வாட்டமேனோ

வெண்ணிலவு துணையிருக்க வாட்ட மேனோ
விட்டயலூர் சென்றவனின் நினைவால் தானோ?
விண்மீனைத் தூதனுப்பி விவரம் சொல்வாய்!
வெட்கத்தை விடுத்தேநீ காதல் வெல்வாய்!
கண்மூட முடியாமல் காத்தே நிற்கும்
கன்னிமயில் உன்னருமை அறிவான் தானும்!
பெண்ணிலவே வீண்கவலை கொள்ள வேண்டா
பேரின்ப வாழ்வுனக்குத் தருவான் வந்தே!!

இக்கரையில் தனித்திருப்பாய் நீயு மென்றே
இதயத்தை யீந்துவிட்டுப் போனா னோடி?
அக்கரையில் அவனுள்ளம் படுத்தும் பாட்டை
அன்பாலே உணர்ந்திருந்தும் தவிப்பா யோடி?
சொக்கவைக்கும் கண்ணிரண்டில் சோக மேனோ
சுந்தரியே சற்றேனும் உறக்கம் கொள்வாய்!
துக்கத்தைத் துடைத்துவிட்டுப் பாடி யாடு
துணைவந்து சேர்ந்தவுடன் ஊடிக் கூடு!!!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (13-Sep-17, 8:42 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 47

மேலே