தலை நிமிர்

அப்போது தான் வந்து உட்க்கார்ந்த ஈசலை பிடித்து தின்று கொண்டிருந்தது அந்த பல்லி. வாடகை கொடுக்காமல் சுதந்திரமாக திரியும் ஒரு மறைமுகப் பிராணி இந்த பல்லி. யாருமற்ற இந்த அறையில் வேடிக்கை காட்டவே இவைகள் திரியும் போல. சட்டென பென்சிலையும் பேப்பரும் எடுத்து அந்த பல்லியை வரையத் தொடங்கினாள் ரேவதி.
வரைந்ததை சுவரில் வைத்து அழகு பார்த்தாள். சட்டென ஒரு கை வந்து அதை பிடுங்கியதும் பயந்து நிமிர்ந்தாள். "ஏண்டி, உன்ன படிக்க சொன்னா இந்த வேல தான் பாத்துட்டு இருக்கியா. எடுக்கிறது முட்டை மார்க்கு. கொஞ்சமாவது புத்தி வேணாம். அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும். இந்த தடவையாவது பாஸ் ஆகு டி. " என்றுரைத்து சமையல் வேலையை பார்க்க சென்றாள்.
கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு. போன முறை பெயில் ஆனதால் வாங்கிய அடி நியாபகம் வந்தது . அப்பா மிகுந்த கோபக்காரர். சில சமயம் அம்மாவால் கூட அவரை அடக்க முடியாது. பெண்ணாய் பிறந்ததே அவருக்கு வருத்தம். இதில் மக்காய் இருப்பது இன்னும் கோவம்.
அவளும் முயன்று தான் பார்க்கிறாள். வரைவதில் இருக்கும் ஆர்வம் படிப்பதில் வருவதில்லை. ஒரு முறை மாநில அளவில் நடந்த போட்டியில், இரண்டாவதாக வந்தாள். சில ஆசிரியர்கள் தவிர மற்ற யாவரும் அதை பெரிதாய் சட்டை செய்யவில்லை. அதிலும் அந்த பாட்டனி மாஸ்டர், ஸ்டீவன் எல்லோர் முன்னிலையும் அவமான படுத்தி விட்டார், "படிப்பில் பெயில் . இதுல டிராயிங் ல ரெண்டாவது. இதெல்லாம் எங்க உருப்புட போகுது" என நகைத்தார்.
நாளை மறுநாள் அரையாண்டு தேர்வு. இவள் தன்னால் முயன்ற வரை படித்து வைத்தாள். அடுத்த முறையும் தோல்வியுற்றால் விடுதியில் சேர்த்து விடுவதாக அப்பா எச்சரித்து இருந்தார். மற்ற பாடங்களில் தேறி விடும் நம்பிக்கை இருந்தாலும், இந்த பாட்டனி மட்டும் கஷ்டம். அது என்ன ஓசிமம் தெநூயிஃப்ல்லோரம் . தமிழில் எவ்வளவு அழகாக துளசி என்று வைத்திருக்கார்கள் என்று நினைப்பாள்.
முதல் தேர்வில் தனக்கு தெரிந்தவற்றை எல்லாம் எழுதி கொண்டிருந்தாள். அப்போது தான் கவனித்தாள், மனிஷா யாருக்கும் தெரியாமல், தனது முழங்கையிலிருந்து எடுத்த அந்த பிட்டை பார்த்து அவசர அவசரமாக எழுதி கொண்டிருந்தாள். சடக்கென ஆசிரியர் பார்க்கிறாரா என நோட்டமிட்டாள். அவரை பார்த்தால் கண்டும் காணாமல் இருப்பது போல் இருந்தது. சரி, தனக்கென்ன வந்தது என அவள் எழுத ஆரம்பித்தாள்.
இறுதியாக வந்தது பாட்டனி தேர்வு. எவ்வளவு படித்தாலும், அவளால் பொட்டானிக் பெயர்களை நியாபகத்தில் வைப்பது சிரமமாக இருந்தது. விடுதியில் தாங்கும் அவதியை நினைத்து கலக்கம் ஆனது. எப்படியாவது பாஸ் ஆக வேண்டும். மனிஷாவை நினைவுற்றாள். வேறு வழி இல்லை. தானும் பிட் அடிப்பது என முடிவெடுத்தாள்.
இன்று சூப்பர்வைசிங் வருவது பாட்டனி மாஸ்டர். ஐயோ இவரா. சரி எப்படியாவது சமாளிப்போம் என்று பிட்டை பார்த்து எழுத ஆரம்பித்தாள் . இனிதாக நிறைவேறியது தேர்வு , எப்படியும் பாஸ் செய்து விடுவோம் என்ற நம்பிக்கையில் தேர்வறையை விட்டு வெளியே செல்லும் போது அழைத்தார் ஸ்டீவன், பாட்டனி மாஸ்டர். "கொஞ்ச நேரத்தில் என் அறைக்கு வா" என்றார்.
நடுக்கம் எடுத்து விட்டது இவளுக்கு. ஐயோ, அப்பாவிற்கு தெரிந்தால், விடுதி தான். எப்படி இதை எதிர்கொள்வது என்று பயந்தபடியே அறைக்குள் நுழைந்தாள். "என்ன, பிட் அடிக்கிற அளவுக்கு வந்துட்டியா நீ. உங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு வரியா." என்றார்.
"சாரி சார். இந்த ஒரு தடவ என்ன மன்னிச்சிடுங்க. எப்படியாவது அடுத்த தடவ படிச்சி பாஸ் பண்றேன். எங்கப்பா என்ன விடுதி ல சேர்த்துடுவார். ப்ளீஸ் சார்." என்றேன். "சரி, நான் யார்கிட்டையும் சொல்ல மாட்டேன், அதே மாதிரி நீ யார்கிட்டையும் சொல்ல கூடாது இப்போ இங்க நடக்க போறதை" என்றபடியே அவள் கையை பிடித்தார்.
சடாரென கையை உதறினாள். மூச்சிரைக்க தலை குனிந்து நின்றாள். அந்த உருவத்தை பார்க்க கூட அவள் விரும்பவில்லை. மெதுவாக தன ஷூ வை கழற்றி படீர் படீர் என அவர் முகத்தில் கைகள் வலிக்க அறைந்தாள். "நான் உங்கள செருப்பால அடித்ததை வெளிய சொல்லாம இருக்கணும் நா, பிட் அடிச்சத நீங்க வெளிய சொல்லாதீங்க சார்" என்று வெளியேறினாள்.
வீட்டில் நுழைந்தவுடன் அம்மாவையும் அப்பாவையும் அழைத்தாள். "அப்பா, எனக்கு வரைவதில் ஆர்வம் இருக்கு. எனக்கு படிப்பு வரல தான், அதுக்காக நான் தோல்வி அடைய மாட்டேன். அடிப்படை கல்வி அவசியம் எனக்கு தெரியும். என்னால முடிஞ்சா வரை முயற்சி செய்து பாஸ் ஆகிறேன். ஆனதும், நான் டிராயிங் கோர்ஸ் ல ஜாய்ன் பண்றேன். தயவு செஞ்சி, என்னை விடுதில மட்டும் சேர்த்துடாதீங்க. என்னால உங்கள பிரிஞ்சி இருக்க முடியாது. இதுக்கு மேல என் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது உங்க கைல் இருக்கு" என்றவள், மேலும் பள்ளியில் நடந்தவற்றை கூற, இருவரும் ஸ்தம்பித்து நின்றனர்.
தினந்தோறும் நடக்கும் பாலியல் கொடுமை செய்திகளை பார்க்கும் போது பதைபதைத்த மனசு, தன மகளின் செயலில் பெருமிதம் அடைந்தது. பெண்ணாக பிறந்தாள் என வருத்தம் அடைந்ததை நினைத்து மனசு வெட்கியது. அவள் கை பிடித்து அவளை பள்ளிக்கு அழைத்து சென்றார், அந்த மிருகத்தை மற்ற பிள்ளைகளிடம் இருந்து காப்பாற்ற.

எழுதியவர் : நிலா (23-Sep-17, 8:25 pm)
பார்வை : 637

மேலே