படைத்தவன் விண்ணில் மறைபுகுந்தான்
படைத்தவன் விண்ணில் மறைபுகுந்தான்!
எண்சான் என்புதோல் தசைசேர் உடலுக்கு
ஏகப் பிரதானமாய் எல்லோர்க்கும் ஓர்சிரசு
அங்குசமாய் அகத்தின் ஆராய்வுச் சன்னலாய்
அனைத்து உயிர்களுக்கும் இருவிழிகள்தான் பரிசு
ஆர்ப்பு ஆகுலம் ஆவேசம் ஆதங்கம்
அங்கணமே ஒலிபெருக்கும் மதுரயிரு அதரங்கள்
ஆரோகணம் அவரோகணம் ஓலம் ஓங்காரம்
ஆகாரமாய் உட்கொள்ளும் அதிர்பறை இருசெவிகள்
சமர் புரிவதற்கும் சண்மார்க்கம் காத்தலுக்கும்
சேவையில் சேவிப்பதற்கும் ஐவிரல் இருகரங்கள்
சமதளமோ சரளைமேடுகளோ சளைக்காது கடக்கும்
சகலர்க்கும் சகடமாய் சக்கரமாய் ஈரடிகள்
கண்ணுதலாய் சமன்கொண்டு அத்தனையும் படைத்தவன்
வண்ணப் பிரிகையாய் எண்ணங்களை திரித்துவிட்டான்
மண்ணில் திரையிட்டு மனிதர்களை நடிக்கவிட்டான்
கண்ணுற்று கலக்கமுற்று விண்ணில் மறைபுகுந்தான்...!
கருத்து:
ஓரு தலை, இரு கண்கள், இரு செவிகள், இரு உதடுகள், இரு கைகள், ஈரடிகள் அனைவருக்கும் ஒன்றாய் படைத்த இறைவன் எண்ணங்களில் மட்டும் வேறுபடுத்தினான்.... அதனால் மனிதன் நடத்தும் நாடகங்கள் கண்டு கலங்கி விண்ணில் அடைக்கலம் புகுந்தான்.
கவிதாயினி அமுதா பொற்கொடி