தனிமையான இரவுகள்
என்னவாயிற்று இந்த இரவிற்கு..
இடைவிடாத இருமல் சப்தத்தில்,
தூரத்தில் எதிரொலித்த நாய்களின் குரைப்பு சப்தம் அமுங்கியிருந்தது.
போர்வையை மீறி கொண்டு உள் புகுந்த குளிர்காற்று,
உடற்சூட்டை அதிகப்படுத்தி வெடவெடக்க வைத்துவிட்டு செல்கிறது.
எடுத்து கொடுக்க ஆளின்றி மாத்திரையும் வெந்நீரும் சமையலறையில் அயர்ந்து தூங்குகிறது.
விதவிதமான உணவு பதார்தங்களின் மீது கண்கள் மேய்ந்து பின்பு,
ரொட்டி துண்டிலும் பாலிலும் நிலைகுத்தி நிற்கிறது.
நான்கு சுவர்களின் அடைப்புக்குள் மோட்டுவளையை பார்த்தவாறே ஏதோ சிந்தனை வயப்பட்டு கிடக்கிறது.
இடையூறாய் இருக்குமென்று விளக்கையும் அணைத்து விடலாமென்றெண்ணி எழுந்திரிக்க முயன்று,
தடுமாறி படுக்கையில் விழுந்து கண்களை இறுக்க மூடியதும் இருள் சூழ்ந்தது.
ஒவ்வொருதரின் சம்பிரதாயமான விசாரிப்புகளுக்கும் புன்னகையை உதட்டில் தோய்த்து பதிலளித்ததுலேயே களைப்புகளெல்லாம் முதுகில் சௌகரியமாய் சவாரி செய்து கொண்டிருந்தது..
இன்றைய இரவை கழித்து விட்டால் போதுமென்று வலியில் உழன்று கொண்டிருந்தவனின் கண்ணில் பட்டான்..
மனைவியை இழந்த வயோதிக கிழவனொருவன்...
ஆம்,இருவரின் இரவும் பெரும் பாவத்தில் திளைத்து மூச்சையற்று கொண்டிருந்தது..