குருவாயூரும் யேசுதாஸும்

குருவாயூரும் யேசுதாஸும்

---------------------------------------------------------------------------
ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா?
அன்புள்ள ஜெ..

உரிய மாண்பை கடைபிடிப்பதாக உறுதியளித்தால் மாற்று மதத்தினருக்கும் ஆலய அனுமதியில் சிக்கல்வராது என சொல்லி இருந்தீர்கள்.. ஆனால் ஜேசுதாசுக்கு அனுமதி மறுப்பது நெருடல். என் கேள்வி அது அல்ல

சமீபத்தில் அவர் சபரிமலை சென்றதையும் அவருக்கு கிடைத்த பக்திபூர்வ உணர்வு ரீதியான மரியாதையையும் பலர் வாட்சப்பில் ஷேர் செய்து கொண்டாடினர்…சங்கீத நிகழ்ச்சிகளில் எத்தனையோ பேர் வந்து போனாலும் ஜேசுதாஸ் பல வருடஙகளாகபெற்று வரும் மக்கள் ஆதரவு வேறு யாரும் பெற்றிராதது என இசை ஆர்வலர்கள் சொல்லிக் கேட்டுள்ளேன்.. தமிழகத்தில் அவருக்கு இருக்கும் இந்த செல்வாக்கால்தான் சில மலையாளிகள் அங்கு காழ்ப்புணர்ச்சியுடன் நடத்துகிறார்களா என அறிய விழைகிறேன்..

ஒரு கூட்டத்தில் விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைக்குமாறு சொன்னபோது அமைச்சர் ஒருவர் அது தன் மதத்துக்கு எதிரானது என சொல்லி மறுத்துவிட்டார்.. அதை எதிர்த்து வெளி நடப்பு செய்தவர் ஜேசுதாஸ். அதை தமிழ் நாட்டில் பிரமிப்பாக பார்த்தனர்… கேரளாவின் எதிர்வினை தெரியவில்லைஅவரை சில கேரள ஆலயங்களில் அனுமதி மறுக்க காரணம் தனிப்பட்ட பிரச்சனைகள் என யூகிக்கிறேன்…அவரை கேரளாவில்எப்படி பார்க்கிறார்ககள் என அறியவிழைகிறேன்

பேரன்புடன்
பிச்சை

***



அன்புள்ள பிச்சைக்காரன்,


யேசுதாஸ் குருவாயூர் செல்வதைப்பற்றிய சர்ச்சை எளிதானது அல்ல. அங்கே சட்டையைக் கழற்ற மறுத்தமைக்காக ஜனாதிபதியை உள்ளே செல்ல அனுமதி மறுத்திருக்கிறார்கள்.


கேரள ஆலயங்களுக்கும் தமிழக ஆலயங்களுக்குமுள்ள வழிபாட்டுமுறை வேறுபாட்டை புரிந்துகொள்ளவேண்டும். தமிழக ஆலயங்கள் அர்ச்சனை முறை வழிபாடு கொண்டவை. நீராட்டுதல். மலர் அளித்தல், ஆடை அணிவித்தல், தூபம் காட்டுதல், சுடர்காட்டுதல் , விசிறுதல் உட்பட 16 வகை உபச்சாரங்கள் வழியாக இறைவனை வழிபடுகிறார்கள். இவை ஓர் அரசனுக்குச் செய்யும் பணிவிடைகள் போன்றவை.


இவை ஒருவகையான உளஉருவகங்கள். இவற்றை பாவபக்தி என்கிறார்கள். இவற்றுக்கான ஆகமநெறிகள் இங்குள்ளன. பொதுவாக கூடி வழிபடுதல் என்பதே இவற்றின் முறை.இவற்றைச் செய்வதனூடாக பக்தன் அடையும் உளநெகிழ்வும் நிறைவுமே முதன்மையானது என கொள்ளப்படுகிறது. பக்தியில் நெகிழ்ந்து கண்ணப்பன் எச்சிலை அளித்ததும் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது பக்திமரபின் நம்பிக்கை.



கேரள ஆலயங்கள் முதன்மையாக தாந்திரீக வழிபாட்டுமுறை கொண்டவை. அவை முன்பு இருந்த தாந்த்ரீக மதங்களில் இருந்து வந்த சடங்குகள். அந்த தாந்த்ரீக மதங்கள் அவற்றுக்கும் முன்பிருந்த பழங்குடிச்சடங்குகளில் இருந்து அவற்றை கொண்டிருக்கலாம். பல்வேறுவகையான உருவக, குறியீட்டுச் செயல்கள் என இவற்றைச் சொல்லலாம். படையல், பலி, மந்திரம், சைகைகள் என பலவகையான செயல்பாடுகள் இவற்றில் உண்டு.


இவற்றின் உருவகமே வேறு. ஒரு மருந்து உடலில் எதிர்வினையாற்றுவதுபோல அவை புடவியின்பெருநெசவில் மறுவிளைவை உருவாக்குகின்றன என்பது அவற்றின் நம்பிக்கை. அங்கே பக்தனே இருக்கவேண்டிய அவசியமில்லை.ஆகவே சடங்குகளில் மிகச்சிறிய மாற்றமோ சமரசமோகூட செய்யமாட்டார்கள்


இந்தப்பிரிவினை முழுமுற்றானது அல்ல என்பதையும் சொல்லிவிடுகிறேன். இங்குள்ள பாவபக்தி சார்ந்த ஆலயங்களிலும் தாந்த்ரீகச் சடங்கு அம்சங்கள் உண்டு. அங்குள்ள தாந்த்ரீகச் சடங்குகள் சார்ந்த ஆலயங்களிலும் பாவபக்திக்கான இடம் உண்டு. நான் ஓங்கிநிற்கும் கூறுகளைப்பற்றிச் சொல்கிறேன் ராஜராஜசோழன் காலத்தில் கேரள ஆலயங்களில் தமிழகத்திலுள்ள ஆகமபூசனைமுறை கட்டாயமாக அமல் செய்யப்பட்டது. கேரளம் சோழர் ஆட்சியிலிருந்து மீண்டபோது தாந்த்ரீக முறை மீண்டும் கொண்டுவரப்பட்டது. ஆனால் பக்திமுறை ஓரளவு நீடித்தது.


பக்தி ஒரு பாவம் என்பதனால் சமரசங்களுக்கு இடமுள்ளது. தாந்த்ரீகமுறை என்பது ஒரு குறியீட்டுச்செய்ல். சமரசம் என்றால் அதன் குறியீட்டுத்தன்மையே இல்லாமலாகிவிடும். ஆகவே இங்குள்ள சமரசங்கள் கேரள ஆலயங்களில் கிடையாது. நெறிகள் பெரும்பாலும் மாற்றமில்லாமல் கறாராகவே பேணப்படுகின்றன. ஒரு பொருளுக்குப் பதில் இன்னொரு பொருள் ஏற்கப்படுவதில்லை. ஒரு நாளுக்குப்பதில் இன்னொரு நாள் ஒப்புக்கொள்ளப்படுவதில்லை. ஏன், பெரும்பாலான ஆலயங்களில் பல நூற்றாண்டுகளாக ஒரு சில குடும்பங்களே அர்ச்சகர்கள். அவர்களுக்கு மிகக்கடுமையான நோன்புகளும் குலநெறிகளும் உண்டு. பிராமணர்களோ வைதிகர்களோ ஆயினும் இன்னொரு குடும்பத்தினர் பூசைக்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஆலயங்களுக்கு அவற்றுக்கே உரிய பூசைமுறைகளும் தனிச்சடங்குகளும் உண்டு.



[குருவாயூர் அம்பல நடையில்

ஒருதிவசம் ஞான் போகும்

கோபுரவாதில் துறக்கும்

ஞான் கோபகுமாரனை காணும்]


யேசுதாஸ் 1960களில் குருவாயூருக்குள் நுழைந்து வழிபட விழைந்தபோது தன்னை இந்து வழிபாட்டு முறைகளில் நம்பிக்கை கொண்டவர் என்றும் ஆலயச்சடங்குகளுக்கு ஆட்படுவதாகவும் அறிவிக்க மறுத்தார். அதற்கான தேவை இருப்பதாக தான் நினைக்கவில்லை என்று அவர் சொன்னார். அதற்கு அன்று அவருக்கு அவருடைய திருச்சபை அளித்த அழுத்தம் ஒரு காரணம். அவர் தன் பிள்ளைகளை ஞானஸ்நானம் செய்விக்கவேண்டியிருந்தது. அதுவே அன்றைய விவாதம்.


குருவாயூர் ஆலயம் தன் சடங்குகளை விட்டுக்கொடுப்பதில்லை. திருச்சபையும் கறாராக இருந்தது. அதுசார்ந்த பல விவாதங்கள் அன்று நடந்துள்ளன. பொதுவாக கேரள மக்கள், அறிவுஜீவிகளின் ஆதரவு யேசுதாஸுக்கே இருந்தது


ஆனால் சில ஆண்டுகளுக்குப்பின் யேசுதாஸ் இந்து வழிபாட்டுமுறைகளிலும் நம்பிக்கை கொண்டவராக அறிவித்தார். திருச்சபையின் இறுக்கமும் தளர்ந்தது. அவர் கத்தோலிக்கராக, யேசுதாஸாகவே , நீடிக்கிறார். ஆனால் ஆலயச்சடங்குகளுக்கு உடன்படுவதாக அறிவித்தபின் அவர் ஆலயத்தில் முதன்மைவிருந்தினராகவே வரவேற்கப்பட்டார். பலமுறை ஆலயத்திற்குள் சென்றிருக்கிறார் என்பது மட்டும் அல்ல, பாடவும் செய்திருக்கிறார்


கேரளத்தில் யேசுதாஸ் ஒரு பண்பாட்டு அடையாளம். மதங்களைக் கடந்த பொதுச்சின்னம். ஓணத்துக்கும் யேசுதாஸுக்கும் மதமில்லை என்று ஒரு பழைய சொற்றொடர் உண்டு. யேசுதாஸ் குருவாயூருக்குள் அனுமதிக்கப்படாதபோது கேரள மக்களில் மிகப்பெரும்பாலானவர்கள் யேசுதாசையே ஆதரித்தனர். ஆனால் கேரள ஆலயங்களைப் பொறுத்தவரை அவ்வாலயத்திலுள்ள தந்த்ரிகள் என்னும் குழுவினரின் சொல்லே இறுதியானது. நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்படும் மரபுதான் அங்குள்ள வழிபாட்டுமுறையின் அடிப்படை.


ஜெ

எழுதியவர் : (4-Sep-17, 10:36 pm)
பார்வை : 50

மேலே