இளங்காலைப்பொழுது

கடல்குளித்த கதிரெழுந்து
கனிவுடனே விழிதிறக்க
கவினுறவே சிவந்திருக்கும்
கோலம் - அந்தச்
சுடரொளியில் இருள்விலக
சுகமான பரவசத்தில்
துயிலவிழ்ந்து மணந்திருக்கும்
ஞாலம் .... !!
விடைகொடுத்து மதியனுப்பி
விட்டுவந்த கதிரவனின்
மெல்ல எழும் எழில்கொஞ்சும்
தோற்றம் - அதன்
சடைவிரிய கீழ்வானில்
சாந்தமுகம் காண்பதற்கு
தவழ்ந்துவரும் முகிலலையின்
கூட்டம் .... !!
பொற்கிரண ஒளி உமிழ
பொங்கியெழும் வெள்ளலைகள்
புத்துணர்வில் மெல்லிசையை
மீட்டும் - அந்த
சொற்களில்லா இன்னிசையும்
சொக்கவைக்கும் இதயத்தைச்
சோர்வகற்றிச் சுகந்தன்னைக்
கூட்டும் .... !!
கரைதொட்டுக் கதைபேசிக்
கணநேரம் உறவாடிக்
காதலுடன் மீண்டுமுள்ளே
திரும்பும் - அந்த
நுரைபூக்கள் வாழ்வுசில
நொடியேதான் என்றாலும்
நுவளாமல் பயணத்தை
விரும்பும் !
தென்றலுடன் மிதந்துவரும்
செம்மலரின் மணமீர்க்க
செவ்வண்டு மதுவருந்தத்
துடிக்கும் ! - அந்த
இன்பத்தில் தனை மறந்தே
இசைபாடிப் பறந்துவந்து
இதழ்முத்த மிட்டுத்தேன்
குடிக்கும் !!
பச்சைவயல் வெளிதன்னில்
படர்ந்திருக்கும் புகைபோலே
பனிமூட்டம் கண்மறைக்கும்
காட்சி - அது
மிச்சமின்றி மெதுமெதுவாய்
விட்டகலும் காரணமே
வெய்யோனின் இளங்காலை
ஆட்சி .... !!
புல்லாக்கு போட்டதுபோல்
புல்நுனியில் பனித்துளிகள்
பூத்துநிற்கும் அசையாமல்
பாரீர் ! - அதை
வில்லம்பு ஏதுமின்றி
வெண்கதிரோன் பார்வையினால்
விரட்டிவிடும் சாகசத்தைக்
காணீர் ....!!
புன்னகையைப் பரிசளிக்கும்
புலர்காலைப் பொழுதினிலே
பூபாளம் செவியோரம்
ஒலிக்கும் - இது
அன்றாடம் நடந்தாலும்
அன்றதுதான் நிகழ்வதுபோல்
ஐம்புலனும் புத்துணர்வில்
களிக்கும் !
அம்மம்மா அழகதிலே
அகமுழுதும் லயித்திருக்கும்
அதனூடே உன் நினைவும்
மோதும் ! - உன்
தும்பைப்பூ சிரிப்பினிலே
துள்ளிவரும் பேச்சினிலே
தொலைந்துவிட்ட என் மனத்தைத்
தேடும் .... !!
மாஞ்சோலைக் கிளிகொஞ்ச
மையலிலே உடல்துள்ள
மௌனத்தில் மனம்கரையும்
காலை - மிக
வாஞ்சையுடன் கனவினிலே
வஞ்சமின்றி வளையவந்து
வார்த்துவிட்டாய் என்நெஞ்சில்
பாலை .... !!
சியாமளா ராஜசேகர்