கண்ணோட்டம்

இந்தக் கண்ணோட்டத்தின் மிச்சம்
கனவில் தொடருமோ ?

காற்று புகாத இடைவெளியில்
கவிதை புகாத மனவெளியில்
நேற்றை நாளையை நாம்மறந்து
நீச்சல் இட்ட அப் பெருவெளியில் !
மாற்றம் செய்திட முடியாமல்
மனமோ விலகிடத் தெரியாமல்
ஆற்றுப் படுகையில் மரவேராய்
அணைத்துப் பிணைந்திட நிற்கையிலே

இந்தக் கண்ணோட்டத்தின் மிச்சம்
கனவில் தொடருமோ ??

ஈரக் கண்கள் ! இமையிரண்டும்
இதயம் நனைக்கும் மேகங்களாய் !!
தூரம் தூரம் சென்றிடவே
தொலைவில் பார்க்கும் ஏக்கங்களாய் !!
காரும் மழையும் இடிமின்னல்
காட்டும் இரவும் நமக்காகப்
போரை நிகழ்த்தி ஒலியெழுப்பப்
போகச் சத்தம் நாமிசைக்க !

இந்தக் கண்ணோட்டத்தின் மிச்சம்
கனவில் தொடருமோ ??

உதட்டு வரிகளை உறிஞ்சிடவும்
ஊமைக் கழுத்தைக் கவ்விடவும்
அதட்டும் கண்கள் அடங்கிடவும்
அன்பளிப்பாய் உடல் அமைந்திடவும் !
கதவாய் இருந்த நாணம் எல்லாம்
கவலையில் மூலை தனிலமர்ந்து
மிதமாய்த் தலையில் அடித்தபடி
மீட்டும் நம் நாடகம் காண்பதுவும் !!

ஆம்
இந்தக் கண்ணோட்டத்தின் மிச்சம் !!
ஊஹும்...
மிச்சமல்ல
மொத்தமும்
கனவில் தான் தொடருகிறது !!

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (13-Sep-17, 8:18 pm)
Tanglish : kannottam
பார்வை : 74

மேலே