சாக்கலேட்

சாக்கலேட்
=========================================ருத்ரா

சாக்கலேட்டை சுற்றியிருக்கும்
பேப்பரை
கொஞ்சம் கொஞ்சமாய்
பிரிப்பதில் கூட‌
வாழ்க்கையின் துளி
ஒட்டிக்கிடக்கிறது.
நாக்கை சப்பு கொட்டி
இனிப்பான தருணங்களை
எதிர்பார்த்து
நம் மைல்கற்களை
எதிர்நோக்கி நடக்கின்றோம்.
நம் தோள்களில்
கனவுகளின் சுமையோ
குறைந்த பாடில்லை.
தூக்கம் தராமல்
கவலைகள்
நமக்கு பீஷ்மரின் அம்புப்படுக்கையை
அந்த ரத்தம் கசியும் முனைகளில்
நிறுத்தியிருக்கலாம்.
யாரெல்லாம் இந்த அம்புகளை எய்தது?
வெறும் தூசி துரும்புகள் கூட‌
எப்படி இப்படி ஊசிமுனைகள் ஆயின.
காதல் எனும் தீவுகளில்
சுற்றித்திருந்த போதும்
அவள் எய்த ஆயுதங்களைக்கணக்கிட்டால்
ஆயிரம் கையுடைய காளியின்
ஆயுதங்களையும் விட எவ்வளவோ
அதிகம் அல்லவா?
ஆயினும்
அவளின் ஒற்றைக்கீற்று மின் சிரிப்பு
தூண்டில் மீனாய் துடிக்க துடிக்க வைத்து
இன்பம் கூட்டுமே!
இப்போதும்
குடும்பம் குழந்தைகள் என்றும்
ஜல்லிக்கட்டின் திமில்கள்
மதுரைவீரன் கணக்காய்
மீசைவைத்து
செல்ஃபோன்களுக்குள்
ஏதாவது புதையலைத்தேடிக்கொண்டிருக்கும்
மகன்களாயும்
மற்றும்
அவர்களது பொருளாதார பொன்னுலகம்
தலைக்கு மேல் வட்டமிடும்
டெங்கி காய்ச்சல் புகைப்படிமங்கள் போல‌
அறுபட்ட புண்களின் மேகமாய்
மேலே
துன்புறுத்துகிறது.
வாழ்க்கையின் அனாடமியை
கூறுபோட‌
எத்தனை எத்தனை உளைச்சல்கள்?
பருவ வாசலுக்கு வந்துவிட்ட‌
மகள்களோ
வாசலைத்தாண்டி உள்ளேயே
வருவதில்லை.
என்னவோ
சேட்டிங்காம்! டெக்ஸ்டிங்காம்!
புத்தக சைசுக்கு
காதில் வைத்துக்கொண்டு
கண்ணில் "செல்ஃபிகளை" ஒற்றிக்கொண்டு
எங்கேயோ நிற்கிறார்கள்.
உலகத்தைவிட்டு
தூரவெளியில்
ஒரு நெம்புகோல் தாருங்கள்
இந்த உலகத்தை புரட்டிவிடுகிறேன்
என்றானாமே ஆர்க்கிமெடீஸ்!
இவர்கள் இந்த கைபேசிகள் கொண்டு
உலகத்தின் பிரம்மாண்டத்தை
இரண்டு மூன்று ஜிபி களில்
கைக்குட்டைபோல் சுருட்டிக்கொள்கிறார்கள்.
மனிதன் முகம்
மனிதன் அகம் கூட‌
இப்போது வெறும் "வெர்ச்சுவல் ரியாலிடீஸ்".
என் பிள்ளைகள்
எப்படி கரையேறுவார்கள்?
கவலைகள் எனும் கூரியமுட்கள்
என் ரத்தசிவப்பு அணுக்களைக்கூட‌
தின்று கொண்டிருக்கின்றன.
இப்போதும்
அவளுடையது
அழகான மின்னல் சிரிப்பு தான்.
அவள் என்
வாழ்க்கை எனும்
காதலி அல்லவா?

===================================================

எழுதியவர் : ருத்ரா (23-Sep-17, 12:58 pm)
பார்வை : 59

மேலே