நொய்யல்

மண்ணில் பிறந்து
மலையில் தவழ்ந்து
மழைநீர் சுரந்து
வானவில் கரை உடைத்த
வயங்கிழை நீ தான்!!
நொய்யலே நீ சிரித்தால்
நொடிந்திடும் எம்
மனம் மையலிலே
தையலே நீ நடந்தால்
தரைகள் கூட கரைகள் தான்!!
நொய்யல் கரை
தென்றல் தொட்டால்
தேகம் கூட சிறையில் தான்!!
நகைப்பது ஏன்? நொய்யலே
கண்ணகி சிலம்பை
களவாடி வந்தாயோ?
பார்வையிலே அச்சமென்ன?
பாண்டியன் படையெடுப்பா!
கல்லிலே அணை போடவா?
அணையிலே சிறைபடுமா
உன் அழகு!
வயலோரம் நீ வர
வளர்ந்திடும் உலகு!
பனையும் சுனையும்
பகிர்ந்திடும்
சுவையில் ஒன்று!
நதியும் கவியும்
எழிலாய் பாய்வது நன்று!
நதியும் தமிழும்
சேர்ந்திடும் நேரம்
தாகம் தீர்க்கும் மேகம்!
எங்கே வலையிட்டாய்?
உன்னிடம்
இத்தனை மீன்கள்!
மீன்கள் உன்னுள் துள்ளுவதால் நீயும்
மீனாய் துள்ளுகிறாயோ
கடலின் அலையில்!!
முள்ளும் கள்ளும்
தைத்திடும் போது
வந்த தள்ளாட்டம்!
கரை தொட்டு வந்த நீரோட்டம்
உடலில் வந்து
அது உயிருட்டும்!!
நீருக்கென்ன ஆடை? அது
கரை நிறைந்து
நுரைத்த ஓடை!!
முள்ளில் பட்டும் கிழியாது
மூடியிட்டும் ஓயாது
பாடி வந்த ஓசை
இசை பாட வந்த ஓடை!
தென்னைமரம் தேகம்
தொட்டு இளைத்தாயோ
பனைமர பாதம்
தொட்டு வெளுத்தாயோ!
கரைகள் புறமிருக்க
காலம் நிறைந்திருக்க
நுரையால் கரை
தொட முனைந்தாயோ?
வெடித்த பாதத்தில்
வெண்தாமரை பூக்குது
கரையின் ஓரம்
காவியம் பிறக்குது
நொய்யலே உன் பொன்நடையால்!!
நெய்தலின் நுழிழையில்
கவிதை நெய்கிறது நொய்யல்!
துடிக்கும் இதயமே
துயில் கொள்
நொய்யலின் மடியில்!
மரிக்கும் வரைக்கும்
நன்றி சொல் !
இந்த நதிக்கு.....

எழுதியவர் : ரகுபதி (12-Sep-17, 6:13 am)
Tanglish : noyyal
பார்வை : 584

மேலே