ஓணம் சிறப்புக் கவிதை கலாச்சாரக் கதகளி -------படித்ததில் பிடித்தது

இதொன்றும்
பிள்ளை விளையாட்டில்லை

சொரசொரப்புத் தூரிகைகள்
முகத்தைச் சுவராக்கி
பல மணிநேரம்
ஓவியம் வரையும்.

பிரத்யேக ஒப்பனை ஆடை
பிராணனை
பிழிந்தெடுக்கப் பிரியப்படும்.

செண்ட,
மத்தாளம், சிஞ்சில
என
இசைக்கருவிகளின்
அருவிக்குள் அரங்கேறும்
எங்கள் உதடுவிலகா
ஊமை நாடகம்.

கைகளையும்
கண்களையும் விட அதிகமாய்
தசைகள்
பேச வேண்டும் இங்கே,

இலக்கியம்
இசை, நடனம், நடிப்பு
ஓவியம் என,
அத்தனை நவரசக் கலவைகளையும்
ஒற்றை சீசாவில்
ஒளித்து வைத்த கலைதானே
இந்தக் கதகளி.

கண்களையும்
கைகளையும்
அபினயம் பிடித்துப் பிடித்து
நடித்தாலும்,
நான்கு பேருக்காக
ஓர்
நாட்டிய மேடை இருக்கும்.

எங்கள் வறுமையின்
சுருக்கங்களை
இந்த
அடர் சாயங்கள்
மறைத்துக் கொள்வதே பெரும்
ஆறுதல் எங்களுக்கு.

ஆனாலும்
எங்கள் கண்களை மீறி
குதிக்கும்
கண்ணீர் கவலைகள் எல்லாம்
சாயங்களின் மேல் சில
சாலைகளை
இட்டுச் செல்லும்.

எங்கள் வேர்கள் எல்லாம்
கலாச்சாரக் காடுகளில்
ஆழமாய் கிடந்தாலும்,
கிளைகள் எல்லாம்
வெளியூர்க் காற்றையே
சுவாசித்துக் கிடக்கும் கவலை தான் எங்களுக்கு !

*

சேவியர் • கவிதை,

எழுதியவர் : (2-Sep-17, 2:24 am)
பார்வை : 75

மேலே