பட்டம்மாள் – ஒரு சமூக நிகழ்வு -------படித்தது --மலரும் நினைவுகள்
தனிப்பட்ட வேலைகள் காரணமாகக் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பயணங்கள் மேற்கொள்ளும்படியானது. பெரும்பாலும் திட்டமிடப்படாத பயணமாக இருப்பதால், தமிழக அரசுப்பேருந்துகளில்தான் பயணங்கள் மேற்கொள்கிறேன். ஒவ்வொரு பேருந்திலும், இரவாகட்டும், பகலாகட்டும் தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து தமிழ் சினிமா திரைப்படங்களாகவோ, பாடல்காட்சிகளாகவோ, துண்டுக்காட்சிகளாகவோ கசிந்து கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு முறை பயணம் ஆரம்பிக்கும்போதும் நடத்துநர் கர்மசிரத்தையாக ஒரு புதிய சினிமா சிடியை உள்ளே நுழைத்துப் பயணத்தை இனிதே ஆரம்பித்து வைக்கிறார். செயற்கையான வசனங்கள், காட்சிகள், வெட்டருவாளில் பொங்கி வழியும் ரத்தத் தெறிப்புகள், தலைக்கு மேலிருக்கும் சிறிய ஸ்பீக்கரிலிருந்து கரகரத்துக் கொண்டிருக்கும் சப்தங்கள். தமிழ்ச்சமூகம் சினிமாவுக்குள் கட்டுண்டு கிடக்கிறது. உலகின் எந்த ஒரு நிகழ்வுமே சினிமா தொடர்புடையதாக இருக்கும்போது மட்டுமே, அது தமிழ்ச்சமூகத்தின் கவனத்தைக் கவருவதாக இருக்கிறது.
சென்ற ஜூலை மாதம் 16-ஆம் தேதி மாலை அசுவாரசியமாய் அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது திரு.பாரதி மணி அவர்களிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி: “வருத்தமான தகவல்: டி.கே.பட்டம்மாள் மறைந்து விட்டார்”. உடனே அவரை அழைத்துப் பேசிவிட்டு பட்டம்மாளைப் பற்றிய நினைவுகளோடு அமர்ந்திருந்தேன். அச்சமயம் யதேச்சையாகத் தொலைபேசிப் பேசிய நண்பனிடம் “டி.கே.பட்டம்மாள் இறந்துவிட்டார்” என்றேன். “ஓஹோ?” என்றான். “நித்யஸ்ரீ மகாதேவனின் பாட்டி” என்றேன். “ஓ! அவரா? எப்படி? என்ன ஆச்சு?” என்றான்.
தொன்னூறு வயதில் மறைந்த கர்நாடக இசை மேதை டி.கே.பட்டம்மாளுக்கு அடையாளம் அவருடைய பேத்தி நித்யஸ்ரீ. சிறந்த கர்நாடக இசைக்கலைஞரான நித்யஸ்ரீயின் அடையாளம் அவர் தமிழ் சினிமாவில் பாடிய சில பிரபலமான பாடல்கள். தன்னிகரற்ற கர்நாடக சங்கீதப் பாடகியாக இருந்த டி.கே.பட்டம்மாள் ஒரு கலைஞராக மட்டுமல்லாமல், வரலாற்று, சமூக நிகழ்வாகவும் தமிழ்ச்சமூகத்தில் ஒரு முக்கியமான ஆளுமை. ஒரு மிகப்பெரிய சமூக மாற்றத்தின் ஆரம்பப்புள்ளியாக இருந்தவர் என்பதில் ஊடக வியாபாரிகளின் களிமண் பொம்மையாகியிருக்கும் இன்றைய தமிழகத்தில் எத்தனை பேருக்குக் கவனமும், சுவாரசியமும் இருக்கும் என்று தெரியவில்லை.
இன்று கர்நாடக இசை என்றாலே அது பிராமணர்களுடன் அடையாளப்படுத்தப்படும் ஒன்றாக இருக்கிறது. இயல்பாகவே பிராமணீயம் சார்ந்த விமர்சனங்களிலும், பார்வைகளிலும் கர்நாடக சங்கீதமும் சிக்கிக் கொள்கிறது. கவிஞர் சுகுமாரன் காலச்சுவடில் கங்குபாய் ஹங்கலுக்கு எழுதிய அஞ்சலியில் “பட்டம்மாளுக்குக் குலப் பிறப்பு என்ற சலுகையிருந்தது” என்று குறிப்பிடுகிறார். வெறும் எண்பது வருடங்களுக்கு முந்தைய சமூக நகர்விலிருந்து எத்தனை மாற்றங்களைக் கடந்து நாம் வந்திருக்கிறோம்!
உண்மையில், நிலைமை தலைகீழான ஒன்று! பிராமணப்பெண் என்பதாலேயே பட்டம்மாள் இசையில் தீவிரமாக இறங்குவது சவாலான ஒன்றாக இருந்தது. பட்டம்மாள் காஞ்சிபுரத்தில் 1919-ஆம் வருடம் ஓர் ஏழ்மையான பிராமணக்குடும்பத்தில் பிறந்தவர். அக்காலத்தில் பிராமணர்கள் கர்நாடக சங்கீத ரசிகர்களாக இருந்தாலும், பல பிராமண ஆண்கள் கர்நாடக சங்கீதத்தில் ஜாம்பவான்களாக விளங்கினாலும், பிராமணப் பெண்கள் பாடுவது பெரும் அநாச்சாரமாகக் கருதப்பட்டது. ஏனென்றால் அக்காலப் பெண் பாடகர்களாக இருந்தவர்கள் அனைவருமே தேவதாசிகள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே பாடகிகள் அனைவருமே சமூகத்தால் தேவதாசிகளாகப் பார்க்கப்பட்டார்கள். விளைவு, பிற ஜாதிப் பெண்கள் பாடுவதை அக்குடும்பத்து ஆண்கள் தடை செய்தார்கள்.
இயற்கையிலேயே சிறந்த குரல்வளம் பட்டம்மாளுக்கு இருந்தது. ஒரு குடும்ப நிகழ்ச்சியில் சிறுமி பட்டம்மாளின் குரலைக் கேட்டுவிட்டு இப்படிப்பட்ட ஒரு குரலைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று எந்த ஒரு நிபந்தனையும் முன்வைக்காமல் தாமாகவே சங்கீதம் கற்றுக்கொடுக்க முன்வந்தார் ‘தெலுங்கு வாத்தியார்’ என்றொருவர். அக்காலத்தில் காஞ்சிபுரத்தில் சிறப்பானதொரு இசைச்சூழல் நிலவியது. காஞ்சிபுரம் நாயனா பிள்ளை தமிழகம் கண்ட இசை மேதைகளில் ஒருவர். அவருடைய கச்சேரிகளை நேரில் கேட்டு ரசிக்கும் வாய்ப்பும் பட்டம்மாளுக்கு நிறையவே கிட்டியது. நாயனா பிள்ளையிடம் நேரடியாக இசை கற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அவருடைய கச்சேரிகள் பட்டம்மாளுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தன; அவருடைய கற்பனைத்திறனையும், படைப்பூக்கத்தையும் வளப்படுத்தின.
பள்ளியில் நடந்ததொரு விழாவில் பட்டம்மாள் பாடியது பலர் கவனத்தையும் கவர்ந்தது. பள்ளித் தலைமையாசிரியை அம்முக்குட்டி அம்மா பட்டம்மாளைப் பெரிதும் உற்சாகப் படுத்தினார். பள்ளி விழா செய்தித்தாளில் பட்டம்மாளின் புகைப்படத்தோடு வெளியிடப்பட்டது. இக்காலப் பெற்றோர்கள் தொலைக்காட்சிகள் நடத்தும் இசைப்போட்டிகளில் தம் குழந்தைகளோடு அமர்ந்து ரசிக்கிறார்கள்; கண்ணீர் வடிக்கிறார்கள்; விம்மிப் புடைக்கிறார்கள். இன்னும் சில வருடங்கள் கழித்து எழுதப்படும் கட்டுரைகளில் பட்டம்மாளின் தந்தை கிருஷ்ணஸ்வாமி தீட்சிதர் செய்திக்குறிப்பைப் படித்து ஆனந்தக் குதூகலித்தார் என்று எழுதும் அளவுக்கு நம் சமூகப்பார்வை முன்னேறியிருக்கலாம். ஆனால் உண்மையில் கிருஷ்ணஸ்வாமி தீட்சிதருக்குக் கடுங்கோபம் வந்தது. பாட்டு, நடனம் இதற்காகவெல்லாம் பரிசு வாங்குவதோ, பிரபலமடைவதோ குடும்பப்பெண்கள் செய்யக்கூடிய காரியம் இல்லை. இதற்கும் மேலாக கொலம்பியா கம்பெனி பட்டம்மாளின் பாடலை இசைத்தட்டில் வெளியிட வேண்டுமென்று தீட்சிதரை அணுகியது. செய்திக்குறிப்புக்கே கொதித்தவருக்கு இசைத்தட்டு பெரிய கலாசார அதிர்ச்சியைத் தந்தது.
பட்டம்மாளைப் பற்றிய முதல் செய்திக்குறிப்பு.
நன்றி: பாரதியவித்யா பவன் வெளியிட்ட Ganasaraswathi D.K.Pattammal புத்தகம்
அதுவும் அப்போதுதான் HMV, கொலம்பியா என்ற இரண்டு பெரிய இசைத்தட்டுக் கம்பெனிகளும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுப் பல இசைக்கலைஞர்களின் இசைத்தட்டுகளை வெளியிட்டிருந்தன. புதிய, புதிய பாடகிகளைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டிருந்தன. இசைத்தட்டுகளை வரவேற்பதைக் குறித்து ஜாதி பாகுபாடு இல்லாமல் பலரிடமும் தயக்கம் இருந்தது. புகைப்படம் எடுத்துக் கொண்டால் ஆயுசு குறையும் என்ற மூடநம்பிக்கையைப் போலவே இசைத்தட்டுகள் குறித்தும் அச்சம் நிலவியது. கொள்கை ரீதியாகவும் பல பெரிய இசைக்கலைஞர்களுக்கு இசையைப் பதிவு செய்வது ஒப்புதலாக இருக்கவில்லை. ஆனால் இசைத்தட்டுகள் புதிய இசைக்கலைஞர்களுக்குப் பெரும் விளம்பரத்தையும், கவனிப்பையும் பெற்றுத் தந்தன. கிட்டத்தட்ட இருபது வருடங்கள் தமிழக இசைச்சூழலில் இசைத்தட்டுக் கம்பெனிகள் பெரும்பங்கு வகித்தன.
இப்படிப்பட்ட சூழலில் தீட்சிதரை சம்மதிக்க வைக்க அம்முக்குட்டி அம்மாளும், தீட்சிதரின் நண்பர் Dr.ஸ்ரீனிவாஸன் என்ற காங்கிரஸ் தலைவரும் பெருமுயற்சி எடுத்துக்கொண்டார்கள். பாடகிகளை தேவதாசிகளாகப் பார்க்கும் சமூகத்தில் தன் பெண்ணுக்கு எப்படித் திருமணம் செய்வது என்பது எந்த ஒரு தகப்பனுக்கும் இருக்கும் நியாயமான கவலைதான் தீட்சிதருக்கு இருந்தது. அப்போதுதான் Dr.ஸ்ரீனிவாஸன் ஒரு வாக்குறுதியைத் தந்தார். ஸ்ரீனிவாஸனின் வீட்டிலேயே தங்கி மேற்படிப்புப் படித்துக் கொண்டிருந்த ஈஸ்வரன் என்ற தன்னுடைய அக்கா மகனையே பட்டம்மாளுக்கு மணம் முடிப்பதாக வாக்களித்தார் ஸ்ரீனிவாஸன். இந்த வாக்குறுதி தீட்சிதருக்கு பெரும் பலத்தை அளித்தது. இத்தனைக்கும் Dr.ஸ்ரீனிவாஸனுக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். வீட்டிலிருக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளையை சங்கீதத்துக்காக விட்டுக்கொடுத்து பட்டம்மாளின் இசை வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தார் ஸ்ரீனிவாஸன். இந்த ஸ்ரீனிவாஸன் காஞ்சி நகர முனிசிபல் சேர்மனாகப் பதவி வகித்தவர். பெரும் காந்தியவாதி. மருத்துவர். காஞ்சி நகர மக்களின் பெருமதிப்பைப் பெற்றவர். (இந்த ஸ்ரீனிவாஸனைத்தான் ஒரு தேர்தலில் முதல்முறையாக வெற்றிகொண்டு அண்ணாதுரை தன் அரசியல் வாழ்க்கை ஆரம்பித்தார்.)
அம்முக்குட்டி அம்மாள், ஸ்ரீனிவாஸன் ஆகியோரின் பெருமுயற்சியால் மனம் மாறி கொலம்பியா கம்பெனியின் வேண்டுகோளுக்கிணங்கி இசைத்தட்டு வெளியிட சம்மதித்தார் கிருஷ்ணஸ்வாமி தீட்சிதர். அந்த இசைத்தட்டின் பெரும்வெற்றி பலர் கவனத்தையும் பட்டமாள் பக்கம் திருப்பியது. தமிழின் முதல் பெண் நாவலாசிரியரும், பெண்கள் சுதந்திரத்தையும் வலியுறுத்துபவராகவும் இருந்த வை.மு.கோதைநாயகி அம்மாள், சென்னையிலிருந்து தொடர்ந்து காஞ்சிபுரத்துக்குப் பயணங்கள் மேற்கொண்டு தீட்சிதரிடம் தொடர்ந்து பேசி வலியுறுத்தி பட்டம்மாளைக் கச்சேரிகள் செய்ய வைத்தார்.
கொலம்பியா இசைத்தட்டுகள்
நன்றி: Roja Muthiah Reasearch Library
இந்த ஒரு மாற்றத்துக்குப் பின் தீட்சிதர் தாமாகவே முன்வந்து பட்டம்மாள் முறையாக சங்கீதம் கற்றுக்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தார். இதுவரை தெலுங்கு வாத்தியார் சொல்லித்தந்த சில கீர்த்தனைகள் தவிர வேறு முறையான இசைப்பயிற்சியைப் பட்டம்மாள் பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடமிருந்தது இயற்கையான குரல்வளம், நாயனா பிள்ளை கச்சேரிகள் தந்த உத்வேகம் இவைதான்.
—oooOOOOooo—-
கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் இன்னொரு முக்கியமான சமுதாய மாற்றம் தமிழகத்தில் ஏற்படுகிறது. அது ‘தேவதாசி ஒழிப்பு இயக்கம்’ கொண்டுவந்த தேவதாசிகளைக் குறித்த விழிப்புணர்வு. இந்த விழிப்புணர்வால் ‘பொட்டுக்கட்டி விடுதல்’ என்ற தீமை அழிந்தாலும், ஏற்கனவே தேவதாசி வம்சத்தில் பிறந்து, கோயிலைச் சார்ந்து வாழ்ந்து கொண்டிருந்த தமிழகத்தின் ஆகச்சிறந்த கலைஞர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். அவர்கள் சமுதாயத்தால் உடலை விற்றுப் பிழைக்கும் விலைமகளிர்களாகப் பார்க்கப்பட்டார்கள். கோயில்கள் சார்பாக அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த நிலங்கள் பறிக்கப்பட்டன; பொருளாதார ரீதியான பாதுகாப்பு கைநழுவிப் போனது. தேவதாசிப் பெண்கள் திருமண பந்தத்துக்குள் வலுக்கட்டாயமாக இறங்க நேரிட்டது. அழகான, கலைகளில் மேதைகளாக விளங்கிய பெண்களுக்கு மட்டுமே திருமண பந்தம் கிட்டியது. பிற தேவதாசிப் பெண்கள் நடுத்தெருவுக்கு வந்தார்கள். வாழ்வாதாரமே பிரச்சினைக்குள்ளான போது அவர்கள் கலைகளில் லயிப்போடு ஈடுபடுவது இயலாமல் போனது. ஆகப்பெரும் இசை, நாட்டிய மேதைகளின் கலைப்பாரம்பரியம் அறுந்து போனது.
மேதைகள் மட்டுமே சூழலை உருவாக்க முடியாது, எந்தச் சூழலுக்கும் பல தரப்பட்ட மனிதர்களின் கூட்டு உழைப்பும், உரையாடல்களும், பங்கெடுப்பும், இயக்கப் பரிமாற்றமும் அவசியம் என்பது சூழல் இயல்பு பற்றிய அடிப்படை அறிவு. அந்தப் புரிதல் அங்கில்லை. அன்றுதான் இல்லை எனச் சொல்ல முடியாது, இன்றும் அது இல்லை. வெற்றி மட்டுமே வசீகரமாகத் தெரிந்த பண்பாடு வேரூன்றி இருந்தது. அதுவே இன்றும் தொடர்கிறது.
இப்படிப்பட்ட சூழலிலதான், பட்டம்மாளின் வரவு கலைக்கான புதியதொரு திறப்பை அளித்தது. தேவதாசிகள் மட்டுமல்லாமல் பிற பெண்களும் குடும்பவாழ்க்கைக்குள் இருந்து கொண்டே கலைத்துறையில் வெற்றிகரமாக ஈடுபடலாம் எனச் சமகாலத்தில் பல பெண்கள்-நாட்டியத்தில் ருக்மணிதேவி அருண்டேல், பாகவதத்தில் C.சரஸ்வதிபாய், கர்நாடக சங்கீதத்தில் டி.கே.பட்டம்மாள்-போன்றோர் நிரூபித்தனர்.
பாரம்பரியம் சார்ந்த மனத்தடையையும், பழமைவாதத்தையும் மீறுவதில் அக்காலகட்டத்தில் தீவிரமாக நிலவிய சுதந்திரப் போராட்ட இயக்கத்துக்கும் பெரும்பங்கு இருந்தது. பட்டம்மாளின் தந்தை கிருஷ்ணஸ்வாமி தீட்சிதர் விடுதலைப் போராட்ட நிகழ்ச்சிகளில் பற்று கொண்டவர்; தீவிர காங்கிரஸ் அபிமானி. பட்டம்மாள் பள்ளி நாட்களில் காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டங்களில் இறைவணக்கம் பாடியிருக்கிறார். அவ்வளவு கட்டுப்பெட்டியான நாட்களில் கூட பொதுக்கூட்டங்களில் எப்படி பட்டம்மாளால் பாடமுடிந்தது என்று கேட்டதற்கு “தேசபக்திக்கு முன்னால் வேறெதுவுமே தூசுதான். அதனால் தேசபக்திக் கூட்டங்களில் பாடுவதற்கு என் தந்தை எந்தத் தடையும் விதிக்கவில்லை” என்று சொல்கிறார் பட்டம்மாள். தேசத்துக்காக எந்த சமுதாய வழக்கத்தையும் மீறலாம் என்று நினைத்துப் பல சுதந்திரப் போராட்டக் கூட்டங்களில் தன் மகள் பட்டம்மாளை இறை வணக்கம் பாட வைத்திருக்கிறார் கிருஷ்ணஸ்வாமி தீட்சிதர். அதைப் போலவே பட்டம்மாள் ஒரு பாடகராகப் பரிமளிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த Dr.ஸ்ரீனிவாஸனும் காங்கிரஸ் உறுப்பினர்தான்.
இக்காரணங்களாலோ என்னவோ பட்டம்மாள் இறுதிவரை ஒரு பெரும் தேசியவாதியாகவே இருந்தார். 1947-இல் சுதந்திரதினத்தன்று ஆல் இந்தியா ரேடியோவில் அவர் பாரதியாரின் தேசபக்திப்பாடல்களைப் பாடினார். அதற்காக அவருக்குத் தரப்பட்ட சம்பளத்தை வாங்க அறவே மறுத்து விட்டார். அப்பாடல்களைப் பாடியதைத் தன் தேசக்கடமையாகக் கருதினார் பட்டம்மாள். தான் இறுதியாக அளித்த பேட்டியில் கூட இந்தியாவைப் பற்றிப் பேசும்போது அவரால் கண்கலங்காமல் இருக்க முடியவில்லை. பாரதியார் பாடல்களில் பெரிய அத்தாரிட்டியாகவே கடைசிவரை விளங்கினார் பட்டம்மாள். பாரதியாரின் ‘ஆடுவோமே, பள்ளுப்பாடுவோமே,’ ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’,’வெற்றி எட்டுத்திக்கும்,’ ‘விடுதலை, விடுதலை, விடுதலை,’ போன்ற பாடல்களைப் பிரபலப்படுத்தியதில் பட்டம்மாளுக்கும் முக்கிய பங்கு உண்டு.
—oooOOOooo—
எந்தத் துறையையும் போலவே இசைத்துறையும் அன்று ஆணாதிக்கம் நிறைந்த ஒன்றாக இருந்தது. “லய விவகாரங்களிலும், தாளக்கணக்குகளிலும் கவனம் செலுத்தும் அளவுக்குப் பெண்களுக்குக் கணிதநுட்பங்கள் கைவராது. ராகங்களை விரிவாகப் பாடும் அளவுக்கு அவர்களுக்கு கற்பனைத்திறன் கிடையாது.” போன்ற நம்பிக்கைகள் தீவிரமாக நிலவின. இந்த நம்பிக்கைகள், கோட்பாடுகளாகவும், கோட்பாடுகள் சம்பிரதாயங்களாகவும் மாறின. கர்நாடக சங்கீதத்தின் முக்கியமான அம்சமான ராகம்-தானம்-பல்லவியைப் பெண்கள் பாடவே கூடாது என்று ஒரு தீவிரமான கருத்து அந்நாட்களில் நிலவியது. அதை உடைத்தவரும் பட்டம்மாள்தான்.
பொதுவாகக் காஞ்சிபுரம் இசைக் கலாசாரம் லய விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்த ஒன்று. நாயனா பிள்ளை பாணியின் பாதிப்பு பட்டம்மாளிடம் பெருமளவு இருந்தது. பட்டம்மாள் பாடிய பல கீர்த்தனைகள் அச்சு, அசலாக நாயனாபிள்ளை பாடுவதைப் போல அமைந்திருந்தது. அந்த கிரகிக்கும் ஆற்றல் நாயனா பிள்ளையின் லய ஜாலங்களைப் பட்டம்மாளுக்குத் தந்திருந்தது. அதைப் போலவே பல்லவி பாடுவதற்கான உத்வேகமும் அவருக்கு காஞ்சி இசைச் சூழலிருந்தே கிட்டியிருக்க வேண்டும். (நாயனா பிள்ளையின் தாய் காமாக்ஷி அம்மாள்தான் முதல் முதலில் ராகம்-தானம்-பல்லவியைப் பாடிய பெண் என்று அறியப்படுகிறது.) திருப்பதி நாராயண்ஸ்வாமி நாயுடு, வித்யால நரசிம்மலு நாயுடு ஆகியோரிடம் கிட்டிய பயிற்சியும் பட்டம்மாளைப் பல்லவி பாடுவதில் பெரிய மேதையாக்கியது.
ஒரு பிராமணப்பெண் மேடையேறிப் பாடுகிறார் என்பதோடு மட்டுமல்லாமால், ஒரு பெண் ராகம்-தானம்-பல்லவி பாடுகிறார் என்பதை ஒரு அதிசயமாகப் பார்ப்பதற்காகவும் அக்காலத்தில் பட்டம்மாளின் கச்சேரிகளுக்குக் கூட்டம் வந்தது என்று அறிய முடிகிறது. திருவையாறு ஆராதனை விழாக்களை முன்னின்று நடத்திய 90 வயதான செல்லம் ஐயரிடம் பட்டம்மாளைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது பட்டம்மாளை அவர் அடையாளப்படுத்துவதே அவர் பாடிய பல்லவிகள் வழியாகத்தான் என்று அறிந்துகொண்டேன். மேலும், மாயவரம், கும்பகோணம் பகுதிகளில் கச்சேரிகள் நடந்தபோது பட்டம்மாளின் பல்லவி பாடும் திறனையும், அவர் தாளங்களில் செய்யும் கணக்குகளைக் கவனிக்கவுமே பல்லவியில் தேர்ந்த விமர்சகர்களும், ஆர்வலர்களும் வருவார்கள் என்றும் அவரிடமிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.
பட்டம்மாள் கிராமஃபோன் ப்ளேட்டில் பாடிப் பதிவு செய்த ஜகன்மோகினி பல்லவி வெகுபிரபலமான ஒன்று. ‘ஆல் இந்தியா ரேடியோ’ தன் கருவூலத்திலிருந்து தொகுத்துத் தந்திருக்கும் ஒரு இசைத்தட்டிலிருக்கும் ‘மாமவா பட்டாபிராமா’ என்ற மணிரங்கு ராகம்-தானம்-பல்லவி நிச்சயம் ரசிகர்கள் தவறவிடக்கூடாத ஒன்று. நடுங்காத, அழுத்தமான குரல்வளம் இருந்த இளமைக்கால பட்டம்மாளின் குரலில் அவர் பல்வேறு தாளங்களில் அனாயாசமாகப் பாடும் அந்த ஒரு பதிவே பட்டம்மாளின் இசையை ஆளுமையை முழுமையாகக் காட்டிவிடும். (பட்டம்மாளின் மணிரங்கு ஆலாபனையை இங்கே கேட்கலாம்.)
அந்த AIR பதிவு கூட பட்டம்மாளின் ஆரம்பகாலக் கச்சேரி கிடையாது. பெண் வித்வான்கள் ராகம்-தானம்-பல்லவி பாடி அதைப் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணமே அக்காலங்களில் ‘ஆல் இந்திய ரேடியோ’வில் நிலவவில்லை. திருமதி.இந்திரா மேனன் அதைத் தன்னுடைய ‘The Madras Quartet’ என்ற புத்தகத்தில் பதிவு செய்கிறார்:
“ஆல் இந்தியா ரேடியோ பெண்கள் பல்லவி பாடக்கூடாது என்ற ஆணாதிக்கவாதிகளுக்கு வால்பிடித்து வந்ததை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். வியாழன் மாலைகளில் அப்போதெல்லாம் ராகம்-தானம்-பல்லவி பாடப்படும். அதை மனதில் வைத்துக்கொண்டு ஒரு ஆவணப்படத்துக்காக 1940-களில் பட்டம்மாள் பாடிய RTP இருக்கிறதா என்று கேட்டேன். அந்த சமயத்தில் பட்டம்மாள் பாடிய RTP எதுவுமே இல்லை என்றார்கள். பட்டம்மாள் பாடிய ஜகன்மோகினி பல்லவி கிராமபோன் ப்ளேட்டைக் குறித்துக் கூறினேன். அதற்கு எனக்குக் கிடைத்த பதில்: பட்டம்மாள் அக்காலங்களில் RTP பாடியிருக்கலாம். ஆனால் வியாழன் மாலை RTP பதிவுகளுக்குப் பெண்களை அழைப்பதில்லை என்பதை ஆல் இந்தியா ரேடியோ கொள்கையாகவே வைத்திருந்தது.”
தமிழ்ப்பாடல்கள் இயக்கம் தீவிரமடைவதற்கு முன்னரே பட்டம்மாள் தமிழ்ப்பாடல்களைத் தொடர்ந்து மேடையில் பாடினார். பாரதியார் பாடல்கள், தேவாரம், திருப்புகழ், அருணாச்சலக் கவிராயர், நாமக்கல் கவிஞர் பாடல்களை அவர் நிறைய பாடினார். பாபநாசம் சிவனின் நேரடி சிஷ்யையாக இருந்து, அவருடைய பல படைப்புகளைக் கற்றுக் கொண்டார். கச்சேரியின் முதல் பகுதியில் தமிழ்ப்பாடல்களைப் பாடிய முதல் கலைஞரும் பட்டம்மாள்தான். பட்டம்மாள் தமிழ்ப்பாடல்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தந்திருந்தாலும், தமிழிசை இயக்கம் நடத்திய இசைக்கச்சேரிகளில் அவர் பாடவைக்கப்படவில்லை. அதைக் குறித்து தமிழிசை இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்த கல்கி கூட பின்னாட்களில், “பட்டம்மாள் தமிழிசை இயக்கக் கச்சேரிகளில் பாடவைக்கப்படாதது அவருக்கு அவமானமல்ல. அதைச் செய்யாத நமக்குதான் அவமானம்” என்கிறார்.
பட்டம்மாளின் காலப்பிரமாணம் மத்யம காலத்தில் அமைந்திருந்தது. (செளக்கம் – மெதுவாகப் பாடுவது; துரிதம் – வேகமாகப் பாடுவது; மத்யமம் – இரண்டுக்கும் நடுவாந்திரமாகப் பாடுவது). அதுவும் குரல் முதிர்ச்சியடைந்தபின் மத்யம காலத்துக்கு ஒரு புள்ளி கீழே எடுத்துக்கொண்டார். அவர் மேலெழுந்து வந்த நாட்களில் மத்யமகாலத்தைத் தாண்டிக் கொஞ்சம் துரிதகாலத்தில் பாடுவதுதான் இளைய கலைஞர்களின் அணுகுமுறையாக இருந்தது. ஆனால் பட்டம்மாள் அந்த ஃபாஷன்களில் சிக்காமல் மத்யமகாலத்தைத் தேர்ந்தெடுத்துப் பாடுமளவுக்கு முதிர்ச்சியடைந்தவராக இருந்தவர். இந்த காலப்பிரமாணம் வீணையின் இசையை ஒத்தது. பட்டம்மாளின் குரலும் வீணையின் ஒலியைப் போல கனமாகவும், அதே சமயம் இனிமையாகவும் இருந்தது. எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் குரலை ஷெனாயுடனும், எம்.எல்.வசந்தகுமாரியை நாதஸ்வரத்துடன் ஒப்பிடும் உஸ்தாத் படே குலாம் அலிகான், பட்டம்மாளின் குரலை வீணையின் கம்பீரத்தோடு ஒப்பிடுகிறார்.
முத்துஸ்வாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகள் பட்டம்மாளின் வீணைக்குரலில் அபாரமாக ஒலித்தன. உண்மையில் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் பெரிய களஞ்சியமாகவே விளங்கினார் பட்டம்மாள். சென்னைக்கு நேர்காணலுக்கு வந்திருந்த பட்டம்மாளின் குரலாலும், பாடுமுறையாலும் கவரப்பட்டு, அவரை வற்புறுத்தி சென்னையில் தங்கவைத்து தீக்ஷிதரின் பல கீர்த்தனைகளைச் சொல்லித்தந்தார் தீக்ஷிதரின் கொள்ளுப்பேரரான அம்பி தீக்ஷிதர். அம்பி தீக்ஷிதரின் மறைவுக்குப்பின் அவருடைய சிஷ்யர் T.L.வெங்கட்ராம ஐயரிடமிருந்துப் பல முத்துஸ்வாமி தீக்ஷிதர் கீர்த்தனைகளைக் கற்றுக் கொண்டார் பட்டம்மாள். கிட்டத்தட்ட நானூறு தீக்ஷிதர் கீர்த்தனைகள் பட்டம்மாளுக்குத் தெரியும் என்பது அவருடைய சீடர்கள் சொல்வது. த்யாகராஜயோகவைபவம், மாமவபட்டாபிராமா, ஸ்ரீ சுப்ரமணிய நம்ஸ்தே, மானஸகுருகுஹ போன்ற தீக்ஷிதரின் கீர்த்தனைகள் பட்டம்மாளின் தனிச்சிறப்பாக விளங்குபவை.
பட்டம்மாளின் உச்சரிப்பு மிகத் தெளிவாகவும், அழுத்தமாகவும் இருக்கும். குரல் இயற்கையிலே கனமாக இருந்தது. இசை ஆரம்பகாலங்களில் பட்டம்மாள் அதிகமாக இசை சார்ந்த நுட்பங்களில் அதிகம் கவனம் செலுத்தி, பாவத்தில் கவனமில்லாமல் இருந்ததாக ஒரு குற்றச்சாட்டும் இருந்தது. “எனக்கு 50 வயதாக இருக்கும்போது லய விளையாட்டுகளின் மீது இருந்த லயிப்பு விலகியது. பாவம்தான் மிக முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டேன். மேலும் பாடப்பாட ஒரு முழுமையான மனத்திருப்தி என்னை ஆக்கிரமித்துக் கொண்டது. என்றைக்கு சிவகிருபை வருமோ என்று நான் பாடியது வெறும் வார்த்தைச்சரமல்ல. அது என் பக்தியை இசை வழியாக வெளிப்படுத்தியது. அந்த வரிகளின் நெகிழ வைக்கும் தன்மையை ரசிகர்களுக்குத் தருவதையே நான் மிக விரும்பினேன்” என்று ஒரு பேட்டியில் சொல்கிறார் பட்டம்மாள்.
—oooOOOooo—
உண்மையில் பட்டம்மாள் என்ற சமுதாய நிகழ்வு வெறும் ஒற்றை ஆளைச் சார்ந்ததல்ல. அவர் திறமையைக் கண்டுணர்ந்து அதை வெளிக்கொணரப் பெரும்பாடுபட்ட அம்முக்குட்டி அம்மாள், தானாகவே சிறுமி பட்டம்மாளுக்கு இசை கற்றுத்தர முன்வந்த தெலுங்கு வாத்தியார், கிருஷ்ணசாமி தீட்சிதரின் மனமாற்றத்துக்கு முக்கிய காரணமாக இருந்த Dr.ஸ்ரீனிவாஸன், மனமாற்றத்துக்குப் பின் மிகப்பெரும் பலமாகவும், பல மணிநேரப் பயிற்சிகளுக்கு உறுதுணையாக இருந்த கிருஷ்ணசாமி தீட்சிதர் என இந்த அனைவரும் தேடித்தந்திருப்பதுதான் இன்றைய கர்நாடக இசைச்சூழலின் ஆரோக்கியமான போக்கு. பட்டம்மாளின் முயற்சிக்குத் தன் பரிபூரண ஆதரவு உண்டு என்பதைத் தெரிவிக்கும் வகையில் கிருஷ்ணசாமி தீட்சிதரே பட்டம்மாளின் கச்சேரிகளுக்குத் தம்பூராவும் மீட்டினார்! ஆணாதிக்க சமூகத்திலிருந்து மீண்டெழுந்த பட்டம்மாள் தன் குடும்பத்திலேயே இசைக்கு ஒரு பெரிய குருவாக விளங்கினார். தன் சகோதரர்கள் டி.கே.நாகராஜன், டி.கே.ஜெயராமன் இருவரையும் தேர்ந்த இசைக் கலைஞர்களாக்கினார்.
டி.கே.பட்டம்மாள். தம்பூரா இசைப்பவர் தந்தை கிருஷ்ணஸ்வாமி தீட்சிதர். அருகில் தம்பி டி.கே.நாகராஜன்.
நன்றி: பாரதியவித்யா பவன் வெளியிட்ட Ganasaraswathi D.K.Pattammal புத்தகம்
சிறுமியாக இருந்தபோது சில கீர்த்தனைகள் சொல்லித்தந்த தெலுங்கு வாத்தியாரைப் பிரபலமான பின்புதான் சென்னையில் மீண்டும் சந்திக்கிறார் பட்டம்மாள். பட்டம்மாளின் வீட்டுக்கு வந்த அவர், பட்டம்மாள் தட்சிணையாகத் தந்த காணிக்கையையும், ‘ஒரு மகளுக்குத் தந்தை தரும் தட்சிணையாக வைத்துக் கொள்’ என்று கொடுத்துவிட்டுச் சென்றுவிடுகிறார். பள்ளி முதல்வர் அம்முக்குட்டி அம்மாளையும் எர்ணாகுளத்துக்கு ஒரு கச்சேரிக்குச் சென்றபோதுதான் பள்ளிநாட்களுக்குப்பின் சந்திக்கிறார். மிகவும் உணர்ச்சிகரமாக சந்திப்பாக அமைகிறது அது. “என் இலட்சியம் நிறைவேறிவிட்டது. உன் திறமை வீண்போகவில்லை என்ற திருப்தியுடன் நான் நிம்மதியாகச் சாவை எதிர்கொள்ளமுடியும்” என்பவை கண்ணீருக்கிடையில் அம்முக்குட்டி அம்மாள் சொன்ன வார்த்தைகள்.
இன்று கர்நாடக சங்கீத உலகில் பெண்களின் நிலை மிகவும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் முன்னேறியிருக்கிறது. சென்ற தலைமுறையிலேயே பல பிரபல வித்வான்களின் மனைவிகள் வெளியுலகத்துக்குத் தெரியவராத மிகச்சிறந்த பாடகிகள். பல இசைக்கலைஞர்களின் திருமணத்தின்போது முதல் நிபந்தனையாக இருந்ததே, திருமணத்துக்குப் பின் மனைவி பாடக்கூடாது என்பதுதான். பட்டம்மாளின் தாய் ராஜம்மாளே மிக நல்ல குரல்வளம் உடையவர்; மிகச்சிறப்பாகப் பாடக்கூடியவர். ஒருமுறை வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பாடியதற்காகத் தன் மாமனாரால் கடுமையாகக் கடிந்து கொள்ளப்பட்டவர். பட்டம்மாளின் குரல் நமக்குக் கேட்கக் கிடைக்காத ராஜம்மாளின் குரல்; சமையலறைக்குள்ளேயே சிறு முனகலாகவும், ஆலாபனையாகவும் முடங்கிப்போன பெண்களின் குரல்; சமூக மாற்றத்தை முன்வைத்ததொரு தலைமுறையின் எளிய மனிதர்களின் குரல்.
தேசத்துக்காகப் பாடுவதைத் தன் கடமையாக நினைத்த பட்டம்மாளின் மறைவுக்கு, அவர் வாழ்ந்து மறைந்த மாநிலத்தின் முதல்வர் ஒரு சம்பிரதாயமாகக் கூட இரங்கல் தெரிவிக்காததும் நம் சமூக மாற்றத்தின் ஒரு புள்ளிதான்.
சேதுபதி அருணாசலம்