற்ற
என் மனதின் முதிர்ச்சியை என்னவென்று வருணிப்பது....
மொட்டாயிருந்த மலர் வண்டு தீண்ட மலர்ந்த
புறநானூறு உவமையை தமிழாசான் கற்பிக்கையில்
என் மனதிற்கு புலப்படாத அதன் அர்த்தமும் ஆழமும்
இன்று மலர்ந்த என் தோழியை கண்டதும் கற்பனையிலேயே புரிந்தது.....

தைரியமாக வாய்விட்டு வெளிவரும் என் வார்தைகளோ....
இன்று மௌனமாய் விழிகளை பேசவைத்து வேடிக்கை பார்க்கின்றன....
அவளாக வந்து பேசுவதாக இல்லை......
நானாக பேசவும் திராணி இல்லை......

அவளோ விலகிச்சென்று புன்னகைக்கிறாள்....
நானோ அவளது முகம் நோக்க நாணுகிறேன்....
அவளது தோளில் படர்ந்த என் கரங்கள்....
அவளுக்கு கைகுலுக்கக்கூட யோசிக்கின்றன......

சிவந்த அவளது கன்னங்களை இன்னும் சிகப்பாக்கும் புதுவித வெட்கம்....
என்னிடம் பேசாமல் விலகிப்போகும் அவளது புதிய நடவடிக்கை...
அருகிலிருந்தும் என்னை நிமிர்ந்து பார்க்காத அவளது விழிகள்...
தொலைவில் சென்று திரும்பிப்பார்த்து புன்னகைக்கும் அவளது இதழ்கள்...
குறுகிய அடிகளால் பாதையை அளக்கும் அவளது புதிய நடை....
குட்டை பாவாடை வளர்ந்து நீண்டு கெண்டை கால்வரை மறைத்த உடை....
பின்னால் தோள்பையில் மூச்சுமுட்ட தொங்கிய நோட்டுப்புத்தகங்கள்....
இன்று முன்னால் அவளின் மார்பை அணைத்து பற்றியிருக்கும் கரங்கள்....
அவளது குரலில் என்றும் இல்லாத ஒரு இனிமை....
எனது வாழ்விலோ என்றும் இல்லாத ஒருவித தனிமை.....

முன்பு ரசித்திராத பல செய்கைகளை மனதார ரசிப்பதா?
இல்லை என்னை விட்டு விலகிப்போகும் அவளை எண்ணி துடிப்பதா?
பாடங்கள் மூளையில் பதிய மறுத்தன...
பெற்றோரும் உற்றாரும் புதியவராய் தெரிந்தனர்...
அண்ணன் தங்கைகளும் அயலவராயினர்....
அடுத்த வீட்டு பசுபதி கூட பாகிஸ்தானியன் போலானான்...

அவளின் மலர்ச்சி தான் என் வாழ்க்கையின் முதல் பாடம்....
அவளின் விலகல் தான் நான் உணர்ந்த முதல் பிரிவு....
அவளின் கடந்தகால புன்னகைகள் தான் நான் சேர்த்த பொக்கிஷம்...
அவளின் பெயர் தான் நான் படித்த இனிய கவிதை....
அவளின் நட்பு தான் நான் வாழ்ந்த வசந்த காலம்.....
அவளின் விழிகள் தான் நான் கண்ட பிரகாச விடியல்....

புன்னகையில் என்றும் இல்லாத காதல்....
பார்வையில் என்றும் இல்லாத காமம்....
அவளோ பருவமடைந்த சித்திரமானாள்.....
நானோ துணையில்லாத துருவ நட்சத்திரமானேன்......
மங்கையாய் இருந்த அவள் மடந்தை ஆனாள்....
நானோ......விடை இல்லாத விடுகதை ஆனேன்....

--------ஜெயராம்------------

எழுதியவர் : ஜெயராமன் (31-Aug-17, 1:48 pm)
Tanglish : antha ezhu nadkal
பார்வை : 544

மேலே