கண்ணில் கனா நெஞ்சில் வினா
கண்ணில் கனா.. நெஞ்சில் வினா..
ரயில் பயணம்
அதுவும் இரவில்
வானத்தை திரையிட்டு காட்டும் ஜன்னலோரம்..
காற்றோடு கதை பேசும் கரு மேகங்கள்.
கருப்பு நிற சேலை அணிந்த வானம்...
அதிலிருந்து வெட்கப்பட்டு எட்டி பார்க்கும் நட்சத்திரங்கள்..
எல்லாவற்றிற்கும் மேலாக
அனு தினம் பார்க்க நினைத்த
ஆனால் பார்த்துகொண்டிருக்க வாய்ப்பு கிடைத்த என்னவனின் முகம்
எனக்கெதிர் ஆசனத்தில்..
வருடங்கள் மூன்று வழிந்தோடிய
நிலையில் எதிர்பாராத சந்திப்பு..
ஏக்கம் நிறைந்த என் உணர்வுகள்
ஏணிப்படியின் உச்சதில்..
வலிகள் வட்டமிட்டு கொண்டிருந்தன
அவன் கண்களிலும்...
பிரிவின் மெத்தையில் கண்ணயர்ந்திருந்த வார்த்தைகள்
அப்பொழுதும் தூங்கி கொண்டிருந்தன..
கண்கள் நான்கு மாத்திரம்
விழித்து கொண்டிருந்தன....
மெளன உரையாடல்கள் அரங்கேறி
கொண்டிருந்தன...
அதிலும் கேள்விகள் எல்லாம் என்னுடையது
புதிரான பதில்கள் எல்லாம்
அவனுடையது...
தருணத்திற்கேற்ற பட்டாசாய்
வானம் இடி இடிக்க ஆரம்பித்தது
தவளைகளின் இசைக்கச்சேரியின்
ஓசை கேட்டு மழைத்துளி நடனக்காரர்கள்
மண் மீது குதித்தனர்...
இயற்கையும் இதமாய் இருக்கையில்
கடின உள்ளம் கரைந்து விட்டதா?
என்ற ஏக்கத்துடனான என் பார்வை..
பிரிய முன் நான் பரிசளித்த அதே நாவல்
இன்னும் அவன் கையில் கடிவாளமிட்டிருப்பதை கண்டு கன்னியுள்ளம் களி கொண்டதை
அளந்திட கருவியில்லை...
அவன் உதடுகள் பேச மறுத்த போதிலும்
அவன் கண்கள் உண்மை பேசின..
அந்த நொடியை கடிகார முள்கொண்டு வேலியிட்டிட முடியாதா என என் கரங்கள் துடித்தன...
எழுத்தை தரகராய் கொண்டு
அவன் விரல் வடித்த குருஞ்செய்தி
தொலைபேசியினூடு குதித்து கொண்டு
வந்தது..
என் விரல்களுக்கும் கண்களுக்டையில்
மரதனோட்டம் பார்வையிடும் ஆவலில்..
ஆனால்..
.
.
.
.
.
.
கைகள் இரண்டு என் தோளில்
தலை நிமிர்ந்தேன்..
இறங்குமிடத்திற்கு இன்னும் இரண்டு நிமிடங்கள் என்ற அம்மாவின் குரலோசை..
விழித்திருந்த கண்கள் என் கனாவில்
என்பதனை புரிந்தவளாய்
தூக்கம் கலைத்தவளாய்
துக்கம் சுமந்தவளாய்
இறங்க தயாராகினேன்...