கண்ட நாள் முதலாய்-பகுதி-24
...கண்ட நாள் முதலாய்....
பகுதி : 24
அவனிற்கு முகத்தைக் காட்டாது கட்டிலில் திரும்பிப் படுத்தவளுக்கு கண்கள் அவளைக் கேட்காமலேயே கண்ணீர்த்துளிகளை பரிசளிக்கத் தொடங்கியது...எந்த பதிலும் சொல்லாமல் அவன் சென்றது அவள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது...அவன் கோபத்தைக் காட்டியிருந்தாலோ அல்லது வார்த்தைகளால் அவளைத் திட்டித் தீர்த்திருந்தால் கூட அவள் கவலைப்பட்டிருக்க மாட்டாள்...ஆனால் அவனது பாராமுகம் அவளை மிகவும் வேதனையடையச் செய்தது...மனம் அமைதியின்றி அலைகடலாய் கொதித்துக் கொண்டிருக்க...உறக்கமும் தொலைவாகிப் போக மௌனமாய் விழிநீரில் கரைந்து கொண்டிருந்தாள் துளசி...
இங்கே சோபாவில் வந்து படுத்துக் கொண்ட அரவிந்தனின் நிலைமையோ துளசியின் நிலையைக் காட்டிலும் மோசமாக இருந்தது...அவனது எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஓர் நொடியில் சரிந்து போனதில் அவன் உள்ளூர மிகவும் உடைந்து போயிருந்தான்..அவளின் காதலிற்காய் காத்திருந்தவனுக்கு...அவள் உதடுகள் உதிர்த்த வார்த்தைகள் அத்தனையும் அவன் நெஞ்சை அம்பாய் குத்திக்கிளறியது...அவளின் வார்த்தைகள் தந்த வலியில் எங்கே தன்னை அறியாமலேயே அவளைக் காயப்படுத்தி விடுவோமென்ற பயத்தில்தான் அவன் அவளிடம் எதையுமே பேசாமல் வந்து படுத்துக் கொண்டான்...அவனுக்கும் அந்த நொடி வார்த்தைகள் வெளிவர முடியாமல் தொண்டைக்குள்ளேயே சிக்கிக் கொண்டன...ஆனாலும் இறுதியாக அவள் தனக்கு சிறிது கால அவகாசம் தருமாறு கேட்டது அவன் மனதிற்குக் கொஞ்சம் ஆறுதலாகவே இருந்தது...அவள் தன்னை விட்டு விலகிவிட நினைக்கவில்லை...தன் மனதை மாற்றி தன்னோடு வாழ்ந்திடவே ஆசைப்படுகிறாள் என்ற நினைவே அவன் உள்ளத்தை லேசாக வருடிச் சென்றது...அந்த நினைவு மனதிற்களித்த இனிமையோடே அவளைத் திரும்பிப் பார்த்தான்....
அவள் கட்டிலின் ஓரமாய் தன்னை ஒருக்களித்து படுத்திருந்தாள்...அதைப் பார்த்ததும் எழுந்த குற்ற உணர்ச்சியில் தன்னை மறந்து அவளருகே சென்றவன்...போர்வையை எடுத்து போர்த்திவிட்டு அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான் அப்போது தான் அவள் கன்னத்தில் காய்ந்து போயிருந்த கண்ணீரின் தடயம் அவன் கண்களில் பட்டது... அதைக் கண்டதுமே அவனுள் எதுவென்றே சொல்ல முடியாத ஓர் வலி உருவாவதை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது...அவள் அழுதழுதே உறங்கிப் போயிருக்கிறாள் என்ற நினைவே அவனுள் வேதனையை ஏற்படுத்த குனிந்து அவள் கன்னத்தில் காய்ந்து போயிருந்த கண்ணீரை அவள் உறக்கம் கலையாதவாறு துடைத்து விட்டவன்...விளக்கை அணைத்துவிட்டு மீண்டும் சோபாவில் வந்து படுத்துக் கொண்டான்....
ஓரளவு அமைதி கொண்டிருந்த அவன் மனம் மீண்டும் வேதனைத் தீயில் எரியத் தொடங்கியது...கண்களை அணைக்க வேண்டிய தூக்கம் துயரத்தில் தொலைவாகிப் போக சிந்தைக்குள் ஏதேதோ எண்ணங்களில் சுழன்றடித்துக் கொண்டிருந்தவன் அவனை அறியாமலேயே உறங்கிப் போனான்...சாளரம் வழியே இவர்களை வேடிக்கை பார்க்க வந்த தென்றலும் அவர்களின் நிலை கண்டு வேதனையோடே திரும்பிப் போனது...அழகாக கழிய வேண்டிய அன்றைய இரவு இரு உள்ளங்களிற்கும் துயரத்தை மட்டுமே பரிசளித்து விடியலுக்காய் காத்திருக்கத் தொடங்கியது...சில மணிநேரங்களில் இரவின் காத்திருப்பு முற்றுப்பெற சூரியனின் தரிசனத்தில் விடியலும் உதயமாகியது....
முதலில் கண்விழித்துக் கொண்டது துளசிதான்...கட்டிலில் அமர்ந்தவாறே அறையை சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு முதலில் தான் எங்கிருக்கிறோம் என்பதே புரியவில்லை....சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தும் நினைவிற்கு வந்து உறைக்க..இரவு நடந்த அத்தனையையும் மீட்டிக் கொண்டு வந்தவளுக்கு தலையைப் பிடித்து யாரோ அழுத்துவது போல் இருந்தது...அப்படியே தலையைப் பிடித்தவாறே கட்டிலில் அமர்ந்திருந்தவள்..ஏதோ தோன்றியவளாய் அவனைத் திரும்பிப் பார்த்தாள்...அங்கே அந்த சோபாவில் கஸ்டப்பட்டு தன்னை அடக்கி படுத்திருந்தவனைப் பார்த்தவளுக்கு மேலும் தலைப்பாரம் அதிகமாகியது...
எப்போதும் அவன் முகத்தில் பூத்திருக்கும் புன்னகை இப்போது அவனிடத்தில் காணாமல் போயிருந்தது...உறக்கத்திலும் அவன் முகத்தில் படர்ந்திருந்த துயரத்தினை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது...அவனையே கண்களில் கண்ணீர் வழிய பார்த்துக் கொண்டிருந்தவள்...அவனில் சிறிது அசைவு தெரியவும் குளியறைக்குள் புகுந்து கொண்டாள்...
அவள் குளியலறைக்குள் செல்லவும் எழுந்து கொண்ட அரவிந்தனுக்கும் தலை வெடித்து விடும் போல்தான் இருந்தது...அப்படியே சோபாவில் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டவன்,அவள் குளியலறையைத் திறந்து வந்த சத்தத்தில் முழித்துக் கொண்டான்...அதில் சாய்ந்தவாறே கண்களைத் திறந்து அவளைப் பார்த்தவனின் கண்களில் மின்னலொன்று வந்து சென்றது...அதை அவளும் படம்பிடித்துக் கொள்ளத் தவறவில்லை...
பெரிய பெருமூச்சொன்றை வெளியிட்டவன்,அவளைக் கடந்து குளியலறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்...ஆனால் அவனைப் பார்த்த அவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது...அவன் அவனது மனக்கதவினையும் இறுக்கமாக பூட்டிக்கொண்டு விட்டான் என்பது...
கண்ணாடியின் முன் நின்று தலையைத் துவட்டத் தொடங்கியவளின் மனம் இனி அவனுடனான வாழ்க்கையை எவ்வாறு வாழப் போகிறோம் என்ற குழப்பத்தில் மாட்டிக் கொண்டு தவித்தது...அதே யோசனையில் முழ்கியிருந்தவள்,யாரோ தன்னைப் பார்ப்பது போன்ற உள்ளுணர்வில் தலையை நிமிர்த்திப் பார்த்தாள்...கண்ணாடி வழியே அவன்தான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்...
அப்போது தான் குளித்துவிட்டு வந்திருப்பான் போலும்...அவனது தலையிலிருந்து நீர்த்துளிகள் விழுந்து கொண்டிருந்தன...அதை பார்த்ததும் ஏனோ தெரியவில்லை துளசியின் கரங்கள் அவனது தலையினை துடைக்கும் ஆவலில் அவளது கட்டுப்பாட்டை மீறி அவளோடு முரண்படத் தொடங்கியது...மிகவும் கஸ்டப்பட்டு அதை அடக்கியவள்...கண்ணாடி வழியே மீண்டும் அவன் மீதான பார்வையை படரவிட்டாள்...எவ்வளவு நேரம் ஒருவர் விழிகளோடு விழி நோக்கி அப்படியே நின்றார்களோ தெரியவில்லை...அறையின் கதவினை யாரோ தட்டிய சத்தத்திலேயே இருவரும் சுய நினைவிற்கு வந்தார்கள்...
முதலில் தன்னை சுதாரித்துக் கொண்ட துளசி..கதவினைத் திறந்தாள்...அங்கே வெளியே அர்ச்சனாதான் இருவருக்குமான தேநீர் கோப்பைகளோடு காத்துக் கொண்டிருந்தாள்...
"குட் மார்னிங் அண்ணி...இந்தாங்க சுடச் சுட தேநீர்.."
"வெரி குட் மார்னிங் அர்ச்சனா...நானே வந்து போட்டிருப்பனே...உனக்கு எதுக்கு வீண் சிரமம்..."
"அண்ணி இதில என்ன இருக்கு...அதுமட்டுமில்லாம இந்த ஸ்பெஷல் கவனிப்பெல்லாம் இன்னைக்கு மட்டும்தான் ஆக்கும்...அப்புறம் நீங்கதான் என்னை கவனிச்சுக்கனும் சொல்லிட்டேன்..."என்று அவள் சொல்லி முடிக்கும் போதே அவளது காதை திருகத் தொடங்கியிருந்தான் அரவிந்தன்...
"அப்பிடீங்களா மேடம்...இந்த கவனிப்பு போதுமா...இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா...??"
"ஆஆஆஆ....விடுடா அண்ணா...வலிக்குது..."
"அந்த பயம் இருக்கட்டும்....பிழைச்சுப் போ..."
"வெவ்வெவ்வே..."என்று அவனுக்கு பழிப்புக் காட்டியவள்..,
"ஓகே அண்ணி எனக்கு கம்பஸ்க்கு நேரமாச்சு நான் கிளம்புறேன்...நீங்க உங்க ரொமான்ஸை கன்டினியூ பண்ணுங்க..."பாய்டா அண்ணா...
"ஆமா மா...சீக்கிரமா இடத்தைக் காலி பண்ணு...."
"இரு இரு உன்னை வந்து கவனிச்சுக்கிறேன்..."என்றவாறே அர்ச்சனா அங்கிருந்து கிளம்பிவிட...அரவிந் தன்னுடைய டீ கப்பை துளசியிடமிருந்து வாங்கியவாறு பல்கனி நோக்கி நகர்ந்தான்...
தொடரும்....