காதல் பழக வா-34

காதல் பழக வா-34

காதல் உலகம் என் கையில்....
கை சேர்ந்தும் நெஞ்சில்
இன்பமில்லை...
என் ஜீவன் சுமந்த
என் நட்பே நான்
மணமகனாய் நிற்கையில் நீ ஏன்
என் உடனில்லை...

பாதி பாதியாய் பங்கு வைத்தோம்
சிரிப்பிலும் அழுகையிலும்
கூடி நின்றோம்...
நீ தவிக்கையில் இங்கோ நான்
தனித்து நிற்க
உன் காதல் பூவை
தேடி போனாய்...

இனிக்கும் நிமிடங்கள்
அனலாய் எனக்குள் யுத்தம் செய்ய
என் கருவிழி உனைமட்டும்
பார்த்திட சத்தமிட
மணமாலை என் கையை கட்டிப்போட
தீ மேல் பூவாய்
தவித்து நிற்கிறேன்....

காதலும் நட்பும் தானடா
என் வாழ்க்கை
காதலை அடைந்தவன் நான்
உன் மலர்ந்த முகம் காண
வெறித்து நிற்கிறேன்மணமேடையிலே
விரைவில் வந்து சேரடா......
"கண்ணா, ரெண்டு நாள் ஆச்சி, விடிஞ்சா ரிஷப்ஷன்...எனக்கென்னவோ மனசே கலக்கமா இருக்குப்பா, இத்தனை காலம் போய் இப்போ தான் என் பையன் கல்யாணம் பண்ணிக்கற முடிவு எடுத்துருக்கான், உனக்கே தெரியுமேப்பா, எனக்கும் அவன் அப்பாவுக்கும் அவனுக்கு நல்லபடியா கல்யாணத்தை பண்ணிவைக்கறத தவிர வேற எந்த லட்சியமும் இல்ல, ஆனா என்ன நேரமோ, இப்படி அவனையும் எங்களையும் அலைக்கழிக்குது...மதுவோட அப்பா சம்மதிக்கலனா, என் ராமோட நிலைமை...நினைச்சாலே மனசு பதறுதுப்பா, அப்புறம் அவனை தேத்தறது ரொம்ப கஷ்டம்"

"அம்மா நீங்க ஏன்மா இப்படிலாம் யோசிக்கறீங்க, மதுவோட அப்பா கண்டிப்பா சம்மதிப்பாரு, அப்படி இல்லனா மதுவை தூக்கிட்டு வந்தாவது ராமுக்கு கல்யாணம் பண்ணிவச்சிர மாட்டேன், என்னை நம்புங்கம்மா, அது மட்டும் இல்லை, ராம் பத்தியும் நம்ம எல்லாருக்குமே தெரியும், அவன் சொன்னா செய்வான், மது அவனோட வாழ்க்கை, விட்டுட்டு வர மாட்டான்ம்மா, நம்பிக்கையோட இருங்க, நல்லதே நடக்கும்"

ராமின் அம்மாவிற்கு தைரியம் சொன்னாலும் கண்ணனுக்கும் மனதிற்குள் கொஞ்சம் கலக்கம் இருக்கவே செய்தது, இத்தனை காலமும் ஒன்றாக உயிருக்குயிரான நண்பனாக பழகிய ராமின் வாழ்க்கையை நினைக்கும் போது கண்ணனுக்கு திக் என்று இருந்தது, மது இல்லையென்றால் நிச்சயம் ராம் வேறு பெண்ணை கல்யாணம் செய்ய யோசிக்க கூட மாட்டான், அப்படி இருக்க அவனை தனியாக இக்கட்டில் விட்டு விட்டு இங்கே தான் மட்டும் ரிஷப்ஷன் கொண்டாட கண்ணனுக்கு மனம் வரவில்லை, இருந்தாலும் ராம் சொன்ன ஒரே வார்த்தை தான் கண்ணன் மண்டபத்தில் இருக்க காரணம்...’மதுவோடு நான் வருவேன், உன் ரிஷப்ஷனில் எங்களுக்கு நிச்சயம் செய்துவைக்கவேண்டும்’ என்று ராம் உறுதிபட சொன்னது கண்ணனுக்கு நம்பிக்கையை தர கண்ணன் விடியலுக்காய் காத்திருந்தான்...

இரவு முழுவதும் அத்தனை பேர் மனமும் ராம் மதுவை பற்றியே குழம்பத்திலும் பதட்டத்திலும் இருக்க அந்த இரவு எந்த சலனும் இல்லாமல் கடந்து போனது...
"என்ன கண்ணா, இப்போ எங்க கிளம்பிட்ட, நாங்கல்லாம் மண்டபத்துல உட்கார்ந்துட்டு இருக்கோம், நீ என்னடானா மாப்பிள்ளையா லட்சணமா ரெடி ஆகறத விட்டுட்டு வெளிய கிளம்பற"

"பெரியம்மா, எனக்கென்னவோ மனசே கேட்கல, ராம் தனியா அங்க தவிச்சிட்டு இருப்பான், அத நினைச்சாலே கால் இங்க நிற்கமாட்டேனு அடம் பிடிக்குது, அவனோட போனும் சுவிட்ச் ஆப் ஆகி இருக்கு, என்னனு போய் பார்த்துட்டு வந்துடறேன், அவன் அங்க எதாவது பிரச்சனைல மாட்டிகிட்டானான்னு தெரியல"

"இங்க பாரு கண்ணா...ராம் மேல எங்க எல்லாருக்கும் பாசம் இருக்கு, ஆனா இந்த ரிஷப்ஷன் உனக்கும் ராதிக்கும் தான் நடக்குது,அதுக்கு தான் எல்லாரும் இங்க கூடி இருக்கோம், வெளிநாட்டுக்கு போன உன் அப்பா கூட இந்நேரம் இங்க தான் வந்துட்டு இருப்பாரு, எல்லாருமே உன் கல்யாணத்துல கலந்துக்க முடியலையேன்னு வருத்தப்பட்டோம், இப்போ ரிஷப்ஷன்ல அத தீர்த்துக்கலாமேன்னு பார்த்தா நீ இப்படி எல்லாத்தையும் விட்டுட்டு போறேன்னு சொல்ற, இன்னும் கொஞ்ச நேரத்துல உறவுகாரங்க எல்லாரும் வர போறாங்க, அவங்களுக்கு என்ன பதில் சொல்லி சமாளிக்கறது...எல்லாம் புரிஞ்ச நீயே இப்படி பண்ணலாமா, நம்ம பக்கம் சொந்தத்தை விடு,ராதி பத்தி யோசிச்சியா, உங்க கல்யாணத்துல இஷ்டமே இல்லாத அவங்க வீட்டாளுங்க கூட இப்போ சமாதானம் ஆகி அவங்க பக்க சொந்தத்தை எல்லாம் அழைச்சிருக்காங்க, அவங்க எல்லாரும் வந்தா என்ன சொல்ல சொல்ற, கண்ணன் அவன் பிரெண்ட் காதலை சேர்த்து வைக்க போயிருக்கான், அவங்கள கூட்டிட்டு வந்தா தான் ரிஷப்ஷன் நடக்கும்னு சொன்னா எல்லாரும் என்ன பேசுவாங்க, அந்த பொண்ணுக்கு தானே அது அவமானம், பையன் ரிஷப்ஷன் நேரத்துல கூட இப்டி இருக்கானு தப்பா பேசுவாங்கப்பா, சொன்னா புரிஞ்சிக்கோ, கண்டிப்பா ராம் வருவான், மதுவோட வருவான்....அவனை நம்பி முதல்ல போய் ரெடி ஆகு, ராம் போன்ல பேசிருந்தா கூட இத தான் சொல்லிருப்பான்...போ கண்ணா"

அதற்க்கு மேல் கண்ணனால் ஒன்னும் செய்ய முடியவில்லை, கடவுளை மனதில் வேண்டிக்கொண்டு ராதியோடு கைகோர்த்து நிற்க தன்னை தயார் செய்துகொள்ள போய்விட்டான்...
"என்ன ராதி கல்யாண பொண்ணு இப்படி சோகமா இருக்கலாமா, இன்னைக்கு நீதான் ஹீரோயின், நல்லா அழகா இருக்க வேண்டாமா"
"இங்க ரெண்டு பேரும் என்ன பேசிட்டு இருக்கீங்க, என்ன சொல்ற ராதி"
"மது இல்லாம, ராம் மதுவோட காதல் என்ன ஆச்சின்னு தெரியாம மனசு பதட்டமா இருக்கு, இதுல அழகா இருக்கறது தான் குறைச்சலா, எனக்கென்னவோ இந்த ரிஷப்ஷன்ல இஷ்டமே இல்ல"
"பெரியம்மா, நீங்களே இத கேளுங்க, அன்னிக்கு ராம், மது இல்லாம ரிஷப்ஷன்ல கலந்துக்கவே பிடிக்கலையாம் "
"அடுத்து ஆரம்பிச்சிட்டியா நீ…, இப்போ தான் கண்ணனை சமாதானம் பண்ணிட்டு வரேன்,அடுத்து உன்னைய சமாதானம் பண்ணனுமா, ரெண்டு பேரும் நல்லபடியா ரிஷப்ஷன்ல நடந்துக்கிட்டாலே போதும், மத்ததை பத்தி எதுவும் யோசிச்சிட்டு இருக்காத ராதி, உன் வாழ்க்கைல இந்த நாள் ரொம்ப விஷேசமானது, அதையும் இதையும் யோசிச்சிட்டு உன் சந்தோஷத்தை இழந்துடாத, சீக்கிரம் ரெடி ஆகுங்க....நான் மத்த ஏற்பாடுகளை கவனிக்கறேன்"
என்ன தான் அத்தனை பேரும் சமாதானம் சொன்னாலும் கண்ணனும் ராதியும் மனதளவில் ரொம்பவே சோர்ந்து இருக்க, அத்தனை விஷயங்களையும் போனில் கேட்டு தெரிந்துகொண்ட கண்ணனின் அப்பா வெளிநாட்டிலிருந்து மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்...

"என்னங்க வந்துட்டீங்களா, நீங்க இல்லாத நேரத்துல இங்க என்னென்னவோ நடந்து போச்சி"

"எல்லாம் தெரியும்மா, அண்ணா சொன்னாரு, அந்த கதையெல்லாம் அப்புறம் பேசிக்கலாம், நான் கண்ணனை போய் பார்த்துட்டு வரேன்"

கண்ணனை பார்த்தவரின் கண்கள் கலங்க அவனோடு தனியாக பேச வேண்டும் என்ற அவரின் எண்ணத்தை புரிந்துகொண்டவர்களாய் அங்கிருந்தவர்கள் நாகரீகமாய் மணமகன் அறையில் இருவரையும் தனியாக விட்டுவிட்டு வெளியேறினர்...

"கண்ணா, என்ன மன்னிச்சிருப்பா"

கையெடுத்து கும்பிட்டு சின்ன பிள்ளை போல் அழுத அப்பாவை பார்த்ததும் கண்ணனின் மனம் கரைந்தது, பல வருடங்களாக அப்பாவிற்கும் பிள்ளைக்கும் இடையில் இருந்த பனிப்போர் ஒரு முடிவிற்கு வர ஆரம்பித்தது...

"அப்பா, என்ன இது, எதுக்கு இப்படி மன்னிப்பெல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க, முதல்ல கைய இறக்குங்க, என்ன தர்மசங்கடப்படுத்தாதீங்க"

"இல்ல கண்ணா, இத்தனை நாள் நீ என்னால தான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இருந்த, உங்க அம்மா போகாத கோவில் இல்ல, வைக்காத வேண்டுதல் இல்ல..ஆனா அவளுக்கு தெரியுமா நான் சொன்ன ஒத்த வார்த்தை தான் உன்ன கல்யாணமே வேண்டாம்னு சொல்ல வச்சதுனு..எல்லாம் என் தப்பு தான், அன்னைக்கு உன்னோட உண்மையான அன்பையும் காதலையும் காமம்னு நினைச்சி அசிங்கமா பேசிட்டேன், நம்ம சொந்தகாரங்க பேச்சை கேட்டு உன்ன அப்படி பேசியிருக்க கூடாது, அது உன்ன எந்த அளவுக்கு காயப்படுத்திருந்தா இத்தனை நாள் கல்யாணமே வேண்டாம்னு சொல்லிருப்ப...எத்தனையோ நாளா உன்கிட்ட பேசணும்னு நினைச்சிருக்கேன், ஆனா என் முட்டாள்தனமான ஈகோ பேசவிடலைப்பா, என் பணம் கூட வேண்டாம்னு சுயமா உன் கால்ல நின்னப்பவே உன் மதிப்பை புரிஞ்சிக்கிட்டேன், நீ காதலிச்ச ராதியையே உன் மனைவி ஆக்கிட்டேன்னு தெரிஞ்சப்போ உன் உண்மையான காதலை புரிஞ்சிக்கிட்டேன், இதுக்குமேலயும் நான் மன்னிப்பு கேட்கலைன்னா நான் மனுஷன் இல்லப்பா..."

"அப்பா எல்லாத்தையும் விடுங்க, பழசெல்லாம் இப்போ எதுக்கு, ராதி எனக்கு மனைவி ஆகிட்டா, இதுக்குமேல என்ன வேணும் எனக்கு, நீங்க சொன்ன அந்த ஒருவார்த்தை தான் இவ்ளோ பெருசா நான் சாதிக்க காரணம், அந்த வயசுல காதல்னு சொன்னா எல்லாரும் அப்டி தான் நினைப்பாங்க, அப்பாவா கோபப்பட்டிங்க, இப்போ என்ன புரிஞ்சிக்கிட்டிங்க, இனி இந்த பழைய கதையெல்லாம் நினைக்காதீங்க, இத பத்தி யார்கிட்டயும் சொல்லவும் வேண்டாம்...இப்போ நீங்க போய் பிரெஷ் ஆகிட்டு வாங்க,போங்கப்பா"

"நீ என்ன மன்னிச்சிட்டே தானேப்பா"

"அப்பா, ப்ளீஸ் இந்த பேச்சே இனி வேண்டாம், இப்போ போறிங்களா இல்ல அம்மாவை கூப்பிடட்டுமா"

"உன் அம்மாவையா, அவ ஆதிகால புராணத்தை ஆரம்பிச்சுப்பாளே, நான் கிளம்பறேன்பா, உன் அம்மா வெடிகுண்டை மட்டும் கூப்டறாத"

அத்தோடு அப்பா மகன் உரசல் முடிய அவர்கள் உறவில் தொலைந்த சந்தோசம் திரும்பியிருந்தது....
ரிஷப்ஷனுக்கான நேரம் நெருங்கி கொண்டே போக, சொந்தங்கள் அத்தனை பேரும் வந்ததில் ரிஷப்ஷன் ஹால் கலகலப்பாக மாறியிருந்தது...

ஒருபக்கம் ராமின் வரவிற்க்கான எதிர்பார்ப்பு இருந்தாலும் விஷேஷ கொண்டாட்டம் அத்தனை பேர் முகத்திலும் வர ஆரம்பித்திருந்தது....

ரிஷப்ஷன் மேடைக்கு ராதியும், கண்ணனும் வரவழைக்கப்பட, இருவரும் செயற்கையான சிரிப்போடு உள்ளுக்குள் தவிப்புமாய் சொந்தங்களின் வாழ்த்துகளில் பட்டும் படாமலும் கலந்திருந்தனர்..

வந்தவர்கள் அத்தனை பேரும் வாழ்த்திவிட்டு பந்திக்கு போக ராமை எதிர்பார்த்து ஏமாந்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியும் சந்தோஷமும் கொடுக்க சிரித்த முகமாய் கைகோர்த்து ராமும் மதுவும் சேர்ந்தனர்...அவர்கள் வந்தபின் தான் அந்த மண்டபமே விஷேஷ கோலமாய் ஜொலித்தது.. அவர்களை பார்த்ததும் தான் கண்ணன், ராதிக்கு சிரிப்பே எட்டி பார்த்தது..
ராம் மது வரவால் முகம் மலர்ந்திருந்த அத்தனை பேருக்கும் அடுத்த நிமிடமே அதிர்ச்சி காத்திருந்தது...

எழுதியவர் : ராணிகோவிந் (13-Oct-17, 1:36 pm)
பார்வை : 489

மேலே