வரலாறு காணும் வண்டமிழ் நெஞ்சங்களே

யாரடா நீங்கள்?
எங்கிருந்து முளைத்தீர்கள்??
வரலாறு காணும்
வண்டமிழ் நெஞ்சங்களே!!!
உருண்டு கொண்டிருக்கும்
புவியின் எண்(ணில்லா) திக்கிலும்
தமிழரின் இனமானங்காக்க
புறப்பட்டு விட்டார்கள்- நம்
புரட்சிப் புதல்வர்கள்!!!
இவ்வுலகின் முதல்குடி தமிழ்க்குடி
வேளாண்மை ஒழுக்கத்தை இம்மண்ணிற்கு அறிமுகம் செய்த இனம் தமிழ் இனம்
கல்லோடும் மண்ணோடும்
கறவை இனத்தோடும்
புல்லோடும் பூண்டுவகை பலவினோடும்
போராடி போராடி
புதிது புதிதாய் உணவு படைத்து
உலகோர் உண்டு இன்புற்றிருக்க
துயில் கலைத்தவன் தமிழன்
உழுதுண்டு உழைப்பினால் உறவுகளோடு ஒன்றிப்பிணைந்து
எருதுகளோடும் காளைகளோடும்
ஏர் பிடித்தும் ஏறு தழுவியும்
உழைப்பால் வீரத்தை
வீரத்தால் உழைப்பை
மாறி மாறி வளர்த்தெடுத்தவர் நம்மவர்
இவ்வாறு வீரத்தை விளையச்செய்து
விளைச்சல் முடிவடைந்த நாள்களில்
வீரத்தை விளையாட்டாக்கி
விளைந்ததுதான் ஜல்லிக்கட்டு எனும்
வீர விளையாட்டு
தமிழனின் பாரம்பரியத்தை
பண்பாட்டு வேரோட்டங்களை
கலாச்சார சின்னங்களை
தொட நினைக்கும் எவ்வகை சக்தியையும்
தமிழன் எனும் ஒற்றை அடையாளத்தால்
வென்றெடுப்போம் என்ற செய்தி
நெற்றியடியாய் மற்றெல்லாருக்கும்
இந்நாள்களில் சென்று சேரட்டும்
நம் இளைய சமுதாயத்தின்
தியாக தீபத்தின் நெருப்பில்
எரிந்து ஒழியட்டும்
பாதியில் வந்து
நம்மோடு ஒட்டிக்கொண்ட
சாதிய அடையாளங்கள்.
தமிழ்-தமிழன்-தமிழினம்
தம்மை புதிதாய் செதுக்கிக்கொண்டு
புதுப்புனலாய் இப்பூமிக்கு
புதுவாழ்வு தரட்டும்
தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும்
வீர வணக்கம்!
- ஜான் பிரான்சிஸ்

எழுதியவர் : ஜான் பிரான்சிஸ் (4-Oct-17, 11:33 am)
பார்வை : 125

மேலே