பழுப்புப் பூனை

சிலர் அடியெடுத்து வைத்தபோதே
அகற்றி அடகு வைக்கப்பட்டதால்
கதவுகளின்றித் திறந்திருக்கிறது
தமிழக அரசியல் எனும்
தகரக் கொட்டகை!

சிவப்பு மற்றும் கருப்பின்
சீரற்ற கலவையால்
பழுப்பு நிறமேறிய
கொழுத்த பூனையொன்று
புலியாய் வேடமிட்டு
புகத் துடிக்கிறது
கொட்டகைக்குள்!

முன்னர் குடியிருந்த
முதலைகள் இரண்டு
முடங்கியும் அடங்கியும் போனதால்
ஒப்பனைப் பூனையது
கற்பனை பல சுமந்து
கர்ஜித்து நுழைகிறது
கதவில்லா கொட்டகைக்குள்!

கருப்பினுள் காவியுண்டா?
கடவுளுக்கே வெளிச்சம்
ஆனால் இப்பழுப்பினுள்
அழுக்கிருந்தால்
வெகு விரைவில்
பல்லிளிக்கும்!

வடக்கத்திய பெருச்சாளிகளை
வசதியாய் மறந்துவிட்டு
சுற்றியிருக்கும் சுண்டெலிகளை
சுலபமாய் வேட்டையாட
கணக்குப் போட்டு
காய் நகத்துகிறது
கருத்தாய் பேசும்
பழுப்புப் பூனை!

ஆட்சி பீடம் எனும்
அறுசுவை விருந்தடைய
ஊழல் எதிர்ப்பு எனும்
ஊருகாயை நம்பி
உற்சாகமாய் உள்நுழைகிறது
உலக நாயக உளறல் பூனை!

வகுப்புவாதப் புற்றுநோயது
தேசத்தின் தேகமெங்கிலும்
மோசமாய் மொய்த்திருக்க
ஊழலெனும் உள்ளங்கைப் புண்ணிற்கே
உடனடி சிகிச்சை வேண்டுமென
உரக்க முழங்கி நிற்கிறது
உறக்கம் கலைந்த
உதார் பூனை!

இடது வலது பேதமில்லையாம்
எவர்மீதும் குரோதமில்லையாம்
யாரோடும் மோதவில்லையாம்
தோற்றாலும் சேதமில்லையாம்!

ஒப்பனை வரவுகள்
ஒன்றும் இங்கு புதிதல்ல!
தப்புக் கணக்குகள்
தமிழகத்தில் அரிதல்ல!

ஏனெனில்.......

இங்கு தேர்தலில் நின்றவர்களை நம்பி
தெருவில் நின்றவர்கள் அதிகம்!

தமிழகத்தின் தலையெழுத்தை
தாராளமாய் இப்படிச் சொல்லலாம்....

"ஓட்டு கிடைக்காதவர்களைவிட
ஓட்டுப் போட்டவர்களே இங்கு
அதிகம் தோற்கிறார்கள்!"

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (27-Sep-17, 5:52 pm)
பார்வை : 105

மேலே