போதை பொருள் தடுப்போம்

போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம்

மக்கள் சமுதாயத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் எதிராக உலகளாகிய அளவில் எழுந்திருக்கும் பிரச்சனைதான் இந்த போதைப்பொருட்கள். ஆரோக்கியம் என்பது இறைவன் நமக்குக் கொடுத்த மிகப்பெரும் அருட்கொடை ஆகும். நம் உடல் ஆரோக்கியத்திற்கு நாமே தீங்கிழைத்துக் கொள்ளக்கூடாது.போதைப் பொருட்களினால் தனிமனிதன், குடும்பம், சமுதாயம் என எல்லா வகைகளிலும் பாதிப்புகளே ஏற்படுகின்றன. 1000 இற்கு 1 என்ற அடிப்படையில் மாணவர்கள் புகைத்தல் பாவனைக்கு பழக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் மூலம் அறியமுடிகின்றது. இலங்கையில் 13-15 வயதுக்கு உட்பட்ட அதிகமான பாடசாலை மாணவர்கள் புகைத்தல் பழக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக ரவீந்திர பெர்ணான்டோ கூறுகிறார்.

இலங்கையில் போதைவஸ்து நுகர்வின் நிலை 2016

2015 ஆம் ஆண்டு இலங்கையில் போதைப்பொருட்கள் சம்பந்தமான குற்றச்செயல்களுக்காக கைது செயப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,482ஆவதோடு இது 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 23 சதவீத அதிகரிப்பாகும். இவர்களில் 32 சதவீதம் ஹெரோயினை வைத்திருந்ததற்காகவும் 63 சதவீதம் கஞ்சா தொடர்பான குற்றச்செயல்களுக்காகவும் கைது செயப்பட்டனர். மேலும் பெரும்பான்மைக்குற்றச்செயல்கள் மேல் மாகாணத்தில் 60 சதவீதம் பதிவாகியது. அதைத்தொடர்ந்து தென் மாகாணத்தில் 10 சதவீதம், மத்திய மாகாணத்தில் 8 சதவீதம் என்ற வீதங்களில் காணப்பட்டன. மாவட்ட அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் 43 சதவீதம், கம்பஹா மாவட்டத்தில் 14 சதவீதம், கம்பஹா மாவட்டத்தில் 14 சதவீதம், மற்றும் குருநாகல் மாவட்டத்தில் 4 சதவீதம், என்ற வீதங்களில் காணப்பட்டன. 2015ஆம் ஆண்டில் போதை வஸ்த்துக்கள் தொடர்பான குற்றச்செயல்களுக்கு கைதானவர்களின் வீதம் மொத்த சனத் தொகையில் ஒப்பிடுகையில் ஓர் இலட்சம் பேருக்கு 397 என்ற அளவில் காணப்பட்டது. தன் சிந்தனையை போதையில் புதைத்து மன மயக்கத்தையும், குழப்பத்தையும் தன்னைத்தானே மனிதன் ஏற்படுத்திக் கொள்கின்றான். போதைப் பொருட்களில் மது, ஹெரோயின், பெத்தனால் ஊசி, கஞ்சா, புகையிலை, பான் மசாலா, போதை தரும் இன்ஹேலர்கள் இன்னும் பல வகைகள் அடங்கும்.

போதையால் நடத்தையில் மாற்றங்கள்

இதுபோன்ற போதை வஸ்துக்களை நுகரும் பழக்கம் தற்போது இலங்கையில் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
மருத்துவத்தேவைகளுக்காக ஹெரோயினை பெற முடியாத தட்டுப்பாடு நிலைகள் ஏற்படும் போதும் போதைவஸ்துக்களுக்கு அடிமையானவர்கள் இவற்றை உட்கொள்வதுண்டு. மருத்துவரின் மருந்து சீட்டின்றி இவற்றை விற்பனை செவது
சட்டவிரோதமான செயலாக இருப்பினும் இவற்றை பெறுவது சிரமமான விடயமாக இல்லை. இவற்றை நுகர்ந்த பல சம்பவங்கள் 2015 ஆண்டு பதிவாகியதால் அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வழிநடத்தலுடன் சுகாதார அமைச்சு இது போன்ற மருந்து வகைகளை விற்பனை செவதை கட்டுப்படுத்தியும் கண்காணித்தும் வருகின்றது.
பள்ளிப் பருவத்திலோ அல்லது கல்லூரிகளிலோ படிக்கும் போது தீய நண்பர்களோடு ஏற்பட்ட பழக்கங்களினாலும் மற்றும் பொழுதுபோக்காகவும் பழகிக் கொண்ட பழக்கத்தை இன்று வரை விட்டு மீளமுடியவில்லை என வருத்தப்பட்டுக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். பலமுறை இத் தீய பழக்கங்களை விட்டொழிக்க வேண்டும் என முயற்சி எடுத்து தோற்றுப் போனவர்களும் இருக்கிறார்கள். ஒன்றைத் தவிர்க்க மற்றொன்றை பயன்படுத்தி அதையும் சேர்த்து அடிமையாகிக் கொண்டவர்களும் இருக்கின்றனர்.

இத்தகைய போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களின் குடும்ப வாழ்க்கை, சமுதாய அந்தஸ்து, அலுவலக வேலை, நட்பு, உறவினர்கள் மற்றும் தொடர்புகள் என எல்லாவற்றிலும் விரிசல் ஏற்பட்டுவிடுகிறது. போதைக்கு அடிமையாகி இளமையிலேயே இறந்துவிடும் குடும்பத் தலைவனால் அக்குடும்பமே சிதைந்து சீரழிந்து விடுகின்றது. குழந்தைகளுக்கு அன்பு, அரவணைப்பு மற்றும் வழிகாட்டுதல் கிடைக்காமல் அவர்களின் எதிர்காலமும் கேள்விக் குறியாகிவிடுகின்றது.
எல்லோருக்கும் எளிமையாகவும், பரவலாகவும் கிடைத்துவிடும் போதைப்பொருள்தான் சாராயம் மற்றும் அதைச்
சார்ந்த மது வகைகள். இந்தப் பழக்கத்தை தற்போது பள்ளிப் பருவத்திலேயே பழகிக் கொண்டிருப்பதை கண்கூடாகக் காணமுடிகின்றது. இதற்குக் காரணம் அரசே ஆங்காங்கே அமைத்திருக்கும் மதுக்கடைகளும், இதற்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமும், திரைப்படங்கள் இத்தகைய பழக்கம்- இளைஞர்கள் செவது தவறில்லை என்று சித்தரிப்பதும், மகிழ்ச்சி மற்றும் துக்க வேளைகளில் மது தேவை என்ற மனோநிலைக்குக் கொண்டு சென்றுள்ளதுமாகும்.

மது பரிமாறல்கள் மேலை நாட்டுக் கலாசாரம் என உயர்வாகக் கருதுவதும் இப்பழக்கத்திற்கு ஒரு காரணமாகும். பிரச்சனைகள் மற்றும் குறைகளை போதைப்பழக்கத்தால் மறந்து நிம்மதியாக இருக்கலாம் என்று தவறாகக் கருதுவதும் இது போன்ற தீய பழக்கங்களுக்கு மக்களை ஆட்படுத்திவிடுகின்றது. தன்னைச் சுற்றியுள்ளவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தால் அவரைத் திருத்த முயற்சிக்காமல் அவர்களிடமிருந்து சிறிது சிறிதாக தாங்களும் கற்றுக் கொள்கின்ற பலரும் இருக்கிறார்கள்.

இளம் வயதில் பழகிக் கொள்ளும் இத்தகைய போதைப் பழக்கங்கள் மெல்ல மெல்ல இவர்களை போதைக்கு அடிமையாக்கி விடுகிறது. போதைப் பழக்கத்தினால் முதலில் பாதிப்படைவது மனிதனின் நரம்பு மண்டலம். மூளைக்குச் செல்லும் நரம்புகளைப் பாதித்து நினைவாற்றலை குறைக்கச் செகின்றது. இதன் காரணமாக சீரான இதயத்துடிப்பு பாதிக்கப்பட்டு இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. உடலில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களினால் இதை உட்கொண்டவர்கள் மனதளவில் தன்னம்பிக்கை இழக்கிறார்கள். உடல்சோர்வடைதல், குற்ற உணர்ச்சி, தனிமையை நாடுவது போன்ற அவல நிலைக்கு உள்ளாகின்றார்கள். போதைப் பொருட்களினால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகள், சமுதாயம் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகள் என பலவகையான தீமைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

உலக நாடுகள் போதைப் பொருட்கள் கடத்தலுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வந்து கட்டுப்படுத்தி வருகின்றன. இருப்பினும் ஹெரோயின், கஞ்சா போன்ற பொருட்களை விற்பதும் பிற நாடுகளுக்கு கடத்துவதும் இன்றுவரையிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. கல்லூரி வாசல்களிலேயே கஞ்சா சோக்லேட்கள் விற்கப்படுவதையும், விற்பவர்கள் கைது செயப்படுவதையும் பத்திரிக்கைகளில் படிக்க நேரிடுகின்றது. சுற்றுலாத்தலங்கள் அருகாமையில் சிதறிக்கிடக்கும் மதுபோத்தல்களும், ஊசிகளும் பலரும் போதைக்கு அடிமையாகிக் கொண்டிருப்பதற்குச் சான்று பகர்கின்றது.
ஆசிய நாடுகளில் போதைப்பொருள் அடிமைகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றனர். இதற்குக் காரணம் மேலை நாடுகளில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வுகள் நம் நாடுகளில் இல்லாமல் போனதாகும்.

பாடசாலை மாணவர்கள் தலைநகரில் போதைப்பொருட்கள் பாவிப்பது இன்று வேகமாகப் பரவிவருகின்றது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பற்றி உரிய கவனம் எடுக்காதபட்சத்தில் இனிவருங்காலம் அதாள பாதாளத்திற்குள் சென்றுவிடும். போதைப்பொருள் பாவனையாளர்களின் தொல்லைகளால் பாதிக்கப்பட்ட சிலரிடம் கருத்துக்கேட்ட போது போதை பொருளை பாவிப்பவர்களினால் எங்களுடைய பிள்ளைகளும் இந்த பழக்கத்திற்கு உள்ளாகுபவர்களாக மாற வாப்பு இருக்கின்றது எனக்கூறுகின்றனர். போதைக்கு எதிராக பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன.

போதைக்கு அடிமை என்பதை அறிந்து கொள்ளல்

ஆரம்பத்தில் பயன்படுத்திய அளவைவிட சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே செல்லுதல். மற்றும் அடிக்கடி போதை வேண்டுமென்று தோன்றுதல்.எதை இழந்தாலும் தனக்கு போதை தரக் கூடிய பொருளை அந்தந்த நேரத்தில் தனக்குக் கிடைக்கும் விதமாக பார்த்துக் கொள்ளுதல். அல்லது அதை முன்னரே வாங்கி வைத்துக் கொள்ளுதல். இப்பழக்கத்தை இன்றோடு விட்டுவிட வேண்டும் என்று சபதம் ஏற்றும் பல முறை தோல்வியடைவது.
தனக்கு போதை தரக்கூடிய பொருளை அடைய கேவலமான செயல்களைக் கூட செயத் துணிவது, நன்றாக படிக்கக்கூடிய பதினைந்து வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளின் மதிப்பெண்கள் திடீரென குறையத் தொடங்குகின்றது எனில் அவர்களின் நண்பர்கள் வட்டாரத்தைக் கவனியுங்கள், உடல் நிலையில் ஏதேனும் மாற்றம் தென்படுகிறதா? என்பதைக் கவனிக்க வேண்டும், செயற்பாடுகளிலோ அல்லது உரையாடல்களிலோ ஏதேனும் மாற்றம் தென்படுகிறதா, அவர்களுடைய அறையில் யாரும் நுழைவதைத் தடுக்கிறார்களா?,அடிக்கடி பணம் கேட்கிறார்களா?,இவை உண்மையான தேவைதானா என்பதை கண்டறியுங்கள்.

போதைக்கு அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்க எத்தனையோ மறுவாழ்வு மையங்கள், அலோபதி, ஆயுர்வேத, சித்த என எத்தனையோ மருத்துவ முறைகளும் இருக்கின்றன. எனினும் யார் இறை நம்பிக்கையில் தன் மனதைச் செலுத்தி இது பாவம் என எண்ணி கைவிடுகின்றாரோ அவர்களால் மட்டும் தான் இத்தகைய பழக்கங்களிலிருந்து மீள்வது சாத்தியமாகும். இவைகள் பற்றி விளக்கம் வழங்கத்தக்க வகையில் 1988இல் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருளுக்கெதிரான உலக மகாநாடு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் புகைத்தல், போதைப்பொருள் பாவனையின் காரணமாக நாளொன்றிற்கு 100 பேர் மரணிப்பதாக இலங்கை மது மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் 2015 ஆம் ஆண்டு அறிக்கை விடுத்துள்ளது.

இலங்கை அரசாங்கம் 2015ஆம் ஆண்டை போதைப்பொருள்கள் அற்ற ஆண்டாக மாற்றியமைக்க வேண்டும் என்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கு போதைக்கு முற்றுப்புள்ளி திட்டம் மட்டும் போதுமானதல்ல, சகலரது பூரண ஒத்துழைப்பின் மூலமே போதைப் பொருள் ஒழிப்பை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் .போதைக்கு அடிமையானோரை அதிலிருந்து மீட்டெடுப்பது, புதிதாக அப்பாவனைக்கு அடிமைப்படாமல் இளம் சந்ததியினரைப் பாதுகாப்பது என்ற இலக்கிலேயே அரசாங்கம் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதே நேரம் இன்று இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டங்களைப் பொறுத்தவரை இந்நடவடிக்கைக்கு அவை போதியதாக இல்லை.

போதைப்பொருட்கள் கடத்தல்

போதைப்பொருட்கள் கடத்தலின் அளவை கூறும் மாணியாக இருப்பது அதிகாரம் பெற்ற அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் போதைப்பொருட்கள் கைப்பற்றல்கள் மற்றும் அதைத்தொடர்ந்து பெறப்படும் தரவுகளாகும். பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்படும் போதைப்பொருட்களை ஐரோப்பிவிற்கு கடத்தும் முக்கிய மையங்களாக கொழும்பு மற்றும் மாலே இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 130 வெளிநாட்டு நபர்கள் போதைப் வஸ்த்துக்களை கடத்த முயற்சிக்கையில் இலங்கையில் வைத்து கைது செயப்பட்டுள்ளதுடன் இவர்களுள் 44 இந்தியர்கள் உட்படுவர். கடந்த 5 ஆண்டுகளில் மலேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் 26 இலங்கையர் போதைவஸ்து கடத்தல் தொடர்பான குற்றங்களுக்காக கைது செயப்பட்டனர்.

இன்று வர்த்தக ரீதியில் போதைப்பொருட்கள் சந்தைப் படுத்தப்படுகின்றன. அநேகமாக சட்ட விரோதமான கடத்தல் போன்ற வழிகளிலேயே இவ் வர்த்தகம் நடைபெறுகின்றது. மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாலும், இதற்கு உடந்தையாக வருமானத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சில பெரும்புள்ளிகள் இருப்பதினாலும் இதனை இல்லாதொழிப்பது ஒரு கடினமான செயற்பாடாகவே மாறி வருகின்றது. போதைபொருள் பாவனையால் ஏற்படும் தீங்குகளும் பாதிப்புகளும் அழிவுகளும் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜூன் 26 ஆம் திகதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதும் சமூகத்தின் மத்தியில் ஏட்டுச் சுரைக்காயாகவே இதுபற்றிய விடயம் காணப்படுகின்றது.

சிறைத்தண்டனை

2015 ஆண்டு போதைவஸ்து குற்றங்களுக்காக 24086 நபர்கள் சிறைத்தண்டனை பெற்றனர். இவர்களில் 3648 பேர் கஞ்சா தொடர்பான குற்றச்சாட்டுக்கள், 7519 ஹெரோயின்,குற்றச்சாட்டுகளுக்காகவும், தண்டனை பெற்றனர். 2014 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2015இல் 7 சதவீதம் குறைவடைந்தது.

எழுதியவர் : செ. தர்ஷிகா (22-Sep-17, 4:14 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 50816

சிறந்த கட்டுரைகள்

மேலே