முதல் காதல்

சூழ் கொண்ட மேகம்,
யாழ் மீட்டும் ஒருகானம்,
நீள் மட்டும் வானம்,
நாளும் காட்டும் புதுகோணம்!
முன் கண்ட இவ்வுலகம்,
முன் போல் ஒருபோதுமிரா.

பித்தம் ஏறி பிதற்றும்,
சித்தம் மாறி கிடற்றும்.

கால்அது தரையினில் நடப்பினும்,
மனமது வானிலே உலாவும் - விந்தையே!

கனவுகளை எல்லாம் குத்தகை கொண்டு,
நினைவுகளாய் வந்து ஒத்திகை பார்க்கும்.

நித்தம் நித்தம் தேய் பிறையாய்,
சித்தம் ஏங்கி உயிர் கறையும்.

ஊனினை மறந்து,
உயிரினுள் புகுந்து,
காற்றாகி கறைந்து,
காதலாகி நின்றதோ - மாயம்,
காதலாகி நின்றதே - இக்காயம்.

கண் சொல்லும் ஒருசேதி,
விழி உறிஞ்சும் உயிர்பாதி!

முகம் கவிழ்ந்த மொட்டினுள்,
முன் பார்த்திராத தென்றலால்,
விரிந்த முதல் இதழ் - முதல் காதல்

பின் குறிப்பு;
பூஞ்சோலையில் ஒரு மொட்டு மட்டும் பூப்பதில்லை.😜

முதல் காதல் என்றும் புதிது.
மீண்டும் மீண்டும் தோன்றினாலும் அது புதியதே!

ஆணினால் பெண்ணுக்கோ!
பெண்ணினால் ஆணுக்கோ மட்டும் உருவாவதல்ல!

மசக்கை கொண்ட மகளிர்
மாதமானால் எடுக்கும் முதல் வாந்தி - முதல் காதலே!

பிண்டம் ஒன்று கருவிலே
அண்டமான நாள் தொடக்கம் - முதல் காதலே!

உயிருக்குள் ஓர் உயிர்
வளர்தல் தாயிக்கும் சேயிக்கும் - முதல் காதலே!

கருவறை வாசம் கழிந்து
முதல் சுவாசம் மண்மேல்
சேயிக்கும் இயற்கைக்கும் - முதல் காதலே!

பல் ஏதுமின்றி
சொல் ஏதும்பேசா - முலைபால் அருந்த
உடலுக்கும் உணவுக்கும் - முதல் காதலே!

வெளி காணா உடலை
குளிர் வருத்தா காக்க
உடலுக்கும் உடைக்கும் - முதல் காதலே!

கட்டில் ஒன்றில் தாயிருக்க
தொட்டில் மீது சேய் உறங்க
உறைவிடத்துக்கும் வாழ்வுக்கும் - முதல் காதலே!

அடிப்படை தேவை தான் உயிரின் முதல் காதல்
மற்றவை எல்லாம் பிற.

வருமுன் இருந்த இடமறியோம்
வந்தபின் செல்லும் இடமறியோம்
இடையில் நாம் வாழவகை செய்த
ஈசனுக்கும் நமக்கும் தான் என்றும் - ஆதி முதல் காதலே!

எழுதியவர் : ஜித்து (9-Oct-17, 7:17 pm)
Tanglish : muthal kaadhal
பார்வை : 210

மேலே