நாவலில் தொலைத்த நாட்கள்

மடியும் மலர்களுக்கும்
அந்தி மாலை பொழுதுக்குமிடையில்

மாநாடு நிகழும் நேரமது...
இரகசியமாய் அதனை இரசிப்பதற்காய்
இயற்கையின் காதலியாய்
என் வீட்டின் பின் முற்றத்தின்
மலர் வனத்தினை நோக்கி நகர்ந்தன
என் கால்கள்..கையில் தேநீர் குவளையுடன்...

மடியும் மலர்களின் அழுகை குரல்கள்
காதில் ஒலித்துக்கொண்டிருந்த போதும்
மலர் வனத்தின் நடுவில் இருந்த மேசை
மேல் நாவல் ஒன்று என்னை ஆவலாய்
பார்த்துகொண்டிருந்ததை
என்னால் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியவில்லை...

எனக்கு மிகப்பிடித்த எழுத்தாளர்
அவரின் எழுத்துக்கள் எனும் துரிகையால்
கற்பனை வர்ணப்பூச்சு கொண்டு ஓவியம் வரைந்த காகிதங்களின் தொகுப்பே..என்னை கவர்ந்திழுத்த
அந்த குறுநாவல்...

இருள் வானம் என்னை சூழ்ந்த போதும்
பக்கங்கள் பல புரட்டியவாறு
புதைந்து போனேன்
புத்தகம் எனும் புதையல் குழியில்...

என் வாசிப்பு வைபவத்திற்கு
ஒளி வீச பெளணர்மி நிலா வந்தது
புன்னகையுடன்...
அதன் அருகிலிருந்த நட்சத்திரங்களும்
கண் சிமிட்டியவாறு புகைப்படங்கள்
எடுத்தன..

கதையில் வந்த கதாப்பத்திரங்கள்
துணைக்கு என்னோடு இருந்ததால்
இருட்டின் பயம் கூட இதமாகத்தான்
இருந்தது இயற்கை காற்றோடு...

காலைக்கதிரவனின் கதிர்கள்
என் முதுகில் தட்டிய போது புத்தகத்தில்
மூழ்கியிருந் நானும் இறுதிப்பக்கங்களை
பூரணப்படுத்திய அடுத்த புத்தக தேடலை
தொடர்ந்தவாறு நகர்ந்தேன் வீட்டினுள்...!

எழுதியவர் : பாரிஜா (25-Sep-17, 7:59 pm)
பார்வை : 62

மேலே