எங்கிருந்தாவது ஒரு புயல்
எங்கிருந்தாவது ஒரு புயல்
======================================ருத்ரா
அது
வானத்திலிருந்து வந்து
விழுந்த
சுத்தமான ஒலித்துண்டுகள்
என்றார்கள்.
ஒலி என்றால்
அதை ஏற்படுத்திய
குரல் வளையின் தசைநார்கள்
யாருடையது
என்ற கேள்விகள் எழுந்தன.
கேள்விகள் கேட்டு
எச்சில் படுத்தாதீர்கள்
என்றார்கள்.
அது
மனித செவிகளுக்குள்
நுழைவதும்
மறுபடியும்
மனித நாக்குகளின்
உமிழ்நீர் தோய்ந்து
குரலாக வெளிவருவதும்
தீட்டுக்கு மேல் தீட்டு என்றார்கள்.
அப்படியென்றால்
அது
எவ்வளவு புனிதம் வாய்ந்ததாய்
இருக்கவேண்டும்?
எவ்வளவுக்கு எவ்வளவு புனிதமோ
அவ்வளவுக்கு அவ்வளவு
அறிவு மழுங்குவதே
அவர்கள் வேண்டுவது!
மனிதர்கள்
அதை "அறிவு"ப்புலன் கொண்டு
ஸ்பர்சிப்பதே
ஆபாசம் என்றார்கள்.
அதை "அஸ்பர்ஸ்யோகம்" என்று
ஒரு மாண்டூக ரிஷி
வறள வறள மந்திரம் சொன்னான்.
கவுட பாதன் அதற்கு உரை சொன்னதோ
ஒரு வெறுமை வாதத்தை தான்
விட்டுச்சென்றது.
அது
அப்படியே
எங்கே எல்லாமோ போனது.
உள்ளூர்க்காரர்கள்
அர்த்தம் தேடவே
பயந்தார்கள்.
வெளிதேசக்காரர்கள்
அந்த வெங்காயத்தோல்
உரித்தார்கள்.
இப்போது எல்லாம் புரிந்தது.
மனிதனுக்கு மனிதன்
யுத்தம் புரிந்தது...
இவன் சொன்னது அவனுக்கு
அதர்மம்.
அவன் சொன்னது இவனுக்கு
அதர்மம்.
ரத்தம் பீறிட்டு
வானத்தையே சிவக்க வைத்தது.
சோமாச்செடியை நசுக்கி நசுக்கி
கள் குடித்தது.
அதையே ஒருவனுக்கு
ஊற்றி ஊற்றிக் கொடுத்து
வெறி யேற்றி யுத்தம் செய்யச்சொல்லி
மந்திரங்கள் குவித்தது.
வஜ்ராயுதங்கள்
மக்களை கொத்து கொத்தாய்
தலை கொய்தது.
அடுத்தவன் அணைக்கட்டுகள்
பொறாமையால்
அடித்து நொறுக்கப்பட்டது.
வெள்ளம் மனித இனத்தை
பூண்டற்று போகச்செய்தது.
எல்லாம் "ஸ்லோகங்களின்"
இரைச்சல்களால்
திரை போடப்பட்டன.
இந்த குட்டு உடைந்ததை
தெரிந்து கொண்டவர்கள் மட்டுமே
கடவுளின் புத்திரர்கள்.
இதை அறிய முற்படும்
மற்றவர்கள் காதுகளில்
ஈயத்தைக்காய்ச்சி ஊற்றுங்கள்
என்றார்கள்.
மனித சரித்திரத்தின்
அருவறுத்த முகங்களைக்
காட்டும்
அவை இன்னும்
மனிதம் எனும்
வெளிச்சத்தின் மீது
சடங்கு சம்பிராயதங்களின்
கல்லறைகளாய்
அழுத்திக்கொண்டிருக்கின்றன.
எங்கிருந்தாவது
ஒரு இர்மா புயல் வேண்டும்
இவற்றை அடித்து நொறுக்க!
==========================================